பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்று தொழுது
பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையினைத் தொடங்குவோம்..
எண்ணற்ற அறிஞர்களாலும், அவதார புருஷர்களாலும் எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிமையான மற்றும் அதன் மூலப் பொருளினை உணரும் ஒரு முயற்சி தான் இந்த பதிவின் நோக்கம்.
ஸ்ரீ சங்கராச்சாரியார், மகா பெரியவர் தனது கீதா பாஷ்யத்தின் முகவரையில் “ஸமஸ்த - வேதார்த்த ஸார - ஸங்க்ரஹபூதம” என இதைக் கூறியுள்ளார். இது ஏதோ இந்துக்களின் எந்த ஒரு வகுப்பினருடையதும் அன்று. எல்லோருக்கும், எல்லாவித மனிதர்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்ட ஒரு அறநெறியாகும்.
பகவத்கீதை எனும் இந்த யோக முறை முதன் முதலில் சூரியதேவனுக்கு சொல்லப்பட்டது பின்னர் சூரியதேவன் அதை மனுவுக்கும், மனு இசஷ்வாகுவுக்கும் விளக்கியதாகவும் கண்ணன் அர்ஜூனனிடம் சொல்கிறார். இவ்விதமாக ஒருவர் பின் ஒருவராக சீடர் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப் போக்கில் மறைந்துவிட்டதால் குருட்சேத்திரப் போர்களத்தில் இப்போது அர்ஜூனனுக்கு உபதேசிக்க வேண்டிவந்தது என்றும் சொல்கிறார்.
ஆம் இந்த ஸ்ரீமத் பகவத் கீதை என்ன சொல்கிறது. பிற நூல்களுக்கும், காப்பியங்களுக்கும், காவியங்களுக்கும் இல்லாத பெருமை ஏன் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வந்தது என்று யோசித்தீர்களேயானால், அது மிக எளிது.
ஸ்ரீமத் பகவத் கீதை என்பது, பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறான், அவன் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும், தன்னுடைய செயல்கள் அத்தனையும் தோல்விகளில் முடிகிறது என்றும் அச்சுறுகிறான், மேலும் அவன் தனக்கு போல் வேறு எவரும் இத்தகைய சூழ்நிலை அனுபவிப்பதில்லை என்றும் நினைத்து கதறி அழுகிறான். அந்த சூழ்நிலையில் தனக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி தன்னை வழி நடத்திச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கிறான். இத்தகைய துன்பம் என்பதில் உழல்வது, மழைக்காக மண் எப்படி காத்து இருக்குமோ அது போல் ஆகும். மழை வந்ததும் மண் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, அழகாக அதில் விதைக்கப்பட்டுள்ள விதையினை விருட்சமாக்க முயல்கிறது. அது போல தான் அர்ஜூனன் குருட்சேத்திரப் போர்களத்தில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போர் புரிய தயாராக இருக்கும் கௌரவர்களைப் பார்த்து நிலை குலைந்து போனான். தன்னால் போர் புரிய இயலாது என்று தேரிலே சாய்ந்து உட்கார்ந்து விடுகிறான். இந்த சூழ்நிலையில் தான் மதுசூதணன் கண்ணன் வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்கிறான். அதுவே கீதா உபதேசம் ஆகும்.
இதனை எளிமையாகச் சொல்லவேண்டுமேயானால் துன்பம் என்னும் வாயில் வழியாகத் தான் ஞானமாகிற அரண்மனையில் பிரவேசிக்க முடியும் என்று அமைகிறது ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம்.
இது ஏதோ போர்களத்தில் அர்ஜூனனுக்கு சொல்லப்பட்ட ஒரு கருத்தாக எண்ணாமல் அதன் உள்ளிருக்கும் ஆழ்ந்த கருத்துகளை நாம் நோக்க வேண்டும். பகவானுடைய சொல்லிற்குச் செவிசாய்க்கும் ஒவ்வொருவருக்கும் கேட்கும் ஒலி இது. துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் புத்துயிர் அளிக்கும் மந்திரம் இது. “உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராபய வரான் நிபோதத” என்பது ஆகும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பலனை எய்துகிறான். இதில் கீதையின் முழு ரகசியமும் ஆழ்ந்து உறைகிறது என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சுருங்கச் சொன்னால் எவன் ஒருவன் ஆசையினைப் பின்தொடர்ந்து செல்கிறானோ அவன் தன் வாழ்வில் நிச்சயம் சிற்றின்பத்தில் லயித்து பேரின்பத்தினை கோட்டை விட்டு விடுகிறான்.
பகவத் கீதை “கீதோபநிஷத்” என்றும் அறியப்படும், வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷதமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். இந்த ஸ்ரீமத் பகவத்கீதை என்பதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் குறைந்த பட்சம் தத்துவரீதியாக ஸ்ரீகிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடக்கமான நிலையில் நம்மால் ஸ்ரீமத் பகவத்கீதையைப் புரிந்து கொள்ள இயலும். ஸ்ரீமத் பகவத்கீதை ஆழ்ந்த புதிரானதால் அடக்கமான நிலையில் பயின்றாலன்றி புரிந்துகொள்ளுதல் மிகக் கடினமாகும்.
மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.
அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:
1. ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்க முடியுமா?
2. பௌதிக இயற்கை என்றால் என்ன?
3. மூன்று குணங்கள் என்ன என்ன?
4. கர்மம் என்றால் என்ன? ஸ்ரீமத் பகவத்கீதையில் இதற்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்
No comments:
Post a Comment