Tuesday 31 January 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 4


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது.

இதில் நாம் ஒரு சில தெளிவுரைகளிலிருந்து அவர்களின் ஆக்கத்தினை அப்படியே பார்ப்போம் அதன் பிறகு நாம் அந்த மூலத்தின் அடிபிறழாமல் அந்த கருத்து மாறாமல் அதன் வழி எளிய முறையில் எப்படி பகவான் பார்த்தனுக்கு எளிய முறையில் எண்ணற்ற கருத்துகளைச் சொல்லியிருக்கிறான் என்று பின் வரும் பாகங்களில் பார்ப்போம்.

முதலில் நம் ஆதிசங்கரரின் ஸ்ரீமத் பகவத் பாகவத்திலிருந்து அவர் மொழியில் சொல்லப்பட்ட கருத்துகளின் சாராம்சம்..ஸ்ரீமத் பகவத் பாகவத்தின் மூலம் மாறாமல் அப்படியே திரு.மகாதேவ சாஸ்திரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில் இருந்து நாம் பார்ப்போம்.

”The aim of this famous Gita Sastra is, briefly, the Supreme Bliss, a complete cessation of Samsara or transmigratory life and of its cause. This accrues from that Religion (Dharma) which consists in a steady devotion to the knowledge of the Self, preceded by the reunciation of all the works. So, with reference to this Religion, the doctrine of the Gita, the Lord says is the Anu-Gita as follows:- "That religion, indeed, is quite sufficient for the realisation of the state of Brahman, the Absolute" (Asv.Parva xvi.12). In the same place it is also said "He is without merit and without sin, without weal and woe - he who is absorbed in the one seat, silent and thinking nothing". And he also says: "Knowledge is characterised by reunciation"

மேலும் அவரின் உரையில் “ The Gita Sastra expounds this twofold Religion (Dharma & Karma),whose aim is the Supreme Bliss. Thus the Gita Sastra treats of a specific subject with a specific object and bears a specific relation(to the subject and object). A knowledge of its teaching leads to the realisation of all human aspirations."

இதன் தமிழாக்கம் செய்யப்பட முயற்சிக்கவில்லை. இது எளிதாகவும், புரிந்து கொள்ளும் தன்மையுடன் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதன் சாராம்சம் மற்றும் சொல்ல வந்த கருத்து மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையில் இதனை தமிழாக்கம் செய்யவில்லை.

அடுத்து தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் மொழியில்

“ஹே கிருஷ்ண கருணஸிந்தோ தீனபந்தோ  ஜகத்பதே
 கோபேச கோபிகா காந்த ராதா காந்த நமோஸ்துதே”

என்று முதலில் தன் குருமார்களையும் பின் தன் ஆச்சார்யர்களையும் வணங்கிவிட்டு, பின்னர் கிருஷ்ணரை இவ்வாறு வணங்கி தன் உரையினை ஆரம்பிக்கிறார். அதாவது என்னருமை கிருஷ்ணா, படைப்பின் மூலமும், பரிதவிப்பவர் நண்பனும் நீயே, கோபிகளின் நாயகனும், ராதாராணியின் நேசனும் நீயே, உனக்கு எனது வணக்கங்கள் என்று வணங்கி ஆரம்பிக்கிறார்.

”பகவத் கீதை என்றால் என்ன? பௌதிக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும் எனக் கூறுகிறார். மேலும் அர்ஜூனன் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே பௌதிக இருப்பால் துன்பம் மிகுந்திருக்கின்றோம், நமது நிலையே நிலையற்ற தன்மையால் நாம் அச்சுறுத்தப்படக் கூடியவர்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனல் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். “அஸத்” என்பது இல்லாததைக் குறிக்கின்றது” என்கிறார்.

மேலும் அவர் தன் விளக்கவுரையில், “துன்பப்படும் பற்பல மனிதர்களுக்குள், ஒரு சிலரே தங்கள் நிலையைப் பற்றியும், தாங்கள் யாவர். இது போன்ற விரும்பத்தகாத சூழ்நிலையில் தாங்கள் வைக்கப்படக் காரணம் யாது, என்பன போன்றவற்றைப் பற்றியும் ஆராய்வார்கள். தனது துன்பத்தை வினவும் இந்நிலைக்கு எழுப்பப்படாவிடில், தனக்குத் துயர் வேண்டாம்- துயருக்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று உணராதவரை, ஒருவன் பக்குவமான மனிதன் என்று கருதப்படுவதில்லை. ஒருவன் மனதில் இவ்விதமான ஆராய்ச்சி எழும் நிலையிலேயே மனிதத்தன்மை துவங்குகின்றது. “ப்ரஹ்ம சூத்திரத்தில்” இந்த ஆய்வு, “ப்ரஹ்ம ஜிகஞாஸ” என்றழைக்கப்படுகின்றது. பூரணத்தில் இயற்கையை ஆயும் வரை மனிதனின் ஒவ்வோர் செயலும் தோல்வியாகவே கருதப்படுகின்றன. எனவே தாங்கள் ஏன் துன்புறுகிறோம் என்று வினவத் துவங்குபவர்களும், எங்கிருந்து வந்தோம், மரணத்திற்குப் பின் எங்கு செல்வோம் என்று ஆய்பவர்களுமே, பகவத்கீதையை பயிலத்தகுந்த மாணவர்களாவர்” என்று அழகாக கூறுகிறார்.

அடுத்து ஸ்ரீமத் சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் “வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன, மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதஙகளைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால், பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரடியாக பாலைப் பெற்றுக் கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை” என்று எளிமையாக தனது தொடக்கவுரையில் விளக்குகிறார்.

மேலும் அவர் ஸ்ரீமத்பகவத் கீதை ஏன் போர்களத்தில் புகட்டப்பட்டது என்று சொல்லும் போது “பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம், எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டு போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாத மக்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் வேண்டுமென்று தாயிடம் பிள்ளை அழுது பெறுகிறது. அது ஒரு விதப் போராட்டம். ஒரு வேலையில் அமர்தம் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகின்றான், அதுவும் போராட்டமே.... சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்று போராட்டத்திற்கு மனிதன் தகுதியுடையவன் ஆக வேண்டும்” என்று ஸ்ரீமத்பகவத் கீதை வியாக்கியானத்தில் அழகாகச் சொல்லுகிறார்.

அடுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ஸ்ரீமத்பகவத் கீதை எனும் நூலின் முகவுரையிலிருந்து “ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் அதன் பெருமையை விளக்கும் முத்திரை உள்ளது. “இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபநிஷதஸு ப்ரஹ்மவிதயாயாம யோகசாஸ்த்ரே ஸ்ரீகிருஷ்ணார்ஜுன ஸம்வாதே” என்று வேதத்தின் சிரத்தில் உள்ளது தான் உபநிஷத்து எனப்படுவது. ஆனால் கீதைக்கும் அந்த உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்படுகிறது....  இது பிரம்மவித்தையாகவும் தலை சிறந்த யோக சாஸ்திரமாயும் ஜீவாத்ம பரமாத்ம ஸம்பாஷ்ணையாயும் விளங்குகின்றது” என்று அழகாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பகவானை அன்புடன் வழிபடுவோர் அவர் அளிக்கும் ஞானக்கண் கொண்டு அர்ஜூனன் விசுவரூபத்தை தரிசித்தாற் போல அவருடைய திருவுருவைக் காணுதல் கூடும். எனது உண்மையான ஸ்வரூபத்தைப் பக்தி ஒன்றினால் தான் அறியலாம். அங்ஙனம் அறிந்தவன் விரைவில் என்னுடன் ஒன்றுபடுகிறான் என்று கூறுகிறார் பகவான்.

பக்த்யா மாமபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத:
ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே ததனந்தரம்.

இப்படி யாகமும் யோகமும் சித்தி பெற்றால் அதுவே தியாகம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “கீதா, கீதா” என்று தொடர்ச்சியாகச் சொன்னால் “தாகீ, தாகீ” அல்லது “தியாகீ, தியாகீ” என்று வரும், தியாகியாயிருப்பது தான் கீதையின் முடிவான உபதேசம் என்பார்” என்று அழகாகச் சொல்கிறார் கீதையின் சாராம்சத்தை.

எண்ணற்ற மகான்கள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.

அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. நாளை கவிஞர்கள் பாரதியார், கண்ணதாசன், துளசி, கிருஷ்ணா போன்றோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு நம் எளியவுரையின் தொடக்கத்தினை நாளை மறுநாளிலிருந்து ஆரம்பிப்போம்.

Sunday 22 January 2012

சுகமான சுமைகள் - பாகம் 2 (பெண்)


பெண்ணே!
உன் படைப்பில் தான்
உலகம் தினம் துளிர்கிறது
உன் உன்னதத்தில் மலர்கிறது....


நீ சோர்ந்து போனால்
உலகம் வாடி போகும் பார்த்திருக்கிறாயா
தினம் மலரும் மலர்
மலராவிட்டால் பூஞ்சோலை ஏது...


பெண்ணே!
நீ ஆனந்த கண்ணீரிட்டால்
மழையாய் பூமி ரசிக்கிறது
நீ அழுது கலங்கும் போது
சுனாமி பேரலைகளால் 
உன் கண்ணீரினைத் துடைக்கிறது பூமி...


பெண்ணே!
உன் கோபக் கனல் தானே
கதிரவன் அக்னிநட்சத்திரமாய் எரிக்கிறான்
உன் மிளிரூட்டும் பார்வையில் தானே
நிலா குளிர்கிறது மனதோடு...


பெண்ணே!
ஒப்பீடு வெறும் வார்த்தை அல்ல
ஒப்பீடு உணர்வுகளின் குவியல்கள்...


பெண்ணே!
உன்னை ஒப்பிட்டு உலகம் ரசிக்கிறது
உன்னை மட்டுமே ஒப்பீட முடிகிறது
உலகில் அனைத்திற்கும் - ஆம்
உலகின் அற்புதம் நீ
உலகின் ஆனந்தம் நீ..

சுகமான சுமைகள் - பாகம் 1 (பெண்)


பெண்ணே!
சுமப்பதால் சுமை என்றாயோ - இல்லை
சுமந்ததால் சுமை என்றாயோ...

சுமை சுமப்பதில் இல்லை தெரியுமா
சுமை எண்ணத்தில் இருக்கிறதாம்
சுமை தத்துவம் விஞ்ஞானம் சொல்கிறது...

சுமை தூக்கும் உழைப்பாளியும்
சுமை தூக்கும் கழுதையும்
சுமையான பழுதூக்கும் வீரனும்
சுமை தூக்குவது எளிதாக பயிற்சியில்
சுமை தூக்கலாம் எண்ணத்தின் வலிமையில்...

சுமையல்ல தோழியே!
சுமக்கிறதாம் எறும்பு 800 மடங்கு
தன் உடலின் எடையை விட
அது தெரியுமா?

பெண் ஓர் உன்னதம்
சுமப்பதால் தாயாகிறாள்
சுமந்ததை உயிர்ப்பிப்பதால் கடவுளாகிறாள்...

பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உனை நீயே கழுதையாக்காதே...

பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உன் சிசுவை நீயே பொதியாக்காதே!

பெண்ணே!
படைப்பின் உன்னதம் நீ
பெட்டையாக்கி பேதைக் கொள்ளாதே...

பெண்ணே!
உலகின் உயிர்துடிப்பு நீ
உலகின் உயிர்நாடி நீ
நன்றாக இதயத்தில் கேட்டுப்பார்

தென்றல் காற்றினை மொழியாக்கி
உன் பெயர் சொல்லி மகிழ்கிறது...

அலையின் சத்தம்
அம்மா என சொல்லி
உனைத் தேடி வருகிறது தெரியுமா?

நீர் வீழ்ச்சியும், நீரோடை நீரும்
காற்றின் அசைவில் இலைகளும்
ரீங்காரமிடும் வண்டுகளும்
பெண்ணே!
அம்மா என அழகாச் சொல்கிறதே
அறியாயோ நீயும்
கேட்டுப்பார் இதயத்தோடு ஒவ்வொருமுறையும்...

உலகின் உன்னதம் பெண்
உலகின் நிரந்தர தத்துவம் பெண்...

Saturday 21 January 2012

ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 3


ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 3

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் மூன்றாம் பாகத்தை தொடர்வோமா

ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். பிறகு கர்மம் என்றால் என்ன என்றும், ஆளுமைக்கு உட்படாதது எதுவுமே பௌதிக இயற்கையில் இல்லை என்றும், குணங்களின் வகைகள் என்னவென்றும் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக

இந்த பௌதிக இயற்கையில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் இங்கேயே தோன்றி இங்கேயே முடிவதை நாம் காண்கிறோம் அல்லவா, உதாரணமாக ஒரு பழம் எடுத்துக்கொண்டோமேயானால் அது இங்கேயேத் தோன்றி அது இங்கேயே அழுகி அது இங்கேயே தன்னை முடிவுக்கு கொண்டு வருகிறது, அப்படிப்பட்ட இந்த நிச்சயமற்ற உலகிற்கு அப்பால் “சநாதனம்” என்று அழைக்கப்படும் நித்தியமான வேறு ஒரு இயற்கையை உடைய ஒரு உலகம் விவரிக்கிறது. இதையே ஸ்ரீராமானூஜாச்சாரியார் ஆரம்பமும் முடிவும் அற்றது என்று சொல்கிறார். இதை எப்படி சொல்வது என்றால் நெருப்பில் இருந்து எப்படி வெம்மையினைப் பிரிக்க முடியாதோ அல்லது நீரிலிருந்து திரவத்தன்மையினைப் பிரிக்க முடியாதோ அது போல் ஒவ்வொரு ஜீவன்களுக்கும் சநாதன தர்மமானது நித்தியமாய் ஜீவனுடன் இணைந்திருக்கிறது. அது என்னவென்று எளிமையாக பார்ப்போமேயானால் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தர்மம் வகுக்கப்பட்டிருக்கிறது அதாவது ஒரு நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

அது எப்படி என்றால் ஒரு நிறுவனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதில் ஒருவன் முதலாளி என்றும், பிறர் வேலை செய்யும் ஊழியர்கள் என்றும் இன்னும் பிறர் அதோடு வர்த்தகம் செய்வோர் என்றும் இன்னும் பிறர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றும் இருக்கிறார்கள். ஆக ஒருவனின் நியதி அல்லது தர்மம் மற்றவனைச் சார்ந்து வருகிறது. இன்னும் எளிமையாக விளக்க முயன்றால் ஒரு வீட்டில் சமையல் செய்யப்படுகிறது. அதைச் செய்யும் மனைவி அதை ஒரு ஆத்ம திருப்தியுடன், பரிபூரண சந்தோசத்துடன் செய்யாமல் இருக்கும் போது அந்த உணவே தோஷமாகி விடுகிறது. அதுவே அந்த மனைவி சந்தோஷத்துடன், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உணவளித்து உபசரித்து, தன் வீட்டில் உள்ள அனைவரும் உண்டபின் அவள் உட்கொள்ளும் போது அந்த உணவு பிரசாதமாகி அந்த வீட்டிலே சுபிட்ஷம் உண்டாகிறது. எல்லையற்ற மகிழ்ச்சி திளைக்கிறது. ஆக நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் யாகம் செய்து கொண்டு தான் இருக்கிறோம், எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். வெறும் நெருப்பினை வளர்ப்பதும் அதுவே ஆத்ம திருப்தியுடன் வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நமக்கு புரியும் போது நமது வாழ்வு அர்த்தமாகிறது.

சரி, நாம் சநாதன தர்மம் என்றால் என்னவென்று பார்த்தோம். ஜீவாத்மாக்களின் வாழி என்று பகவான் சொல்லுகிறார் அதையும் எளிமையாக பகவானே விளக்குகிறார் ஸ்ரீமத்பகவத்கீதையில், பதினைந்தாம் அத்தியாயத்தில் பௌதிக உலகின் உண்மைச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வமூலமத: ஸாகமஸ் வத்தம் ப்ராஹுரவ்யயம் |
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேதஸ வேதவித் || 15- 1||

இந்த பௌதிக உலகம் வேர்களை மேலும் கிளைகளைக் கீழும் கொண்ட மரமாக வர்ணிக்கப்படுகிறது. அது எப்படி, ஒரு நீர்த்தேக்கத்தில் மரத்தினைப் பார்க்கும் போது மரங்கள் தலைகீழாக நிற்பதைக் காணலாம், அதன் கிளைகள் கீழே செல்ல, வேர்கள் மேல் நோக்கி இருக்கின்றன. ஆன்மீக உலகின் பிரதிபலிப்பேயாகும். இவ்வுலகம் உண்மையின் நிழலே, நிழலின் உண்மையோ, ஆதாரமோ இல்லை. ஆனால் நிழலிருந்து பொருளையும் அதன் உண்மையையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா. அதையும் பகவானே எளிமையாக விளக்குகிறார்.

நிர்மாநமோஹா ஜிதஸங்க தோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த் வைர்விமுக்தா: ஸுகது: கஸம்ஜ்ஞைர்கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் || 15- 5||

சரி நாம் எப்படி இந்த் ஆன்மீக உலகினை அடைவது என்பதற்கு தான் பகவான் இந்த விளக்கத்தைச் சொல்கிறார். ஒருவன் தலைவனாகவும், ஒருவன் நிலப்பிரபுவாகவும், ஒருவன் பணக்காரனாகவும், ஒருவன் பிரதமராகவும், ஒருவன் அமைச்சனாகவும் இப்படி ஏதோ ஒரு உயர் நிலையினை அடைய ஒவ்வொரும் பெற விரும்புகின்றனர். நிலையற்ற இந்த உடலின் மீது பற்றுக் கொண்டு அந்த உடலின் இச்சையினைத் தீர்க்க தங்களது கடமைகளிலிருந்து விடுபட்டு அவர்கள் கட்டுப்பாடற்ற ஆசையில் துடிக்கிறான், அப்படி இந்த உடல் மீது உள்ள விருப்பினை விட்டு அந்த பரபிரும்மம் நோக்கி அவன் தன் கடமைகளைச் செய்வானாயின் அவன் எளிதாக ஆன்மீக உலகினை அடையலாம் என்று கூறுகிறான்.

அதற்கு அர்ஜூனன், மதுசூதனா! என்னால் இந்த யோக நிலைக்கு வரமுடியாது, மனம் நிலையற்றது, அமைதியற்றதாக இருக்கிறது என்று சொல்கிறான். இதை தான் நாம் ஒவ்வொருவரின் மன நிலைமையும் கூட, அதற்கும் கண்ணன் எளிமையாக விளக்கம் சொல்கிறான்.

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா|
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​: ||6-47||

பார்த்தா!, இந்த யோக நிலை வெகு எளிது, ஆத்மார்த்தமாக பிரம்ம சேவையில் ஈடுபடும் போது இந்த யோகம் நிலை அடைகிறார்கள். அதாவது ஒவ்வொரு செயலிலும் தான் என்ற அகந்தையினை விட்டு, அந்த பரபிரம்மத்தின் பொருட்டே என்று விட்டுவிட்டு, எந்த செயலிலும், மனதிலும் ஆத்மார்த்தமாக அந்த பரபிரும்மமை நோக்கும் போது இந்த யோக நிலை வந்து விடும் என்று சொல்கிறார். உண்மை தானே, தான் தனக்கு என்று ஒரு செயல் செய்து அதன் பிரதிபலன் பார்த்து ஏமாறும் போதும், சந்தோசம் அடையும் போது அது தற்காலிகம் என்பதை நாம் எப்போது உணரபோகிறோம். அந்த உணர்வு வரும் போது அந்த சந்தோசம், துக்கம் இரண்டும் சமமாகி விடுகிறது அல்லவா.

இறுதியாக, கண் பார்வை இழந்த திருதுராஷ்ட்ரர் துக்க நிலையில் இருக்கிறார், போர் நடக்கிறது, அந்த யுத்த களத்தில் என்ன நடக்கிறதோ என்று பரிதவித்து இருக்கிறார், அப்போது வேதவியாசர் தனது அதீத சக்தியால் திருதுராஷ்டரரே உமக்கு ஞான கண் தருகிறேன் என்று சொல்கிறார், அதற்கு திருதுராஷ்டரர், எனக்கு வேண்டாம், வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்ல அப்படி சஞ்சயன் எனும் மதிநுட்பமான அமைச்சனுக்கு கொடுக்க அவர் தன் ஞானக் கண்ணால் யுத்தக் களத்தில் நடைபெறும் காட்சிகளை விவரிப்பதாக ஆரம்பமாகிறது இந்த ஸ்ரீமத்பகவத் கீதை. ஒவ்வொரு காட்சியாய் விளக்கி கொண்டு வருகிறார். யுத்த களம் ஜனக்கூட்டத்தில் நிறைந்திருக்கிறது, ஒரு பக்கம் பாண்டவர்களும் மறுபக்கம் கௌரவர்களும் இருக்கிறார்கள். அப்போது கண்ணன் தனது பஞ்சசன்யம் எனும் சங்கு எடுத்து ஊத, பார்த்தன் தேவதத்யம் எனும் சங்கு எடுத்து ஊத, போர் ஆரம்பமாகும் அறிகுறி தெரிகிறது. அந்நேரத்தில் போர்களத்தில் நடுவில் வந்த ரதத்தின் இருந்து அர்ஜூனன் எதிர்திசையில் நிற்கும் தன் உற்றார் உறவினர்களைப் பார்த்து தான் போர் புரியமாட்டேன் என்று கண் கலங்கி கண்ணனிடம் கூறுகிறான். அப்போது கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துரைக்கு ஞான உபதேசம் தான் இந்த ஸ்ரீமத்பகவத்கீதை.

சரி, இவ்வளவு பெரிய ஸ்ரீமத்பகவத்கீதை 700 ஸ்லோகங்களும், 18 அத்தியாயங்களும், முதல் ஆறு கருமத்தைப் பயனில் பற்றின்றி பிரம்மார்ப்பணமாக செய்யும் மார்க்கமும், நடு ஆறு அத்தியாயங்களில் பக்தி மார்க்கமும் கடைசி ஆறு அத்தியாயங்களில் ஞான மார்க்கமும் கூறும் வரை போர் களத்தில் அனைவரும் சும்மா இருந்தார்களா எனும் ஒரு கேள்வி எழும், அதற்கும் விளக்கம் இருக்கிறது.

சஞ்சயன் ஒவ்வொரு காட்சியினை விளக்கி கொண்டு வரும் போது பார்த்தன் போர் புரியாமல் தேரில் சாய்ந்து விட்டான் என்றும், கண்ணன் அவனுக்கு உபதேசம் சொல்கிறான் என்றும் சொல்கிறார். அப்போது, யுத்தத்தின் தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறது அங்கே, சங்கு ஊதிய போதும், கொடி அசையாததால் போர் தொடங்காமல் இருக்கிறது. அது தான் யுத்த தர்மம், சங்கு ஊதி, கொடி அசைத்து இருவரும் ஒத்து போர் தொடங்கலாம் என்று சொல்லும் போது தான் போர் முறையாகத் தொடங்குகிறது. அது வரை இருவரும் காத்திருக்க வேண்டும். இந்த யுத்த முறை இன்றும் கடைபிடிக்கப்படுவதை காணலாம் செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் செல்லும் போர்களங்களின் பாதையில் செல்லும் போது யாரும் அதை தாக்க கூடாது என்பது யுத்த தர்மம். அப்படி யுத்த தர்மம் மீறப்படும் போது அதன் விளைவுகள் அவர்களே அவதிபடும் போது உணரமுடிகிறது.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.

அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. நாளை ஆச்சார்யர்கள் மற்றும் குருமார்கள் சொல்லும் விளக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம் பிறகு
கவிஞர்கள், அறிஞர்களின் விளக்கத்தினைப் பார்த்துவிட்டு நாம் எளியவுரைக்கு செல்வோம்.

Thursday 19 January 2012

ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 2


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது


பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய
உரையின் இரண்டாம் பாகத்தை தொடர்வோமா

ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது

என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். அதன்

தொடர்ச்சியாக

அர்ஜூனன் ஜீவாத்மாவுக்குப் பிரதிநிதி: கிருஷ்ணன் பரமாத்மா.. ஸ்ரீமத் பகவத் கீதை என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள்.

இந்த உரையாடல்கள் உயிருட்டமுள்ள நல்ல தகவல்களை அந்த பரம்பொருளே சொல்லும் பாங்கில் அமைந்தது தான் ஸ்ரீமத் பகவத்கீதை.

எப்படியென்றால் பாரதப்போரில் அர்ஜூனனுக்குச் சாரதியாக மட்டும் கண்ணன் இல்லை, அந்த பரம்பொருளின் கீழ் தாழ்படிபவர்களுக்கு அனைவருக்குமே அவன் சாரதி தான். சரீரமே தேர், இந்திரியங்களே குதிரைகள், ஸம்ஸார வாழ்க்கையே யுத்தம்.

வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறக்கும் போது அதை மீண்டும் நிறுவவே முக்கியமாக பகவான் அவதாரம் நிகழ்கிறது. அர்ஜூனன் அனைத்து கலைகளையும் தேர்ந்த ஒரு ஜீவாத்மா, ஆனால் உலகத்தாருக்கு இந்த அருமையான கீதை சொல்லப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில், அர்ஜூனன் போர்களத்தில் தடுமாறுவது போலவும் அதன் மூலம் பரம்பொருள் இந்த கீதாஉபதேசம் செய்கிறார். இதுவும் அந்த மலைமூர்த்தி கண்ணன் போட்ட அற்புதமான ஒரு திட்டம். சில நேரங்களில் சிறார்களுக்கு புரியவைக்க நாம் இத்தகைய செயல்கள் ஈடுபடுவதை உணரலாம். ஆம் நாம் அனைவருமே அந்த பரம்பொருளை உள்ளத்தில் வைத்திருக்கும் ஜீவாத்மாக்கள் தான். நாம் அதனை உணரும் வரை இந்த கலியுகத்தில் நடைபெறும் செயல்களில் உழல்வதை தவிர வேறு வழியில்லை.

ஸ்ரீமத் பகவத்கீதையில் ஐந்து ஆதார உண்மைகளை உள்ளடக்கி மனிதன் வாழ்க்கை லட்சியத்தினைப் பக்குவப்படுத்திக் கொள்ள பல வழிமுறைகள்
சொல்லப்பட்டுள்ளன. ஈஸ்வரன் எனும் ஆள்பவரும், ஜீவன்கள் எனும்
ஆளப்படுபவர்களும் இருக்கின்றனர். உலகில் ஜனித்த அனைத்துக்குமே தாங்கள் ஆளப்படுபவர்களே என்ற உண்மை நிலையினை உணர வேண்டும். எவன் ஒருவன் தன்னை தானே பெரிதுப்படுத்தி, தனக்கு தானே நிகர் என்றும், தன்னை ஆள யாரும் இல்லை என்று நினைக்கிறானோ அப்போதே அவன் அந்த நிகரற்ற இன்பத்தில் இருந்து விடுபட்டு துன்பத்தில் பயணிக்கத் தொடங்குகிறான்.

ப்ரக்ருதி (அகிலம்) (பௌதிக இயற்கை), காலம் (பௌதிக இயற்கையின் தோற்றம் அல்லது இவ்வகிலமுழுதின் நிலைப்புக் காலம்), கர்மம் (செயல்) இவையாவும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பகவத்கீதையின் பின் அத்தியாயங்களில் விளக்கப்படுவதைப் போல் பிரபஞ்ச விவகாரங்களிலும், பௌதிக இயற்கையிலும் இறைவனுக்கு உயர் அதிகாரம் உண்டு. பௌதிக இயற்கை சுதந்திரமானது அல்ல என்றும் இந்த ப்ரக்ருதி தன் ஆணைக்கு கீழ் இயங்குகின்றது என்றும் உணர்த்துகிறார் கிருஷ்னர். இதன் மூலம் ஒரு உண்மை புலப்படுகிறது, ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்கவே முடியாது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஏழாம் அத்தியாயத்தில் ஐந்தாம் பதத்தில் இது தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளது.  “அப்ரேயம் இதஸ்த்வன்யாம்”, இந்த ப்ரக்ருதி, எனது
கீழ்நிலை இயற்கையாகும். “ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்”, அதாவது இந்த ப்ரக்ருதிக்குப் பிறகு வேறு ஒரு ப்ரக்ருதி இருக்கிறது ஜீவபூதம் - உயிர்வாழி (ஜீவாத்மா) என்று சொல்லுகிறார்.

ஒருவன் ஒரு வணிகம் செய்கின்றான் என்றால் அவன் அதில் லாபம் வரும் போது சந்தோசமடைகிறான் அதே நேரம் அதில் நஷ்டம் வரும் போது
வருத்தமடைகின்றான், இரண்டுமே அவன் செயல்கள் தான் அந்த இரண்டில்
அவனே சந்தோசமடைவதும், துக்கமடைவதும் செய்கிறான். அவன் செயல்களுக்கு ஏற்ப அவன் நிலை பாவிக்கப்படுகிறது. அதாவது அவன் செயல்கள் அவனை வழிநடத்துகிறது. இதுவே கர்மம் என்றுச் சொல்லப்படுகிறது. கர்மம் என்றால் செயல். ஒருவன் என்ன விதைக்கிறானோ அதுவே அவன் அறுவடை செய்ய முடியும். நல்ல விதை விதைத்து அவன் உழும் செயல் பொறுத்து அவனது அறுவடை அமைகிறது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஈஸ்வரன் (பரமபுருஷன்), ஜீவன் (உயிர்வாழி), ப்ரக்ருதி
(இயற்கை), நித்தியமான காலம், கர்மம் (செயல்) ஆகிய ஐந்தையும் பற்றி அழகாக விவரித்துக் கூறுகிறது. கர்மம் தவிர மீதமுள்ள நான்கும் நிலையானதாகும், ஆனால் கர்மம் நிலையற்றதாகும்.

இந்த பௌதிக இயற்கை பகவானிடமிருந்து பிரிந்த சக்தியாகும். நித்தியமான உறவு கொண்டவை. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் துன்புறவோ, இன்புறவோ, செய்கிறோம். ஆனால் நமது செயல்கள் அல்லது கர்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும், நமது அறிவின் பக்குவத்தைப் பொறுத்து இது அமைகிறது. இது அழகாக பகவத்கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. அதையும் வரும் வாரங்களில் நாம் பார்க்கலாம்.

இந்த பௌதிக இயற்கையானது மூன்று குணங்களால் அமைந்ததாகும் அவை
நற்குணம், தீவிரக் குணம், அறியாமைக் குணம் என்பன ஆகும், அதாவது ஸத்வ, ரஜோ, தமோ குணங்களாகும். அதைப் பற்றிய விவரங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

உடல் சம்பந்தமான கருத்துக்களிலிருந்து ஒருவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜூனன் அந்த உடலின் மேல் பற்றுக்கொண்டு தன் முன்னால் நிற்கும் கௌரவர்களைப் பார்த்து அவர்கள் உறவுமுறையாகிவிட்டனரே அவர்களை நாம் எப்படி எதிர்ப்பது, எவ்வாறு போரிட்டு கொல்லுவது என்று நிலை தடுமாறி இருக்கும் போது

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா தேஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||

யதா தேஹிந: = எப்படி ஆத்மாவுக்கு
அஸ்மிந் தேஹே = இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா = பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும்
ததா தேஹாந்தரப்ராப்தி = அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீ⁴ர தத்ர ந முஹ்யதி = தீரன் அதில் கலங்கமாட்டான்

இந்த ஆத்மாவுக்கு இவ்வுடலில் எப்படி இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அவ்வாறே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. ஒரு வீரன் அதை நினைத்து கலங்ககூடாது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மற்றொரு பகுதியினை மறுப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல, ஏனெனில் ஒன்றைச் சார்ந்தே மற்றொன்று விவரிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அர்ஜீனன் கண்ணனை குருவாக ஏற்றுக்கொண்டு கண்ணனையே பரபிரம்மாக ஏற்று அவர் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். “கரிஷ்யே வசனம் தவ” உங்கள் வாக்குப்படி நான் செயல்படுகிறேன் என்றும் சொல்கிறான்.

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.


அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. ஸநாதன வெளி என்றால் என்ன?
2. ஸ்ரீராமானுஜாசாரியர் ஸநாதன வெளி பற்றி என்ன சொல்கிறார்?
3. கிருஷ்ணர் என்றால் என்ன?
4. கீதையில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன, எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

Wednesday 18 January 2012

பகவத் கீதை - பாகம் 1

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.


என்று தொழுது


பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையினைத் தொடங்குவோம்..


எண்ணற்ற அறிஞர்களாலும், அவதார புருஷர்களாலும் எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிமையான மற்றும் அதன் மூலப் பொருளினை உணரும் ஒரு முயற்சி தான் இந்த பதிவின் நோக்கம்.


ஸ்ரீ சங்கராச்சாரியார், மகா பெரியவர் தனது கீதா பாஷ்யத்தின் முகவரையில் “ஸமஸ்த - வேதார்த்த ஸார - ஸங்க்ரஹபூதம” என இதைக் கூறியுள்ளார். இது ஏதோ இந்துக்களின் எந்த ஒரு வகுப்பினருடையதும் அன்று. எல்லோருக்கும், எல்லாவித மனிதர்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்ட ஒரு அறநெறியாகும். 


பகவத்கீதை எனும் இந்த யோக முறை முதன் முதலில் சூரியதேவனுக்கு சொல்லப்பட்டது பின்னர் சூரியதேவன் அதை மனுவுக்கும், மனு இசஷ்வாகுவுக்கும் விளக்கியதாகவும் கண்ணன் அர்ஜூனனிடம் சொல்கிறார். இவ்விதமாக ஒருவர் பின் ஒருவராக சீடர் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப் போக்கில் மறைந்துவிட்டதால் குருட்சேத்திரப் போர்களத்தில் இப்போது அர்ஜூனனுக்கு உபதேசிக்க வேண்டிவந்தது என்றும் சொல்கிறார்.


ஆம் இந்த ஸ்ரீமத் பகவத் கீதை என்ன சொல்கிறது. பிற நூல்களுக்கும், காப்பியங்களுக்கும், காவியங்களுக்கும் இல்லாத பெருமை ஏன் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வந்தது என்று யோசித்தீர்களேயானால், அது மிக எளிது. 


ஸ்ரீமத் பகவத் கீதை என்பது, பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறான், அவன் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும், தன்னுடைய செயல்கள் அத்தனையும் தோல்விகளில் முடிகிறது என்றும் அச்சுறுகிறான், மேலும் அவன் தனக்கு போல் வேறு எவரும் இத்தகைய சூழ்நிலை அனுபவிப்பதில்லை என்றும் நினைத்து கதறி அழுகிறான். அந்த சூழ்நிலையில் தனக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி தன்னை வழி நடத்திச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கிறான். இத்தகைய துன்பம் என்பதில் உழல்வது, மழைக்காக மண் எப்படி காத்து இருக்குமோ அது போல் ஆகும். மழை வந்ததும் மண் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, அழகாக அதில் விதைக்கப்பட்டுள்ள விதையினை விருட்சமாக்க முயல்கிறது. அது போல தான் அர்ஜூனன் குருட்சேத்திரப் போர்களத்தில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போர் புரிய தயாராக இருக்கும் கௌரவர்களைப் பார்த்து நிலை குலைந்து போனான். தன்னால் போர் புரிய இயலாது என்று தேரிலே சாய்ந்து உட்கார்ந்து விடுகிறான். இந்த சூழ்நிலையில் தான் மதுசூதணன் கண்ணன் வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்கிறான். அதுவே கீதா உபதேசம் ஆகும். 


இதனை எளிமையாகச் சொல்லவேண்டுமேயானால் துன்பம் என்னும் வாயில் வழியாகத் தான் ஞானமாகிற அரண்மனையில் பிரவேசிக்க முடியும் என்று அமைகிறது ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம்.


இது ஏதோ போர்களத்தில் அர்ஜூனனுக்கு சொல்லப்பட்ட ஒரு கருத்தாக எண்ணாமல் அதன் உள்ளிருக்கும் ஆழ்ந்த கருத்துகளை நாம் நோக்க வேண்டும். பகவானுடைய சொல்லிற்குச் செவிசாய்க்கும் ஒவ்வொருவருக்கும் கேட்கும் ஒலி இது. துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் புத்துயிர் அளிக்கும் மந்திரம் இது. “உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராபய வரான் நிபோதத” என்பது ஆகும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பலனை எய்துகிறான். இதில் கீதையின் முழு ரகசியமும் ஆழ்ந்து உறைகிறது என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 


சுருங்கச் சொன்னால் எவன் ஒருவன் ஆசையினைப் பின்தொடர்ந்து செல்கிறானோ அவன் தன் வாழ்வில் நிச்சயம் சிற்றின்பத்தில் லயித்து பேரின்பத்தினை கோட்டை விட்டு விடுகிறான். 


பகவத் கீதை “கீதோபநிஷத்” என்றும் அறியப்படும், வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷதமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். இந்த ஸ்ரீமத் பகவத்கீதை என்பதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் குறைந்த பட்சம் தத்துவரீதியாக ஸ்ரீகிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடக்கமான நிலையில் நம்மால் ஸ்ரீமத் பகவத்கீதையைப் புரிந்து கொள்ள இயலும். ஸ்ரீமத் பகவத்கீதை ஆழ்ந்த புதிரானதால் அடக்கமான நிலையில் பயின்றாலன்றி புரிந்துகொள்ளுதல் மிகக் கடினமாகும். 


மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.


அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:


1. ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்க முடியுமா?


2. பௌதிக இயற்கை என்றால் என்ன?


3. மூன்று குணங்கள் என்ன என்ன?


4. கர்மம் என்றால் என்ன? ஸ்ரீமத் பகவத்கீதையில் இதற்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

Monday 16 January 2012

திருமணம் பாகம் - 3


விருப்பம் யாதென கேட்டேன் அவர்களிடம்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றான்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றாள்
விருப்பம் இரண்டாய் போனதால் விரும்பவில்லையோ...

விருப்பம் தனித்து ஒருவனுக்கோ ஒருவளுக்கோ
விருப்பம் சேர்ந்தே வரும் சிலநேரம்
விருப்பம் வரும் தன்னாலே ஆசையினால்
விருப்பம் விரும்புதலின் ஆரம்பம் சிலருக்கு...

விருப்பம் பிரிவுகளின் ஆரம்பம் பலருக்கு
விருப்பம் யாதெனில் விரும்புதலும் அடைதலும்
விருப்பம் நிறைவேற தியாகங்கள் வேண்டும்
விருப்பம் நிறைவேற சிலபல வேண்டும்...

விருப்பம் அடைதலில் இருந்தால் விரும்புமோ
விருப்பம் அடையா விட்டால் வெறுக்குமோ
விருப்பம் உதட்டோடு கொள்ளாமல் உளதோடு
விருப்பம் இருப்பின் எண்ணம் எளிதாகும்...

விருப்பம் அடைதலின் இன்பமே விட்டுக்கொடுத்தல்
விருப்பம் இருவரில் ஒருவரின் விருப்பம்
விருப்பத்தோடு விட்டுக் கொடுங்கள் விரும்பியவர்க்கு
விருப்பம் நிறைவேறும் விட்டுக்கொடுத்தவருக்கு தன்னாலே..

திருமணம் பாகம் - 2


ஒத்த வில்லை மனமென்றால் ஒன்றாக
ஒத்தாத மனங்கள் இணைந்தென்ன லாபம்
ஒத்த வில்லை உளமென்றால் ஒன்றாக
ஒத்தாத உளங்களில் உயிர்ப்புகள் இல்லை...

ஒத்து வாழ்தல் பெரும் திட்டமல்ல
ஒத்து போதல் பெரும் பாடுமல்ல
ஒத்து செல்லுதல் பெரும் கடினமல்ல
ஒத்து இருத்தல் விட்டுக் கொடுத்தலே...

ஒத்த கருத்துகளை மிஞ்ச போவதில்லை
ஒத்தாத கருத்துகள் விஞ்ச போவதில்லை
ஒத்தும் ஒத்தாதவைகள் கெஞ்சும் சிலநேரம்
ஒத்த மனதை நஞ்சாக்கும் பலநேரம்...

ஒத்து போதல் விட்டுக் கொடுத்தலே
ஒத்து போங்கள் விருப்ப மிருந்தால்
ஒத்து இருங்கள் சுய மிருந்தால்
ஒத்து ஒத்திருங்கள் தனிமை பாதிக்காமல்...

திருமணம் பாகம் - 1


ஒன்றாய் தான் பிறந்தோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
ஒன்றாய் காலம் இருந்தது
ஒவ்வொன்றாய் இருந்த நாம்...

ஒன்றோடு ஒன்று பற்று வைத்தோம் சிலர்
ஒன்றோடு ஒன்று மோகம் கொண்டோம் சிலர்
ஒன்றை கடத்த முயன்றோம் ஒன்றாகி
ஒன்றில் முடியாததை இரண்டில் முயற்சித்தோம்....

ஒன்றில் ஒன்றி போயினர் சிலர்
ஒன்றில் ஒன்றைத் தேடினர் சிலர்
ஒன்றை வைத்து ஒன்றைத்தேடினர் சிலர்
ஒன்றுக்காக ஒன்றாய் தேடினர் சிலர்..

ஒன்றில் ஒன்று சேர்ந்து இரண்டானது
ஒன்றில் சேர்ந்ததால் பல உருவாயின அந்த
ஒன்றில் தானே உலகமே லயித்திருக்கு
ஒன்றுக்காகத் தானே உலகமே இயங்கியிருக்கு...

இரண்டில் மனம் போராடும் வேரோடு
இரண்டில் மனம் துடிக்கும் உயிரோடு
இரண்டில் மனம் சிதையும் உணர்வோடு ஆனால்
இரண்டில் மட்டுமே உலகம் இயங்கும்....

இரண்டில் இருவர் இல்லை ஒத்த மனமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உளமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உயிரே
இரண்டில் இருவர் இல்லை யோசியுங்கள்...

ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ!!!!

தண்டாய் தாமரை மலர் போல்மேனி
நீண்டாய் காதல் கொண்டு அதனால்
வண்டாய் மலர் மாலை சுற்றி
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

கண்டாள் காதல னாய் கண்ணனை
செண்டாய் மலர்மாலை தனை சூடி
கொண்டாள் காதல் மோக மிட்டு
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வேண்டி விரும்பி யிருந்தன ளோ
ஈண்ட பிறவியின் பயன் பெறவோ
அண்ட மறிய விரத மிருந்தாளோ
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வண்டாடும் மலர் சோலைப் போல
திண்டாடும் மனதெல்லாம் பாகன் நினைப்பாலே
கொண்டாடும் நிரலெ ல்லாம் உயிர்த்தாளே
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

அண்டிட காதல் அவன் பாலே
வெண்டிட காதல் அவன் மேலே
நவிண்டிட பாவையும் காதல் மொழியாலே
ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ

Tuesday 10 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 5 (கடைசி பாகம்)

செட்டி யாரென்று வரலாறு பார்த்தால்
செட்டு என்றால் வணிகம் என்றும்
செட்டு என்றால் சிக்கனம் என்றும்
செப்பினவோ பழம் பாடல்கள் நிறையாக…

சாத்தனாய் முதல் மூன்று நூற்றாண்டுகள்
சாத்தன் எனப் பெயரிட்டனரோ வணிகரை
சாத்தன் மருவி தேசியெனப் பெயரிட்டனரோ
சான்றாய் பாடல்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில்…

எட்டியாய் மருவினரோ பாண்டிய காலத்தில்
எட்டியெ ன்றால் வணிகமும் கப்பலோடு
எட்டாத தூரமெல்லாம் எட்டிப் பார்த்தனரோ
எட்டாத பொருளெல்லாம் ஈட்டி மகிழ்ந்தனரோ…

பொருள் கொடுத்து பொருள் வாங்கி
பொருளாய் பர்மா தேக்குகள் கதவுகளுக்கோ
பொருளாய் பெல்ஜியம் கண்ணாடிகள் பார்த்திடவோ
பொருளாய் பிரெஞ்சு பீங்கான் சாமான்களோ…

வீணாய் பொருள் வாரி யிடார்
வீணாய் பொருள் வாங்கி யிடார்
வீழும் உடம்பு உள்ள வரை
வீழாது இவர் கொடை உலகமெல்லாம்…

ஆண் மகவு பிறந்திட்டால் ஒருபுள்ளி
ஆண் புள்ளி கணக்கிட்டால் இவருலகம்
ஆதி பகவன் ஆலய பணி
ஆதரவாய் செய்திடுவர் ஆர்வமாய் இருந்திடுவர்…

செட்டிநாடு பரப்பளவோ 657 சதுரமைல்கள்
செட்டியார் சேவையோ உலக மெல்லாம்
செட்டிநாடு குலமரபு கோவில்கள் ஒன்பதாம்
செட்டியார்கள் தொழுதிடுவர் மரபு வழியெல்லாம்..

செட்டிநாடு கிராமங்களோ எழுப்பத்திறாய் குறைந்தனவாம்
செட்டிநாடு கிராமங்கள் மாறினவோ நகரமாய்
செட்டிநாடு அமைந்தனவோ கீழைக் கடற்கரையில்
செட்டிநாடு சொல்லிடுமோ பல கதையெல்லாம்…

செட்டிநாடு வாருங்கள் ஆலயங்கள் கண்டிடலாம்
செட்டிநாடு வாருங்கள் உபசரிப்பில் மகிழ்ந்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் உணவுகளை ருசித்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் தொன்மையில் மயங்கிடலாம்

செட்டிநாடு நோக்கி வாருங்கள் தோழமைகளே!!!!

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 4


மணியாகிப் போச்சு மதியமும் முடிஞ்சது
மதிய உணவே உண்ட மயக்கம்
மணிக்கணக்கில் கிறங்கி அடிச்சதே ஆச்சி
மதியம் முடிந்தது மாலை வந்ததே...

மாலை என்னவேணும் ஆச்சி பட்டியிலிட
மனோலம் மாவுருண்டை எடுத்து வரட்டுமா
மசாலா சீயத்தோடு இனிப்புசீயமும் தரட்டுமா
மகிழம் புட்டோடு அரிசிபுட்டு தரட்டுமா...

கவுனிஅரிசி தட்டுல வச்சு தரட்டுமா
கந்தரப்பம் கல்கண்டு வடையோடு தரட்டுமா
கருப்பட்டி பணியாரம் செஞ்சு தரட்டுமா
கனிந்து உருகவைக்கும் கொழுக்கட்டை தரட்டுமா...

அதிரசம் சுட்டு தட்டோடு தரட்டுமா
அப்பமோடு தேங்குழல் வெச்சு தரட்டுமா
அல்வா கோதுமையில செஞ்சு தரட்டுமா
அல்வா பீட்ரூட்லயா கேரட்டுல வேணுமா..

இது எல்லாம் சாப்பிட நாளாகும்
இதுக்கு அப்புறம் சாப்பிட மாளாது
இதுவே போதுமுன்னு கவுனி அரிசியோடு
இடைப்பலகாரம் சீடையும் சீப்பு சீடையுமே...

ஏழு அடிக்க ஓயல கடிகாரமுமே
ஏழு மணிக்கே ஆச்சி கேட்டாக
ஏழாகிப் போச்சு தம்பு என்னவேணும்
ஏழுதானே ஆச்சு என்றேன் ஆச்சியிடம்...

இரவு பலகாரம் என்ன வேணும்
இடியாப்பம் தேங்காய் பாலோடு வேணுமா
இடியாப்பம் தாழிச்சு தரட்டுமா சட்னியோடு
இட்லி மெதுவாக அவிச்சு தரட்டுமா...

கல்தோசை இரண்டு வச்சு தரட்டுமா
கல்கண்டு சாதம் செஞ்சு தரட்டுமா
கதம்ப சட்னியோடு இளந்தோசை தரட்டுமா
கலந்த அவியலோடு அடை தரட்டுமா

ஊத்தப்பம் வேணுமா கார சட்னியோடு
ஊரின் பெயர் சொல்லும் சமையலிலே
ஊர் விட்டு வந்த என்னை
ஊறித் திளைத்து மலைத்துப் போனேன்..

இரவு எட்டாகிப் போச்சு உணவோடு
இரவு உணவாக இட்லியோடு சட்னியும்
இனிப்பு கல்கண்டு சாதமும் சேர்ந்து
இனிதாக கனிந்தது முதல் நாள்...

இன்னும் தொடரும் - கடைசி பாகம்
(செட்டிநாடு பற்றி, (புள்ளி)விவரம்)

Monday 9 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 3 (உணவு பழக்க வழக்கம்)

மெதுமெது இட்லியோடு கதம்ப சட்னியுமா
மெத்மெத்தென்று பணியாரத்தோடு மிளகாய் சட்னியுமா
மெதுவான வடையோடு தேங்காய் சட்னியுமா
மெருதுவாய் சாப்பிட காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இலையோடு இடியாப்பம் கோஸ்மல்லி துணையுமா
இனிக்கும் தேங்காய்பாலோடு இடியாப்பம் செய்யட்டுமா
இடிச்ச அரிசியோடு குழாபுட்டு வேணுமா
இனிப்பு உக்காரையும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இனிப்பு பணியாரம் கார பணியாரமா
இதுக்கு துணையாக இடிச்சமிளகாய் சட்னியுமா
இளந்தோசை முருகலாக நாலைந்து தரட்டுமா
இதுல எதுவேணும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

காலபலகாரம் மெதுஇட்லியோடு மிளகாய் சட்னியுமாய்
காலமெல்லாம் நினைத்திருப்பேன் ருசியோடு சுவையுமே

மதியம் வந்துடும் மறுபடியும் ஆச்சி பட்டியலிட
மதியம் என்ன வேணும் முழுநீளப் பட்டியலிட
மதியம் அரிசி சோறும் பதமாய் கதம்ப சாம்பாரும்
மல்லி ரசமும் மிளகு காரகுழம்பும் வேணுமா

அரிசி சோறு தனியாக வெண்மையிலே
அரைச்ச புளிமிளகாய் புளியோதரை வேணுமா
அரிஞ்ச தேங்காய்பூவோடு தேங்காய்சாதம் வேணுமா
அள்ள அள்ளதூண்டும் பிரியாணி வேணுமா

இளங்குழம்பு வேணுமா பருப்புருண்டை குழம்பா
இஞ்சி மிளகாய் சேர்த்த புளிகுழம்பா
இளஞ்சூட்டில் வறுப்பட்ட கார கத்திரிக்காயா
இலையின் ஓரம்வைக்க வாழைக்காய் வறுவலா

உருளையோடு கேரட்டும் பட்டானி பிரட்டலா
உருண்டை குழம்புக்கு முட்டைக்கோஸ் துவட்டலா
உமிழ்நீர் கீழேவிழும் வெண்டைக்காய் புளிமண்டியா
உருளை வறுவலா ஆவக்காய் ஊறுகாயா

தயிரும் உண்டு கரைத்த மோருமுண்டு
தலைவாழ இலைநிரம்ப வெஞ்சனம் செய்யட்டுமா
தனக்கு வமையி ல்லாத தரணியிலே
தனிச் சமையல் செட்டிநாடு பாணியிலே

இளநீர் பாயாசமா நுங்கு பாயாசமா
இதுக் கெல்லாம் முன்னாடி சூப்வேணுமா
இது முடிச்ச பின்னாடி பீடாவேணுமா
இத்தனையும் கேட்டே பசி போச்சு
இன்னும் வாய்விட்டு அகலலையே சுவையாச்சி...

இன்னும் தொடரும் - இரவு டிபன் மற்றும் சொல்லாடல்கள்

Sunday 8 January 2012

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 2


வாயெ ல்லாம் சிரிப்பு வெச்சு
வார்த்தையெ ல்லாம் அன்பு வைச்சு
வாசல் வந்து வாய்நிறைய அழைச்சாக
வாஞ்சையான சொல்லெடுத்து செட்டிநாடு பாஷையிலே...

ஆச்சி அக்காவும் ஆத்தா அம்மாவும்
ஆசையாய் ஆயாவும் அப்பத் தாளும்
ஆயாவோடு அய்யாவும் அய்த்தான் மச்சானும்
ஆசையாய் அழைச்சாக அன்பான வீட்டுக்குள்ள

தம்பு தம்பியும் சின்னவள் தங்கையும்
தன் பங்கு அன்போடு அழைச்சாக...

முகப்பு வளைவினிலே முழுசாய் நிற்கையிலே
முகப்பு நிலையே கவிதை பலசொல்லும்
முகப்பு உத்திரமும் தொங்கு சரவிளக்கும்
முகப்பழகே முகவரியாம் பல வீட்டிற்கு...

முகப்பு திண்ணையிலே அய்யாவும் கணக்கரும்
முகச் சிரிப்பில் முழுமையாய் அழைச்சாக
முகப்பு முடிஞ்சா பெருசா முற்றமாம்
முகப்பும் முற்றமும் முழுநீளக் கதைசொல்லும்...

முற்றம் வான் பார்த்து இருக்கும்
முற்றத்தின் ஓரத்திலே துளசி மாடம்
முற்றம் சுற்றியே அடுக் அடுக்காய்
முற்றத் தினோரத்தில் அழகாய் அறைகள்...

முடிஞ்சத்துன்னு பார்த்திருந்தா சமையல் கட்டு
முக்கால் சமையலறை மீதமோ உணவறை
முழுசாய் சொல்ல தனிகவிதை வேண்டும்
முழுசும் முடிக்க ஓர்நாளும் வேண்டும்...

முகப்பு திண்ணையிலே ஒய்யாரமாய் ஊஞ்சலிலே
முகம் கழுவி கால் கழுவி
முக மலர அமர வைத்து
முதல் பானம் ஆரம்பம் காபியோடு...

இன்னும் தொடரும் - அடுத்தது உணவு உபசரிப்பு...

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 1


ஆறுமாசம் காத்திருந்து ஆறுதலாய் பார்த்திருந்து
ஆறுமாசம் போனதேம்மா வேகமா நாட்காட்டியில்
ஆசையாய் பார்க்க ஆகும்திட்டம் போட்டேன்
ஆருயிர் நண்பன் ஆவலோடு அழைத்தமைக்கு...

அலைந்து திரிந்து அலுவல் அலுத்து
அசைந்தும் அசையா உடல் பெருத்து
அட்டைப் பெட்டியில் அத்தனை கனவும்
அடுக்கி அழகுப் பார்த்து அடங்கிட்ட நானும்...

ஆயிரம் மைல் கடந்து ஊர்ந்து
ஆயிரமாயிரம் மனிதர்கள் கடந்து ஏறி
அடுக்கிய பெட்டியில் அணிவரிசையில் அமர்ந்து
அடுத்த ஊர் ஆத்தங்குடி என கனாகண்டு...

புகையிட்ட வண்டியில் புகையோடு மனதும்
புகையிட்டது உதடுகள் ஜன்னலோரம் குளிரில்
புத்தம்புது மனிதர்கண்டு புத்துயிர் பெற்றேன்
புதுதெம்பு யான் பெற்று புகுந்தேன் கனவினில்...

திங்கள் மதி நிலா வானில் பவணிவர
திகட்டாத பழசான நினைவுகள் நெஞ்சில்வர
தித்திக்கும் மனதோடு திளைத்து உறங்க
திருச்சி வந்தது திரும்பவும் தொடர்ந்தது...

அந்த ஊர் செட்டிநாடு பலகையோடு
அடுத்த ஊர் ஆத்தங்குடி என இறங்க
அந்த நாளும் இந்த நாளும் அன்பாய்
அக்கறையாய் அழைத்திட அனுப்பிய கார்...

ஊர் போகும் பாதையெல்லாம் மனையாச்சு
ஊர் வந்தும் தெரியலையே விளைபயிரும்
ஊர் வந்தது காதோடு குரல் இல்லையே
ஊர் ஆத்தா சொல்வாளே வாய்நிறைய் வாஎன்று...

ஊர் வந்தது ஊதி சென்ற புழுதிமட்டும்
ஊர் பேர் சொல்லி சென்றது மாறாமல்
வீதி வந்தது வாப்பா மகராசா
வீதியில் வரும் வார்த்தையில்லையே காதோடு...

வீதி முற்றி வீடும் வந்தது
வீதி வந்த கார் மட்டும் ஹாரன் அடித்தது
வீடு வந்த நண்பன் வாரி அழைக்க
வீடு வந்த மகிழ்ச்சியில் நான் திளைக்க...

வீடு முழுதும் காட்சிகள் நிழற்படமாய்
வீடு மட்டும் நாலு தெரு மொத்தமாய்
வீடு பார்க்க ஆகும் நாளும் கூட
வீட்டுக்குள்ள இருப்பவரோ காப்பவர் மூன்று...

இன்னும் பாக்கியிருக்கு.. தொடரும்...

என்னைத் தொலைவிட்டு...


என் அருகில் நீ
என் அருகாமையும் நீ
என்னுள்ளேயும் நீ
எனக்காகவும் நீ
என்னாகிப் போனேனோ
என்னைத் தொலைவிட்டு
என்னையே நோகிறேன்.

உன்னோடு ஆயிரமாயிரம் கனவுகளுடன்...


உன் பக்கங்கள் படித்தே நான்
உனக்கான கவிஞன் ஆனேன்
உனக்கு கவிதை சொல்லி
உன் பக்கம் புரட்டுகிறேன்
உன் பக்கம் என் பக்கம் அறியாமலே

உன்னிட்டு எழுதிய கவிதைகள்
உன்னிட்டு பேசிய வார்த்தைகள்
உன்னிட்டு பாடிய பாடல்கள்
உன்னிட்டு வாழ்கிறேன்
உன்னோடு ஆயிரமாயிரம் கனவுகளுடன்...

அன்பே! அழுகாதே....


என் கல்லறையில் ஈரமாமே
என் கண்ணே எங்கோ நீ அழுது
என் கண்களில் தாரை தாரையாக
என்(உன்) கண்ணீர் துளிகள்...

காதல் தோற்றதாய் சரித்திரமில்லை
காதலர்கள் உண்மையானால்...

அன்பே அழுகாதே!
அழுதால் நானும் அழமாட்டேன்
அழும் உன் கண்களினைத் துடைக்க
அழுகாத என் கண்களை அனுப்புவேன்
அன்பே! அழுகாதே....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...