Wednesday 28 December 2011

துடைத்தெடு


கண்
துடைக்கும் அந்த ஒரு விரலையும்
துடைக்காத ஒன்பது விரலும் கொண்டு
துடைத்தெடு உன் கவலையை
துடைத்தெடு உன் சோம்பேறித்தனத்தை
அடைந்திடலாம் பத்(து)தாத வெற்றியினை
சேர்த்திடலாம் அகலாத புகழ்தனை...

வீழ்ந்தவன் எழுவது எப்போது???


வீசும் பார்வையிலோர் கள்ளத்தனம்
வீசி சென்ற பாவையோ ஒரு கணம்
வீசி விட்டு விடைப்பெற்றாள்
வீச்சிலே வீழ்த்தி விட்டாள்
வீழ்ந்தவன் எழுவது எப்போது???

தேடி வந்த காதல்


தேடி வந்த காதல்
நாடி வந்தது எனை நோக்கி
சேடி சேதி சொன்னாள்
வாடி நின்றேனே
பாடி பறந்தாளே...

விழியாளே!!!


விழியாலே அவளுரைத்தாள்
விழியாள் பார்த்து
விழி முழித்து நின்றேன்
விழி முழித்ததால் - என்
தாழிட்டு மூடியது வாயும்
நாழியும் அவள் நினைவாய்...

தேயும் அவள் கனவு


தேயும் அவள் கனவு
தேயவில்லை அவள் அழகு
தேய்ந்ததென்னவோ என் நினைவு தான்
என எப்போது புரியும்...

நிலவு வான் போற்றும் உன்னதம்
நீயோ வான்/நான் போற்றும் உன்னதம்

இருப்பே நீயாக


கருவிழிப் பாவை கண்ணுக்குள்ளே
கண்ணே நீயாக
கண்மணியும் நீயாக
உயிரும் நீயாக...

இடம் தேடி செல்ல வேண்டாம்
இருப்பிடம் தேவையில்லை
இருப்பே அவனிடம் எனும் போது...

குருட்டுப் பார்வை


பார்வையில் குறையில்லை
பார்வையோ குறைவு தீர்க்கமில்லாமல் - அப்
பார்வையின் பெயரே குருட்டுப்பார்வை...

தமிழ் ஒரு அருமையான காதலி


தமிழ் தமிழ் தமிழ்
தனக்கென்று ஒன்றுமில்லை
தனக்கென யார் கேட்டாலும் குறைவதில்லை
தனக்கென யார் கொடுத்தாலும் மறுப்பதில்லை...


தமிழ் ஓர் அருமையான காதலி
காதலித்துப் பாருங்கள்...

ஏன் என்னையே பார்க்கிறாய்???


எதையோ நினைத்து சிரித்தேன்
எது அன்று அறியுமுன்னே
என்னிட்டு சிரித்தேன்
எனக்குள்ளே நான்
என அறியாமல் போனாயோ!


ஏங்கித் தவிக்கிறேன்
ஏக்கத்துடன் பார்க்கிறேன்
ஏளனமாய் சிரிக்கிறது
ஏறிட்டுப் பார்த்த கண்ணாடி
ஏன் என்னையே பார்க்கிறாய் என்று???


மயங்கித் திரியும் உறவு கூட்டம்
மந்தையாக்கி விந்தை செய்யும் சில நேரம்
மந்தமாய் மூளையும் மரத்துப் போகும்...


மனிதன் மனதில் வேடமிட்டு
வெளியில் ஒப்பனையிடுகிறான் நிஜத்தில்...

தோல்வியும் வெற்றியும்


தோல்வி விழும் விதை
வெற்றி எழும் விருட்சம்
விதையின்றி விருட்சமில்லை
விருட்சத்திற்கு வானமே எல்லை...

எண்ணிப் பார்க்கிறேன்...


எண்ணி எண்ணி பார்க்கிறேன்
எண்ணத்தில் நீயிருந்து
என்னுள்ளே பயணிக்கிறாய்
எனக்கே தெரியாமல்..

கனவே கலையாதே!!!


நிஜங்களின் நிழல்கள் நினைவுகள்
நிஜங்கள் கலப்படமாகிவிட்டன
நிழலான நினவுகளும் கலப்படமாகிவிட்டன
நித்தம் தொடர்கிறேன் மாசற்ற கனவுகளில்...

கனவே கலையாதே

யோசனை


யோசித்து எழுதிவிட்டீர்
யோசித்தது எது என தெரியாமல்
யோசித்து யோசித்து
யோசனையே யோசனையானது
யோசனையா கவிதையின் கருவானது - உங்கள்
யோசனையின் வெற்றி... 

சிந்தித்துப் பார்


உள்ளே சிந்தித்து
உள்ளேயே உரம் வைத்து
உள்ளேயே எண்ண மூட்டி
உள்ளேயே அடைகாத்து
உள்ளேயே பொறித்துவிட்டால்
வெளியே தணலாய் வெளிச்சமிடும்
எண்ணத்தின் வலிமை அதுவன்றோ
எண்ணத்தின் வலிமையே நம்பிக்கையன்றோ தோழா!!!

சிந்தித்து பார்!!!
சிறகொடிந்த பறவை இறந்து விட்டதா
காலொடிந்த விலங்குகள் மரித்து விட்டதா
இதுவும் கடந்து போகும்
எதுவும் நடக்கும்
முன்னிட்டு நடையிடு - ஆம்
முன் வைத்து நடையிடு...

வலி

வலி மறந்து வலிக்கிறது
வலியின் வலி உணராததால்
வலியின் வலி தெரியாது
வலியின் வலி உணரும் வரை
வலியின் வலி புரியாது
வலியின் வலி வலிப்பதில்லை
வலியின் வலி உணரும் போது
வலியென்று இருந்து விடாதீர்
வலியோடு சொன்னாலும்
வலிமையோடு சொன்னாலும்
வலி வலி தான்...

சுனாமியே எச்சரிக்கை..


சில வேடிக்கை மனிதர் இல்லை நாம்
சீற்றமான அலைகளை சிறைப்பிடிப்போம்
சீறும் பேரலைகளை சிறகொடிப்போம்
சீண்டிப் பார்க்காதீர்...

சிலையாய் போனோம் அன்று
சீற்றத்தின் கொட்டம் அடக்க
சீறிப் புறப்பட்டோம் இன்று
சீண்டாதே அலையே...

சீக்கிரமே கண்டிடுவோம்
சீறும் அலையே உனை
கடலுக்குள்ளேயே நிறுத்திடுவோம்...

சுனாமி அலைகள்


விட்டுக் கொடுத்தது மனிதம்
விடாமல் துரத்துது அலை
விடைத் தேடி வந்தனவோ
வினாக்களை விட்டு விட்டு சென்றனவோ...

மிருக பூதம் அடக்கி
மிஞ்சும் மனிதம் யாரோ
பிஞ்சிலே விதைத்த விதை
பிண்டத்தில் கலந்ததே...

மிருகமோடு மனிதமும்
மனிதமோடு மிருகமும்
மின்னலாய் மடிந்து சென்றது
மிருகம் இறந்தது நியாயம்
மனிதம் இறக்கலாமோ
கூறீர்...

ஒரு நாள் வந்து
ஒவ்வொரு நாள் செய்தியானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு வாழ்வே புதிரானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு உலகில் நாசமிட்டதே!!!

ஒரு நாள் தானே என
ஒரு நாள் விட்டது மனிதம்
ஒரு நாள்
வாழ் நாள் செய்தியானதே!!!

Wednesday 14 December 2011

என் கவிதை புத்தகம்...


புத்தகத்தில் எல்லாம் இருந்தது
புரட்டிப் பார்த்தனர் சிலர்
புரட்டிப் படம் பார்த்தனர் பலர்
எழுத்து அச்சேறி இறந்து போனது....

கவிதை வாசிக்க
கவிஞர் தேவையில்லை
கலைநயம் போதும் என்றேன்
அந்த நயம் எங்கு கிடைக்கும்
அற்புத புத்தகம் வந்தது
அதுவும் விற்று தீர்ந்தது - என்
கவிதைப் புத்தகம் உறங்குகிறது
என்னைப் போலவே அடக்கமாக...

சில்க் சில்க் சில்க் ...(ஒரு ரசிகனின் பார்வையில்)


பித்தனும் பித்தம் கொள்ளும்
பித்தமாவர் பெண் கண்டால்
பித்தமாவர் அப் பெண் கண்டால்...

சில்க், சில்க் சில்க்
சில்லிட்டது இதயம் இன்றும்
சிரித்து வெளியே சொன்னால்
சிரிக்கின்றனர் நக்கலாய்...

சிந்தித்துப் பார்த்தேன்
சிலையாய் இருந்தாளாம்
காதல் மயக்கத்தில்
கனிவோடு ரசித்து மகிழ்ந்தார்களாம்
கன்னியவள் ரசிக்கும் வரை இனித்தாளாம்
ஏனோ புரியவில்லை
ஏதோ சொல்லிக் கொண்டார்கள்

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
எப்படி சொல்வேன் காரிகையே
நீ எழுத மறந்த ஓவியம் 
பாட மறந்த பாடல் என...

சிட்டே சிட்டு குருவியே
சினேகம் கொள்ளவும் வெட்கமிட்டனராம்
சில்லறைக்கும் இறுதியில் பஞ்சமாம்
அய்யகோ!!! ஒரு நடன மாது
ஒரு நாட்டிய தாரகை
ஒத்திகையின்றி அரங்கேறினாள்...

நாடக வாழ்க்கையில்
நடித்தே பேர் வாங்கினாள் - ஆம்
உடலும் நடிக்கும் என...

எத்தனையோ செய்தவள் பாவம்
எடுத்தெரிந்த ஆடைக்கு சித்தரிக்கப்பட்டாள்
இன்னும் வரும் படங்கள்
இறுதி வரை யார் என தெரியாமல் போகும்....
 
மூத்த கவிதை
முதிர்ந்து போனது 
வாசிக்கப் படாமலே...

வாசித்தவர்கள் சிலர் வரிகளில் தேடினர்
வாசித்தவர்கள் சிலர் வார்த்தைகளில் தேடினர் - பாவம்
வாசித்தவர்கள் எழுத்தினைக் கூட்டி படிக்கவில்லை
வாசிக்கப்படாத கவிதை சில்க்...
ஒரு ரசிகனின் பார்வையில்...

எண்னம் போல் இதயம்


ஒரு இதயம்
சுருங்கி விரிகிறது...

சுருங்கச் சொன்னால்
உள்ளேயே விரிந்து மூடுகிறது..
எங்கிருக்கிறது வாழ்க்கை என்றாய்
எண்ணிப்பார் சுருங்கும் போது புள்ளியாகிறது
எதுவும் அதிலிருந்து தொடர்கிறது
எதையும் விரித்தால் அழகாகிறது 
எண்ணம் போல் இதயமாகிறது....

சொல்லடி சிவசக்தி, என்று திருந்துவரோ?


பிச்சையினைத் தொழிலாக்கி பிண்டம் உணவிற்கு
பிணமாய் வாழ்க்கை நடத்தும்
பித்தர்கள் என்று திருந்துவரோ
சொல்லடி சிவசக்தி...

வீரம் மறந்து தரம் தாழ்ந்து
வீணனாய் போன தமிழன்
வீண் பகட்டு வாழ்விற்கு
வீங்கி வயிறு பெருத்து
வீழ்தலில் என்ன சுகம் கண்டான்
சொல்லடி சிவசக்தி...

சும்மா கிடைக்குதென்று சோம்பேறியான கூட்டம்
சுதியில் லயம் கண்டரோ
சித்தம் செரிவுபெற செயலாக்கும் அரசு
சித்தம் சிதையும் தொழில் செய்யவோ
சிந்தை மயங்கி இலவசத்தில் உழன்றானோ!!!!!
சொல்லடி சிவசக்தி...


கைகட்டி வாய்கட்டி எந்நாளும் வெட்டியாய்
தமிழன் அறிவு சிதைந்ததோ வடிகட்டி
சரியா யில்லையோ வழிகாட்டி அரசு
சதியில் மயங்கினானோ தன்னைத் தாலாட்டி
சிரிக்க வாய் இருந்தும் சிரிப்பு வரலையே
இவன் நிலையெண்ணி
சொல்லடி சிவசக்தி...
என்று திருந்துவரோ????

ஊழல்


ஊழல் ஊழல் ஊழல் ஊழல்
எங்கு பார்க்கினும் ஊழல்...

பின்னே பார்க்கிறேன் வந்த பாதையிலும்
முன்னே பார்க்கிறேன் உள்ள பாதையிலும்
என்னே நானே நொந்து போகிறேன்
தன்னே தானே வெந்து சாகிறேன்....

கொடுத்து கொடுத்து என் கரம் கருத்தது
எடுத்து எடுத்து சிரம் தாழ்ந்தது இதை
விடுத்து மனம் பிறழ மறுத்தது அதை
தொடுத்து உடல் ஊசி நாறியது...

இனியும் கொடுக்க மாட்டேன் என
எப்போது சபதம் எடுப்பது????

ஏழ்மையின் இலக்கணம்...


உண்ண உணவில்லை ஒதுங்க இடமில்லை
உள்ளுறுப்பு எல்லாம் காற்றில் அலையாட
உடைக்கும் பஞ்சம் உடுத்தவோ அஞ்சும்
உள்ளத்தில் காதல் உயிரின் மிச்சம்...


உளம் கொண்ட காதல் சொச்சம்
உருவான உயிர்கள் அதன் எச்சம்


உயிர் உடலில் தவழ்ந்தது 
உடல் உறவால் மலர்ந்தது...


உடல் நாறி வளர்ந்தது ஆண்டோடு
உடலேறி பவணி வந்தது திருவோடு


உழைப்பு மறந்து உணர்வும் செத்து 
உயிர் வாழ்ந்து என்ன பயன்
உண்ணும் உணவு கையேந்தி
உடுத்தும் உடை கிழிசலாகி


சிந்தியுங்கள்!
ஏழ்மை தவறல்ல பிறப்பில்
ஏழ்மை தொடர்ந்தால்
ஏளனமன்றி வேறு என் சொல்ல????


ஏழ்மை கவசம் அல்ல பாதுகாக்க
ஏழ்மை இல்லாமையின் இலக்கணம் சிலருக்கு
ஏழ்மை இயலாமையின் இலக்கணம் பலருக்கு.

Wednesday 19 October 2011

காதல் கடிதமே...


வந்துவிடும் என நினைத்து
வந்ததோ என நினைத்து
வந்து வந்து பார்க்கிறேன் - நீ
வந்து வந்து போனாயோ - இல்லை
வந்தவுடன் போனாயோ....

வாசல் வரை வந்து
வாசம் அதை தந்து
வாசிக்க ஆசையாய் வந்து
வார்த்தையாய் போனாயோ - என்
வாசமான வாக்கியமே!!

வரிகளில் உனை தேடி
வரிசையாய் வார்த்தைகளில் தேடி
வரிசையிட்ட வாக்கியத்தில்
வரிசையிடா என் ஆசைகளோடு....

வந்து செல்லும் போஸ்ட்மென்
வந்து செல்லும் சைக்கிள் மணி
வந்து செல்லும் காலிங் பெல்
வந்து செல்லும் காலடி ஓசை
வந்து வந்து போகிறது
உனை மட்டும் மறக்காமல்
தந்து விடாமல் செல்கிறது
என் கனவு காதல் கடிதமே!!!!!!!!

Tuesday 18 October 2011

நாணயம்.


சில்லறை என்றே ஒதுக்கியது - இன்று
சில்லறையே ஒதுக்கியது 
சில நேரம் கிடைத்து - பல நேரம்
சில்லறையோ சிறையாகிப் போனது
சிலரின் உண்டியலாகிப் போனது....

சில்லறை வியாபாரமாகியது - இல்லை
சில்லறையில் வியாபாரமாகியது....

ரூபாய்
ஒன்றோடு ஒன்று
ஒன்றோடு ஜந்து
ஒன்றாகிப் போனது வடிவத்தில்
அதுவே எளிதாகிப் போனது...

கேட்டு கொடுக்கவோ - இல்லை
கேட்டவுடன் கொடுக்கவோ
கேள்வியாகிப் போனது
கேலியாகிப் போனது
சில்லறை வணிகமாகிப் போனது...

அரசே!
ஒற்றுமை கோரி
ஒற்றுமை தேடி
ஒற்றுமை வைத்தாயோ
ஒன்றாய் வடிவத்தில்....

அதனால் உண்டியலாகிப் போனது - இல்லை
அது உண்டியலுக்குள் போனது...

அரசே!
நீ பெரிய வியாபாரி
நீ நாணயமும் வெளியிட்டு
நீ உண்டியலையும் பெருக்குகிறாய்
நீ நாணயத்தில் வியாபாரம் காண்கிறாய் - ஆம்
அரசே நீ பெரிய தன வணிகன் தான்
சில்லறையினைச் சிறையிட வைப்பதினால்...

Monday 17 October 2011

இன்றைய கல்வி நிலை...


புத்தகத்தினைச் சுமையாக சுமந்து
புத்தியினைக் கற்க மறந்து
புழுதியில் மடியும் தருணங்கள்...

மார்க் என்று பட்டியலிட்டு
மதிப்பெண் என்று மதிப்பிட்டு
மதிப்பில்லா உயிர்களில்
மரணத்தினைத் தினிக்கிறது...

படித்தோர் எல்லாம் அறிஞரா
படித்தோர் எல்லாம் பண்பாளரா
படித்து தெரிய பட்டமில்லை
படித்ததைக் காட்ட தான் பட்டம்
படித்ததை சொல்லித் திரிய அல்ல....

புத்தகம் கொடுத்து
புத்தகத்திற்கு சுருக்க உரை கொடுத்து
புத்தகத்தின் வரி பிறழாமல்
புதுமைகளை முடக்கி
புது சிந்தனைகளைச் சிதைத்து
புத்தியினை விற்கும் கூடம்
புதுமை மழுங்கி கிடக்கும் பள்ளிகூடம்....

எழுத்து கூட மாறாமல்
எண்ணம் அது சேர்க்காமல்
எது சொன்னாரோ
எது கற்பித்தாரோ
எதுவாகினும் எழுத்தானால்
எப்படி இருப்பர் மாணவரும் தான்
எழுந்து நின்றும் முடவனாய்
எழுச்சி மறந்து மடையனாய்...

இன்றைய கல்வி நிலை
இளைப்போர் உருவாக்கும்
இளைய சமுதாயம்
இழந்திருக்கும் அறிவினை
இதுவா நாளைய சமுதாயம்
சிந்திப்பீர்...

ஆய்ந்து படித்து
ஆழ்ந்து படித்து
அனுபவத்தில் படித்து
அனுதினமும் படித்து
அக்கறையாய் பகிர்வதே
அறிந்ததின் நோக்கம்...

அறிவோம் அறிவினை
அடுத்தவருக்காக அல்ல
நம்மை நாமே அறிந்து கொள்ள...

Saturday 15 October 2011

தூங்கி கிடக்கும் துக்கங்கள்...


1.        வெறும் கூடு எலும்பிலே
           சதையோடு நரம்பும்
           சின்னமாய் மூளையிட்டு
           பெரிதாய் எண்ணமிட்டு
           வண்ண வண்ண கனவிட்டு
           சில நேர துக்கமிட்டு
           பல நேர நினைவிட்டு
           ஒரு நொடி சந்தோஷம்
           பல நாட்கள் காத்திடுதே
           வாழ்வினை அர்த்தமிடுதே
           வாழ்ந்து பார்ப்பாயே..

2.        அழுது அழுது என் கண்டாய்
           அழுவது வாழ்வென்றா
           துயரமாய் எண்ணியே
           துச்சமாய் மிஞ்சியே
           அச்சமாய் வாழ்ந்தே
           மிச்சமாய் வாழ்தல் வாழ்க்கையோ...

           போராட்டமில்லை வாழ்க்கை
           போராடி தோற்பதற்கோ, ஜெயிப்பதற்கோ
           வாழ்க்கை ஓர் சாலை
           யாரும் பயணிக்கலாம்
           யாருக்கும் பாதையாயிருக்கலாம்
           பயணிப்பவன் பொறுத்து...


3.         துக்கமென்ற ஒன்று தூங்கி கிடக்கு
            தூக்கமின்றி நெஞ்சில் பதுங்கி கிடக்கு
            வரும் என்று காலம் பார்த்திருக்கு
            வந்துடுமோ என துக்கம் காத்திருக்கு...

            துக்கம் பொதுவென்று நெஞ்சு மறந்திருக்கு
            நினைவு படுத்தும் எண்ணம் மறந்திருக்கு - துக்கமாய்
            நினைவே வாழ்க்கையென நினைத்திருக்கு
           அத்தனை சந்தோஷமும் மறைஞ்சிருக்கு...

            சொல் எடுத்து வரும் முன்னே
           வார்த்தை அழுகையாய் வந்திடுமோ என
           வருவதை தடுக்க பொய்யான மனசு காத்திருக்கு
           இதுவும் கடக்குமென்று உள் மனசு 
           சொல்லி சொல்லி மரத்திருக்கு
           தூண்டிவிட நெஞ்சமதை 
           தூண்டில் வரலையே...

           துக்கம் பொதுவென உணர்ந்திடு - இது
           துக்கமே இல்லையென உணர்ந்திடு
           பக்கம் வரும் முன்னே துக்கமதை
           அக்கம் பக்கம் பார்க்காமல்
           அருகாமையில் வைத்திடு
           நித்தம் அதை பாராமல்
           சுத்தமாய் மறந்திடு
           அர்த்தமாய் விடும் வாழ்க்கை தான்...

Monday 10 October 2011

ஆசையாய் ஆசைபடு...


1.     ஆசையாய் ஆசைபடு
         ஆசையால் பார்ப்பதனால்
         ஆசையால் கேட்பதனால்
         ஆசையால் தொடுவதனால்
         ஆசையால் கொடுப்பதனால்
         ஆசையால் எடுப்பதனால்
         ஆசைக்குப் பங்கமில்லை
         ஆசைபடுதலுக்கும் பங்கமில்லை
         ஆசை பேராசை யில்லாமல் இருந்தால்...

         ஆசையாய் ஆசைபடு
         ஆசைத் துன்பமுமில்லை
         ஆசை இன்பமுமில்லை
         ஆசை ஓர் எண்ணம்
         ஆசையை அடைந்தே தீர்வதும் எண்ணம்
         ஆசைக்கு ஆசைபடுவதும் எண்ணம்
         ஆசைக் கிட்டாமல் அழுவதும் எண்ணம்
         ஆசையை அடக்கினால்
         ஆசை நிராசையானாலும்
         அசையாமல் வாழ்க்கை பயணிக்கும் வண்ணம்
         ஆசையை ஆள்வதும் திண்ணம்...

          ஆசையாய் ஆசைபடு
          உன் மட்டுமில்லாமல்
          உலகத் திற்காக ஆசைபடு...


2.        உன் ஆசை வாங்குவதென்றால்
          அவன் ஆசை விற்பதுவே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் ஆசைக்காக

          உன் ஆசை ஜெயிப்பதென்றால்
          உலக ஆசையும் அதுவே
          நியதியாய் ஒருவன் தோற்பதுமே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் (உலக) ஆசைக்காக

         உன் ஆசை கேட்பதென்றால்
         அவன் ஆசை சொல்வதுவோ - இல்லை
         அவன் ஆசை மறுப்பதுவோ - இல்லை
         அவன் ஆசை கொடுப்பதுவோ
         ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்காக அல்ல
        அவன் ஆசைக்காக...


        உன் ஆசை இன்பமென்றால்
        அவன் ஆசையும் அதுவே
        உன் ஆசை அவன் ஆசை
        "நான்" ஆசையென தனியாகாமல் 
        "நாம்" ஆசையென பொதுவானால்
        பிரித்திடுமோ ஆசையும் தான்
        நான் நீ யென சந்தியிலே...

        ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்கும் அல்ல
        அவன் ஆசைக்கும் அல்ல
        உலக ஆசையான பொது ஆசைக்கு
        அமைதியெனும் பெயரெடுத்து...

Sunday 9 October 2011

தன்னை அறியாதது...


1.        தன்னை தானும் அறியாமல்
           தன்னை தனக்கே நோக்காமல்
           தன்னை தாழ்வாய் மதிப்பிட்டு
           தன்னை தரணியில் அழிப்போனே


           தன்னை தரிசாய் பார்க்காமல்
           தன்னை தினுசாய் பார்த்தாலே
           தன்னுள் சக்தி கண்டிடலாம்
           தன்னை தாமும் உயர்த்திடலாம்...

2.        தன்னை துட்சமாய் எண்ணியே
           தன்னை அச்சமாய் பார்க்கும் பதரே
           தன்னை மிஞ்சும் சக்தி உளதோ
           தன்னை விஞ்சும் புத்தி உளதோ
           தன்னை எண்ணி பார்த்திடடா
           தன்னை தானே உணர்ந்த்திடடா
           தன்னை தரணியில் உயர்த்திடடா...

3.        உன் நோக்கி பார்
           உள் நோக்கி பார்
           உம் மனம்நோக்கி பார்
           உன் வினை யாது என பார்
           உன் போன்று உலகில் 
           உளரா எனப் பார்
           உயர்ந்திடலாம் உயர்வாய் நீ....

4.       சிந்தித்துப் பார்ப்போமே 
          சிந்தையிட்டுப் பார்ப்போமே
          சிந்தையில் பார்ப்போமே
          சிந்தனையில் சேர்ப்போமே
          சிறகடித்து சிரிப்போமே
          சின்னமாய் குறுகாமல்...

5.       உணவு உண்டு உடை யுடுத்தி
          உடல் களித்து உயிர் வளர்த்து
          உறக்கம் தந்து உனை மறந்து
          உலகில் வாழும் உயிருள் ஒன்றே
          உன் நோக்கி உன் மனம் நோக்கி
          உள் நோக்கி உள்ளார்ந்து நோக்கி
          உலகில் வலம் வா உன்னையே வென்று வா வா....

6.       ஊனமாய் உனை யாக்கி
          உணவுக்குப் பார மாக்கி
          உறைவிட உறுத்த லாக்கி
          உன்னையே தாழ்த்தி யுருக்கி
          உடலால் உயிர்தல் நலமோ
          உயிரும் உடலுக்குப் பாரமோ....

          உனையுருக்கி உள் நோக்கி
          உன்னுள் விருட்சமாய் விழி நோக்கி
          உன்னுள் உறையும் தாழ் நீக்கி
          உனையும் உயர்த்திட 
          உலகில் உயர்ந்திட வா வா...

 7.      அகமென்று ஒன்றிருக்கு
         அதுக்குள்ளே அறிவிருக்கு
         அறியாத மூடருக்கு
         அழகாய் அழகாய் கனவெதுக்கு...

         அட்டைப் பூச்சியாய்
         அடங்கியிருக்கும் அறிவீலிக்கு
         அஞ்சும் வாழ் வெதற்கு
         அணியா நகை யெதற்கு
         அஞ்சறைப் பெட்டியிலே துஞ்சுவதற்கோ...

Saturday 8 October 2011

சமூக அநீதிகள் - லஞ்சம், அடிப்படை வசதியின்மை (உணவு மற்றும் கழிப்பறை)


A. லஞ்சம்

1.       மனிதன் பழகிவிட்டான்
          மரபுகளில் எழுதிவிட்டான்
          பொருள் கொடுத்து
          பொருள் வாங்கி
          பொருளின் பொருள் உணர்ந்துவிட்டான்...


          மனிதன் பழகிவிட்டான்
          பொருளாய் தனை எண்ணி
          பொருளுக்கு விலை போய் - காட்சி
          பொருளாய் ஆகிவிட்டான் - வீணாய்
          வீணனனாய் விட்டான்
  
2.       வஞ்சம் படைத்த உள்ளம்
          வகுக்கும் பல திட்டம்
          வற்புறுத்தி வகுப்பெடுக்கும்
          வசதியினைத் தருவது போல்
          வன்கொடுமை லஞ்சத்திறகு
          வரிசையாய் பட்டியலிட்டு - தெரியாமல்
          வறுமைக்கு வழி வகுக்கும்
  
B.   அடிப்படை வசதியின்மை

B1.  கழிப்பறை


1.         சுற்றம் பார்த்து
            நாற்றம் தாங்காமல்           
            காற்றும் மறுக்கிறது
            ஏற்றம் இல்லையே
            முற்றம் போக...

2.         கழிக்கச் சென்றேன்
            கழிக்க வேண்டியதை
            கழிக்க இயலவில்லை
            கழிப்பறையும் இல்லை
            கனிந்துவாழ வாழ்விடமும் இல்லை...

3.         கதிர் தோன்றும் கருக்காலில் 
            கருமுள் தோட்டத்தில்
            கழித்தேப் பழகிய நான்
             கழித்துவிட்டனர் கயவர்கள்
            கட்டாய நிலஅபகரிப்பில் - இப்போது
             கழிப்பிடமும் இல்லை
             கழிவறையும் இல்லை...

B2. உணவு

 1.      அரிசியில் பேரிட்டு
          அனுதினமும் படியளக்கும்
          அரிசியினைத் தேடியே
          அறுபதும் தாண்டிவிட்டது...

2.        அயராமல் உழைத்து
           அலுக்காமல் காத்திருந்து
           அரைக்காசு கூலி வாங்கி
           அடுக்களைக்கு வந்தால்
           அரிசி மட்டுமே இலவசம்
           அடுப்பிற்கு விறகு இல்லை
           அரிசி விட்டா வேறு இல்லை...

 3.        திட்டம் போட்டு
            தினம் வாழ
            திகட்டாமல் உழைத்தேனே
            தினுசாய் பெயரிட்டு
            தித்திக்கும் பண்டங்கள்
            திசை நான்கும் விற்கையிலே
            தின்ன சோறு இருக்கு
            தினிக்க வாய் இருக்கு
            தினக்கூலி பத்தலையே
            தின் பண்டம் வாங்கிடவே!!!!

4.         இலவசமாய் அரிசி வருது
            இறங்கி வாங்க வந்தா
            இம்சையாய் குடும்ப அட்டை
            இடுக்கில் கப்பலேறுது
            இருப்புக்கே வழியில்லை
            இருப்பு அட்டைக்கு எங்கே போக
            இன்னைக்கும் பட்டினி தான்
            இறுதிவரைக்கும் இந்த கதை தான்
            இலவசங்கள் சந்தையிலே 
            இளிச்சுக்கிட்டே போகுதே...

5.        ஒருத்தனுக்கு உணவில்லை 
            ஒருத்தன் சொன்னான்
            ஓங்கி உலகம் அழித்திட - இங்கு
            ஒவ்வொருத்தரும் பட்டினியிலே
            ஒவ்வொன்றாய் மடிய
            ஒருத்தரும் இல்லையே - அவன்
             ஒருவன் போல் குரல் கொடுக்க....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...