Tuesday, 31 January 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 4


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது.

இதில் நாம் ஒரு சில தெளிவுரைகளிலிருந்து அவர்களின் ஆக்கத்தினை அப்படியே பார்ப்போம் அதன் பிறகு நாம் அந்த மூலத்தின் அடிபிறழாமல் அந்த கருத்து மாறாமல் அதன் வழி எளிய முறையில் எப்படி பகவான் பார்த்தனுக்கு எளிய முறையில் எண்ணற்ற கருத்துகளைச் சொல்லியிருக்கிறான் என்று பின் வரும் பாகங்களில் பார்ப்போம்.

முதலில் நம் ஆதிசங்கரரின் ஸ்ரீமத் பகவத் பாகவத்திலிருந்து அவர் மொழியில் சொல்லப்பட்ட கருத்துகளின் சாராம்சம்..ஸ்ரீமத் பகவத் பாகவத்தின் மூலம் மாறாமல் அப்படியே திரு.மகாதேவ சாஸ்திரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில் இருந்து நாம் பார்ப்போம்.

”The aim of this famous Gita Sastra is, briefly, the Supreme Bliss, a complete cessation of Samsara or transmigratory life and of its cause. This accrues from that Religion (Dharma) which consists in a steady devotion to the knowledge of the Self, preceded by the reunciation of all the works. So, with reference to this Religion, the doctrine of the Gita, the Lord says is the Anu-Gita as follows:- "That religion, indeed, is quite sufficient for the realisation of the state of Brahman, the Absolute" (Asv.Parva xvi.12). In the same place it is also said "He is without merit and without sin, without weal and woe - he who is absorbed in the one seat, silent and thinking nothing". And he also says: "Knowledge is characterised by reunciation"

மேலும் அவரின் உரையில் “ The Gita Sastra expounds this twofold Religion (Dharma & Karma),whose aim is the Supreme Bliss. Thus the Gita Sastra treats of a specific subject with a specific object and bears a specific relation(to the subject and object). A knowledge of its teaching leads to the realisation of all human aspirations."

இதன் தமிழாக்கம் செய்யப்பட முயற்சிக்கவில்லை. இது எளிதாகவும், புரிந்து கொள்ளும் தன்மையுடன் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதன் சாராம்சம் மற்றும் சொல்ல வந்த கருத்து மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையில் இதனை தமிழாக்கம் செய்யவில்லை.

அடுத்து தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் மொழியில்

“ஹே கிருஷ்ண கருணஸிந்தோ தீனபந்தோ  ஜகத்பதே
 கோபேச கோபிகா காந்த ராதா காந்த நமோஸ்துதே”

என்று முதலில் தன் குருமார்களையும் பின் தன் ஆச்சார்யர்களையும் வணங்கிவிட்டு, பின்னர் கிருஷ்ணரை இவ்வாறு வணங்கி தன் உரையினை ஆரம்பிக்கிறார். அதாவது என்னருமை கிருஷ்ணா, படைப்பின் மூலமும், பரிதவிப்பவர் நண்பனும் நீயே, கோபிகளின் நாயகனும், ராதாராணியின் நேசனும் நீயே, உனக்கு எனது வணக்கங்கள் என்று வணங்கி ஆரம்பிக்கிறார்.

”பகவத் கீதை என்றால் என்ன? பௌதிக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும் எனக் கூறுகிறார். மேலும் அர்ஜூனன் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே பௌதிக இருப்பால் துன்பம் மிகுந்திருக்கின்றோம், நமது நிலையே நிலையற்ற தன்மையால் நாம் அச்சுறுத்தப்படக் கூடியவர்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனல் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். “அஸத்” என்பது இல்லாததைக் குறிக்கின்றது” என்கிறார்.

மேலும் அவர் தன் விளக்கவுரையில், “துன்பப்படும் பற்பல மனிதர்களுக்குள், ஒரு சிலரே தங்கள் நிலையைப் பற்றியும், தாங்கள் யாவர். இது போன்ற விரும்பத்தகாத சூழ்நிலையில் தாங்கள் வைக்கப்படக் காரணம் யாது, என்பன போன்றவற்றைப் பற்றியும் ஆராய்வார்கள். தனது துன்பத்தை வினவும் இந்நிலைக்கு எழுப்பப்படாவிடில், தனக்குத் துயர் வேண்டாம்- துயருக்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று உணராதவரை, ஒருவன் பக்குவமான மனிதன் என்று கருதப்படுவதில்லை. ஒருவன் மனதில் இவ்விதமான ஆராய்ச்சி எழும் நிலையிலேயே மனிதத்தன்மை துவங்குகின்றது. “ப்ரஹ்ம சூத்திரத்தில்” இந்த ஆய்வு, “ப்ரஹ்ம ஜிகஞாஸ” என்றழைக்கப்படுகின்றது. பூரணத்தில் இயற்கையை ஆயும் வரை மனிதனின் ஒவ்வோர் செயலும் தோல்வியாகவே கருதப்படுகின்றன. எனவே தாங்கள் ஏன் துன்புறுகிறோம் என்று வினவத் துவங்குபவர்களும், எங்கிருந்து வந்தோம், மரணத்திற்குப் பின் எங்கு செல்வோம் என்று ஆய்பவர்களுமே, பகவத்கீதையை பயிலத்தகுந்த மாணவர்களாவர்” என்று அழகாக கூறுகிறார்.

அடுத்து ஸ்ரீமத் சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் “வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன, மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதஙகளைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால், பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரடியாக பாலைப் பெற்றுக் கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை” என்று எளிமையாக தனது தொடக்கவுரையில் விளக்குகிறார்.

மேலும் அவர் ஸ்ரீமத்பகவத் கீதை ஏன் போர்களத்தில் புகட்டப்பட்டது என்று சொல்லும் போது “பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம், எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டு போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாத மக்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் வேண்டுமென்று தாயிடம் பிள்ளை அழுது பெறுகிறது. அது ஒரு விதப் போராட்டம். ஒரு வேலையில் அமர்தம் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகின்றான், அதுவும் போராட்டமே.... சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்று போராட்டத்திற்கு மனிதன் தகுதியுடையவன் ஆக வேண்டும்” என்று ஸ்ரீமத்பகவத் கீதை வியாக்கியானத்தில் அழகாகச் சொல்லுகிறார்.

அடுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ஸ்ரீமத்பகவத் கீதை எனும் நூலின் முகவுரையிலிருந்து “ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் அதன் பெருமையை விளக்கும் முத்திரை உள்ளது. “இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபநிஷதஸு ப்ரஹ்மவிதயாயாம யோகசாஸ்த்ரே ஸ்ரீகிருஷ்ணார்ஜுன ஸம்வாதே” என்று வேதத்தின் சிரத்தில் உள்ளது தான் உபநிஷத்து எனப்படுவது. ஆனால் கீதைக்கும் அந்த உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்படுகிறது....  இது பிரம்மவித்தையாகவும் தலை சிறந்த யோக சாஸ்திரமாயும் ஜீவாத்ம பரமாத்ம ஸம்பாஷ்ணையாயும் விளங்குகின்றது” என்று அழகாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பகவானை அன்புடன் வழிபடுவோர் அவர் அளிக்கும் ஞானக்கண் கொண்டு அர்ஜூனன் விசுவரூபத்தை தரிசித்தாற் போல அவருடைய திருவுருவைக் காணுதல் கூடும். எனது உண்மையான ஸ்வரூபத்தைப் பக்தி ஒன்றினால் தான் அறியலாம். அங்ஙனம் அறிந்தவன் விரைவில் என்னுடன் ஒன்றுபடுகிறான் என்று கூறுகிறார் பகவான்.

பக்த்யா மாமபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத:
ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே ததனந்தரம்.

இப்படி யாகமும் யோகமும் சித்தி பெற்றால் அதுவே தியாகம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “கீதா, கீதா” என்று தொடர்ச்சியாகச் சொன்னால் “தாகீ, தாகீ” அல்லது “தியாகீ, தியாகீ” என்று வரும், தியாகியாயிருப்பது தான் கீதையின் முடிவான உபதேசம் என்பார்” என்று அழகாகச் சொல்கிறார் கீதையின் சாராம்சத்தை.

எண்ணற்ற மகான்கள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.

அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. நாளை கவிஞர்கள் பாரதியார், கண்ணதாசன், துளசி, கிருஷ்ணா போன்றோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு நம் எளியவுரையின் தொடக்கத்தினை நாளை மறுநாளிலிருந்து ஆரம்பிப்போம்.

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...