A. லஞ்சம்
1. மனிதன் பழகிவிட்டான்
மரபுகளில் எழுதிவிட்டான்
பொருள் கொடுத்து
பொருள் வாங்கி
பொருளின் பொருள் உணர்ந்துவிட்டான்...
மனிதன் பழகிவிட்டான்
பொருளாய் தனை எண்ணி
பொருளுக்கு விலை போய் - காட்சி
பொருளாய் ஆகிவிட்டான் - வீணாய்
வீணனனாய் விட்டான்
2. வஞ்சம் படைத்த உள்ளம்
வகுக்கும் பல திட்டம்
வற்புறுத்தி வகுப்பெடுக்கும்
வசதியினைத் தருவது போல்
வன்கொடுமை லஞ்சத்திறகு
வரிசையாய் பட்டியலிட்டு - தெரியாமல்
வறுமைக்கு வழி வகுக்கும்
B. அடிப்படை வசதியின்மை
B1. கழிப்பறை
1. சுற்றம் பார்த்து
நாற்றம் தாங்காமல்
காற்றும் மறுக்கிறது
ஏற்றம் இல்லையே
முற்றம் போக...
2. கழிக்கச் சென்றேன்
கழிக்க வேண்டியதை
கழிக்க இயலவில்லை
கழிப்பறையும் இல்லை
கனிந்துவாழ வாழ்விடமும் இல்லை...
3. கதிர் தோன்றும் கருக்காலில்
கருமுள் தோட்டத்தில்
கழித்தேப் பழகிய நான்
கழித்துவிட்டனர் கயவர்கள்
கட்டாய நிலஅபகரிப்பில் - இப்போது
கழிப்பிடமும் இல்லை
கழிவறையும் இல்லை...
B2. உணவு
1. அரிசியில் பேரிட்டு
அனுதினமும் படியளக்கும்
அரிசியினைத் தேடியே
அறுபதும் தாண்டிவிட்டது...
2. அயராமல் உழைத்து
அலுக்காமல் காத்திருந்து
அரைக்காசு கூலி வாங்கி
அடுக்களைக்கு வந்தால்
அரிசி மட்டுமே இலவசம்
அடுப்பிற்கு விறகு இல்லை
அரிசி விட்டா வேறு இல்லை...
3. திட்டம் போட்டு
தினம் வாழ
திகட்டாமல் உழைத்தேனே
தினுசாய் பெயரிட்டு
தித்திக்கும் பண்டங்கள்
திசை நான்கும் விற்கையிலே
தின்ன சோறு இருக்கு
தினிக்க வாய் இருக்கு
தினக்கூலி பத்தலையே
தின் பண்டம் வாங்கிடவே!!!!
4. இலவசமாய் அரிசி வருது
இறங்கி வாங்க வந்தா
இம்சையாய் குடும்ப அட்டை
இடுக்கில் கப்பலேறுது
இருப்புக்கே வழியில்லை
இருப்பு அட்டைக்கு எங்கே போக
இன்னைக்கும் பட்டினி தான்
இறுதிவரைக்கும் இந்த கதை தான்
இலவசங்கள் சந்தையிலே
இளிச்சுக்கிட்டே போகுதே...
5. ஒருத்தனுக்கு உணவில்லை
ஒருத்தன் சொன்னான்
ஓங்கி உலகம் அழித்திட - இங்கு
ஒவ்வொருத்தரும் பட்டினியிலே
ஒவ்வொன்றாய் மடிய
ஒருத்தரும் இல்லையே - அவன்
ஒருவன் போல் குரல் கொடுக்க....
No comments:
Post a Comment