Thursday 19 August 2021

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

 

கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. யார் கடவுள் என்றும், எதனை கடவுள் என்றும் சொல்ல வேண்டும் என்றும், முடிந்தால் நேரில் வர சொல், நேரில் பேச சொல், உணர செய் என்றும் நம்பிக்கையுள்ளவர்களை, நம்பிக்கையில்லாதவர்கள் கேலி செய்து கிண்டல் செய்வதும் கால காலமாக நடைமுறையில் இருக்கும் செயல்.

 

கடவுள் என்பதை பிரித்துப் பார்த்தோமேயானால், கட + வுள் என்று வருகிறது. கட என்பது கடந்து என்று அர்த்தம் ஆகிறது. வுள் என்பது உள்ளே என்று பொருளாகிறது, ஆக கடவுள் என்பது கடந்து உள்ளே பார் என்று பொருளாகிறது. இதை தான் இன்றைய தத்துவ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் (Psychologist). எண்ணங்கள் செம்மையானால் மற்ற அனைத்தும் செம்மையாகும், செழிப்பமாகும். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்ப்பு என்று தானே கேட்கிறீர்கள். சரியான கேள்வி.

 

கடவுள் என்பதை கட + வுள் என்று சொன்னேன் அல்லவா, கடந்து உள்ளே செல்லும் போது நாம் பல விஷயங்களை உணரமுடியும். மூச்சு காற்றின் போக்கினையும், உடலின் செயல்பாடுகளையும் உணர முடியும். ஆழ்ந்து நோக்கும் போது புற செயல்பாடுகளையும் உணர முடியும். பயிற்சியின் உச்சத்தில் புறத்தையும், அகத்தையும் கட்டுப் படுத்தும் பக்குவம் வந்தடைகிறது. இது எதுவும் சித்துவிளையாட்டு கிடையாது. எண்ணங்களின் வலிமையினை எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் உணர்த்தியுள்ளார்கள். விஞ்ஞானிகளால் இன்னும் எதிலிருந்து எப்படி எண்ணங்கள் உருவாகுகின்றன, அது எப்படி திரும்ப திரும்ப சொல்லும் போதோ அல்லது, நினைக்கும் போதோ, நம் செயல்பாடுகள் மாறுகின்றன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் சொலவது எல்லாம், மனம் வலிமையானது, எண்ணங்கள் வலிமையானது. இதை தான் நம் கவிஞர் கண்ணதாசன் அற்புதமாகச் சொன்னார், அனுபவம் தான் கடவுள் என்று எளிமையாக புரிந்துக் கொள்ள. அப்படியென்றால் கடவுள் என்று யாருமில்லையா? பொய்யான தோற்றமா என்றால்? நிச்சயமில்லை. ஒவ்வொருவருமே கடவுள் தான். ஆம். கடந்து உள்ளே பார்க்கும் போது, புற/அக த்தினை உணரும் போது, அவற்றை கட்டுப்படுத்தும் போது, எதற்கும் சலனமடையாமல், கலங்காமல், அமைதியாக, ஆழ்ந்து உணரும் திறன் கொண்ட அனைவரும் கடவுளே.

 

இது அனைவருக்கும் சாத்தியமா என்று கேட்டால், நிச்சயமில்லை. அப்படியென்றால், எல்லோரும் எல்லா நேரங்களில் கடவுளை காண முடியாதா? என்ன செய்வது, அவர்களும் ஒரு முகம் அடைய, அந்த உன்னதநிலை அடைய, அதற்கு விடையாக வந்தது தான் கோவில்களும், பிற ஆலய வழிபாடுகளும். மனிதனை ஒரு மிதப் படுத்தவும், ஓர் நிலை அடையவும், உன்னதநிலை அடைய செய்யவும். சிந்தனைகள் சிதறாமல், பலவற்றை எண்ணங்களில் போட்டு குழப்பாமல், முதலில் தோன்றியது தான் சூரிய வழிபாடு. ஆதி வழிபாடு என்று சொல்லப்படும் சூரிய வழிபாடு, மனிதனால் காண முடிந்த, காணக் கூடிய ஒன்று. அதன் பிறகு வந்தது அல்லது அந்த காலத்திலே வந்தது தான் நிலா வழிபாடு. சூரியனை பிரதானமாகச் சிலரும், நிலாவினை பிரதானமாகச் சிலரும் வழிபட்டு வந்தனர்.

 

மனிதனின் முதல் மற்றும் பிரதான எதிரியாக ஆரம்ப காலத்தில் இருந்தது மிருகங்கள். அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள கல் குகைகளிலும், பாறை கொண்டு அல்லது பாறைக்கடியிலும் தன்னை மறைத்துக் கொண்டான். பிறகு மரத்திலேறித் தன்னை காப்பாற்றிக் கொண்டான். பின்னர் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து தன் இருப்பினை உறுதிச் செய்து கொண்டான். அப்படி கூட்டம் கூட்டமாகப் பிரியும் போது அந்த அந்த கூட்டங்களை வழி நடத்த ஒரு தலைவன் உருவாகிறான். அப்படித் தோன்றிய கூட்டத் தலைவன் தன் எண்ணத்திற்கும், தான் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அனுபவம் கொண்டும், சூரிய வழிபாடு அல்லது சந்திர வழிபாடு என்று நிறம் பிரித்து வாழ ஆரம்பித்தான். முதலில் காடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும், பின்னர் வேட்டையாடியும், அவனின் பயணம் தொடர்ந்தது. இப்படித் தொடர்ந்த பயணத்தில், ஆரம்பத்தில் ஆராயப்படாத குறுகிய நிலப்பரப்பில் அவர்களுக்குள் பெரிய சண்டை வரவில்லை. போகப் போக அவர்களுக்குள் பேதம் வர முக்கிய காரணமானது உணவும், நீரும் தான். அப்போது தான் அவர்களின் தேடல் விரிந்தது. தேடல் பெரிதானது. எண்ணங்கள் விரிந்தது, பேதமும் விரிந்தது. நாகரீகம் வளர்ந்தது.

 

இப்படி வளர்ந்த நாகரீகத்தில், மனிதனின் தேடலைப் பொறுத்து ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒவ்வொரு மாதிரியான மனிதர்களும் அவர்களின் நம்பிக்கைகளும் வளர்ந்தது. அதில் எண்ணற்ற மனிதர்கள் தோன்றினார்கள், வழி நடத்தினார்கள். அவர்களை தலைவர்களாகவும், காலப் போக்கில் அவர்களே தங்களைக் காக்க வந்த உத்தம பிறப்புகள் என்றும் நம்பத் தோன்றினார்கள். அப்படி நம்பியவர்களை ஆரம்ப காலங்களில் கல் ஓவியங்களாகவும், மனற்சிற்பங்களாகவும், சிலைகளாகவும் வடிக்கத் தொடங்கினார்கள். சிலை வழிபாடு இப்படித் தான் தோன்றியது, தோன்றியிருக்க வேண்டும். மனிதன் தான் உணர்ந்ததை. தான் பார்த்ததை வடிவங்களாக வடித்து, அதன் மூலம் தன் நம்பிக்கையினைச் செம்மைப்படுத்தியிருக்க வேண்டும்.

 

இப்படி உருவான சிலைகளையும், சிற்பங்களையும் ஏதோ பாறைகளில் வடிவமைப்பதோடு இல்லாமல், அதற்கு என்று பிரத்தேயகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அதில் நிறுவத்தொடங்கினான். பொதுவாக கருதப்பட்ட சூரியன், நிலா போன்றவற்றையும், அதற்கும் வடிவம் கொடுத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தான். நிச்சயமாக உறுதியிட்டுச் சொல்ல முடியும் ஆரம்பத்தில் ஜாதி அல்லது மதம் என்று பெயரில் பாகுபாடு கிடையாது, ஆனால் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாடு இருந்திருக்கும், இருந்திருந்தால் மட்டுமே பிற்காலத்தில் இப்படியொரு பாகுபாடு ஏற்பட காரணமாயிருக்கும்.. நிற்க

 

சரி, சிலை வந்தது, சிற்பம் வந்தது, கோவில், ஆலயம், வழிபாட்டுத் தலங்கள் என எல்லாம் தோன்றின, அதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள், வாருங்கள் பார்க்கலாம்….

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...