Thursday 19 January 2012

ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 2


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது


பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய
உரையின் இரண்டாம் பாகத்தை தொடர்வோமா

ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது

என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். அதன்

தொடர்ச்சியாக

அர்ஜூனன் ஜீவாத்மாவுக்குப் பிரதிநிதி: கிருஷ்ணன் பரமாத்மா.. ஸ்ரீமத் பகவத் கீதை என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள்.

இந்த உரையாடல்கள் உயிருட்டமுள்ள நல்ல தகவல்களை அந்த பரம்பொருளே சொல்லும் பாங்கில் அமைந்தது தான் ஸ்ரீமத் பகவத்கீதை.

எப்படியென்றால் பாரதப்போரில் அர்ஜூனனுக்குச் சாரதியாக மட்டும் கண்ணன் இல்லை, அந்த பரம்பொருளின் கீழ் தாழ்படிபவர்களுக்கு அனைவருக்குமே அவன் சாரதி தான். சரீரமே தேர், இந்திரியங்களே குதிரைகள், ஸம்ஸார வாழ்க்கையே யுத்தம்.

வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறக்கும் போது அதை மீண்டும் நிறுவவே முக்கியமாக பகவான் அவதாரம் நிகழ்கிறது. அர்ஜூனன் அனைத்து கலைகளையும் தேர்ந்த ஒரு ஜீவாத்மா, ஆனால் உலகத்தாருக்கு இந்த அருமையான கீதை சொல்லப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில், அர்ஜூனன் போர்களத்தில் தடுமாறுவது போலவும் அதன் மூலம் பரம்பொருள் இந்த கீதாஉபதேசம் செய்கிறார். இதுவும் அந்த மலைமூர்த்தி கண்ணன் போட்ட அற்புதமான ஒரு திட்டம். சில நேரங்களில் சிறார்களுக்கு புரியவைக்க நாம் இத்தகைய செயல்கள் ஈடுபடுவதை உணரலாம். ஆம் நாம் அனைவருமே அந்த பரம்பொருளை உள்ளத்தில் வைத்திருக்கும் ஜீவாத்மாக்கள் தான். நாம் அதனை உணரும் வரை இந்த கலியுகத்தில் நடைபெறும் செயல்களில் உழல்வதை தவிர வேறு வழியில்லை.

ஸ்ரீமத் பகவத்கீதையில் ஐந்து ஆதார உண்மைகளை உள்ளடக்கி மனிதன் வாழ்க்கை லட்சியத்தினைப் பக்குவப்படுத்திக் கொள்ள பல வழிமுறைகள்
சொல்லப்பட்டுள்ளன. ஈஸ்வரன் எனும் ஆள்பவரும், ஜீவன்கள் எனும்
ஆளப்படுபவர்களும் இருக்கின்றனர். உலகில் ஜனித்த அனைத்துக்குமே தாங்கள் ஆளப்படுபவர்களே என்ற உண்மை நிலையினை உணர வேண்டும். எவன் ஒருவன் தன்னை தானே பெரிதுப்படுத்தி, தனக்கு தானே நிகர் என்றும், தன்னை ஆள யாரும் இல்லை என்று நினைக்கிறானோ அப்போதே அவன் அந்த நிகரற்ற இன்பத்தில் இருந்து விடுபட்டு துன்பத்தில் பயணிக்கத் தொடங்குகிறான்.

ப்ரக்ருதி (அகிலம்) (பௌதிக இயற்கை), காலம் (பௌதிக இயற்கையின் தோற்றம் அல்லது இவ்வகிலமுழுதின் நிலைப்புக் காலம்), கர்மம் (செயல்) இவையாவும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பகவத்கீதையின் பின் அத்தியாயங்களில் விளக்கப்படுவதைப் போல் பிரபஞ்ச விவகாரங்களிலும், பௌதிக இயற்கையிலும் இறைவனுக்கு உயர் அதிகாரம் உண்டு. பௌதிக இயற்கை சுதந்திரமானது அல்ல என்றும் இந்த ப்ரக்ருதி தன் ஆணைக்கு கீழ் இயங்குகின்றது என்றும் உணர்த்துகிறார் கிருஷ்னர். இதன் மூலம் ஒரு உண்மை புலப்படுகிறது, ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்கவே முடியாது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஏழாம் அத்தியாயத்தில் ஐந்தாம் பதத்தில் இது தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளது.  “அப்ரேயம் இதஸ்த்வன்யாம்”, இந்த ப்ரக்ருதி, எனது
கீழ்நிலை இயற்கையாகும். “ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்”, அதாவது இந்த ப்ரக்ருதிக்குப் பிறகு வேறு ஒரு ப்ரக்ருதி இருக்கிறது ஜீவபூதம் - உயிர்வாழி (ஜீவாத்மா) என்று சொல்லுகிறார்.

ஒருவன் ஒரு வணிகம் செய்கின்றான் என்றால் அவன் அதில் லாபம் வரும் போது சந்தோசமடைகிறான் அதே நேரம் அதில் நஷ்டம் வரும் போது
வருத்தமடைகின்றான், இரண்டுமே அவன் செயல்கள் தான் அந்த இரண்டில்
அவனே சந்தோசமடைவதும், துக்கமடைவதும் செய்கிறான். அவன் செயல்களுக்கு ஏற்ப அவன் நிலை பாவிக்கப்படுகிறது. அதாவது அவன் செயல்கள் அவனை வழிநடத்துகிறது. இதுவே கர்மம் என்றுச் சொல்லப்படுகிறது. கர்மம் என்றால் செயல். ஒருவன் என்ன விதைக்கிறானோ அதுவே அவன் அறுவடை செய்ய முடியும். நல்ல விதை விதைத்து அவன் உழும் செயல் பொறுத்து அவனது அறுவடை அமைகிறது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஈஸ்வரன் (பரமபுருஷன்), ஜீவன் (உயிர்வாழி), ப்ரக்ருதி
(இயற்கை), நித்தியமான காலம், கர்மம் (செயல்) ஆகிய ஐந்தையும் பற்றி அழகாக விவரித்துக் கூறுகிறது. கர்மம் தவிர மீதமுள்ள நான்கும் நிலையானதாகும், ஆனால் கர்மம் நிலையற்றதாகும்.

இந்த பௌதிக இயற்கை பகவானிடமிருந்து பிரிந்த சக்தியாகும். நித்தியமான உறவு கொண்டவை. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் துன்புறவோ, இன்புறவோ, செய்கிறோம். ஆனால் நமது செயல்கள் அல்லது கர்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும், நமது அறிவின் பக்குவத்தைப் பொறுத்து இது அமைகிறது. இது அழகாக பகவத்கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. அதையும் வரும் வாரங்களில் நாம் பார்க்கலாம்.

இந்த பௌதிக இயற்கையானது மூன்று குணங்களால் அமைந்ததாகும் அவை
நற்குணம், தீவிரக் குணம், அறியாமைக் குணம் என்பன ஆகும், அதாவது ஸத்வ, ரஜோ, தமோ குணங்களாகும். அதைப் பற்றிய விவரங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

உடல் சம்பந்தமான கருத்துக்களிலிருந்து ஒருவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜூனன் அந்த உடலின் மேல் பற்றுக்கொண்டு தன் முன்னால் நிற்கும் கௌரவர்களைப் பார்த்து அவர்கள் உறவுமுறையாகிவிட்டனரே அவர்களை நாம் எப்படி எதிர்ப்பது, எவ்வாறு போரிட்டு கொல்லுவது என்று நிலை தடுமாறி இருக்கும் போது

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா தேஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||

யதா தேஹிந: = எப்படி ஆத்மாவுக்கு
அஸ்மிந் தேஹே = இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா = பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும்
ததா தேஹாந்தரப்ராப்தி = அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீ⁴ர தத்ர ந முஹ்யதி = தீரன் அதில் கலங்கமாட்டான்

இந்த ஆத்மாவுக்கு இவ்வுடலில் எப்படி இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அவ்வாறே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. ஒரு வீரன் அதை நினைத்து கலங்ககூடாது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மற்றொரு பகுதியினை மறுப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல, ஏனெனில் ஒன்றைச் சார்ந்தே மற்றொன்று விவரிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அர்ஜீனன் கண்ணனை குருவாக ஏற்றுக்கொண்டு கண்ணனையே பரபிரம்மாக ஏற்று அவர் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். “கரிஷ்யே வசனம் தவ” உங்கள் வாக்குப்படி நான் செயல்படுகிறேன் என்றும் சொல்கிறான்.

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.


அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. ஸநாதன வெளி என்றால் என்ன?
2. ஸ்ரீராமானுஜாசாரியர் ஸநாதன வெளி பற்றி என்ன சொல்கிறார்?
3. கிருஷ்ணர் என்றால் என்ன?
4. கீதையில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன, எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...