Monday 6 February 2012

வாழிய வாழியவே...

வாழும் மலரே!
வாழிய நீ பல்லாண்டு
வாழ்த்திப் பாடுகிறேன் நானும்...

வாழும் கலையோடு
வளமும் நலமும் தன்னோடு
வளர்வாய் நீயும் மலராவே!!!

அரும்பே, அறிவே!
அறியா கலை பல தன்னாலே
அருந்தி பருகும் பதமாவே
அருள்வாய் உன் வாய்மொழியாலே
அனுதினமும் பயின்று
அடுத்து அடுத்து பெறுவாய் ஏற்றமுமே...

அழியா கல்வி பயின்று
அதில் முத்திரையும் பதித்து
அற்புதமாய் வாழிய வாழியவே!!!

Friday 3 February 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 6


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் ஆறாம் பாகத்தை தொடர்வோமா

வன்பற் றறுக்கு மருந்தென்று மாயவன் தானுரைத்த
இன்பக் கடலமு தாமென நின்றவிக் கீதைதன்னை
அன்பர்க் குரைப்பவர் கேட்பவர் ஆதரித் தோதுமவர்
துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே - கீதார்த்த ஸங்க்ரகம்
(ஆளவந்தார் மூலத்தை வேதாந்த தேசிகர் தமிழில் பாடியது)

இதுவரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதையின் நோக்கம் மற்றும் எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள் எழுதியுள்ள உரைகளிலிருந்து முன்னுரையாக சிலவற்றைப் பார்த்தோம். இப்போது நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் அத்தியாயங்களில் நுழைந்து அதன் மூலம் மாறாமல் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் பாதையில் நாம் நம் எளிய உரைக்குப் போவோம்.

அந்த பகவான் கிருஷ்ணனை வணங்கி அவன் அருள் வேண்டி, அவன் உரைத்த இந்த அருட்பெரும் கொடையினை உரையாக உரைக்க முயல்வது என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒரு ஆத்ம சோதனையாகும். அந்த பகவான் கிருஷ்ணன் கருணையன்றி இந்த செயல் செய்திட முடியாது, எல்லாம் அவன் செயல். என்னை தூண்டியதும் அவனே, என்னில் இருந்து எழுத்தாய் இயக்குவதும் அவனே. அதனால் இந்த பதிவில் இருக்கும் அல்லது ஏற்கனவே உள்ள பதிவில் ஏதேனும் பிழையிருப்பின் அல்லது குறையிருப்பின் என்னை குறை கூறுங்கள், நிறையிருப்பின் அந்த புகழ் அனைத்தும் பகவான் அவனுக்கே சொந்தம். தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வடிவிலும் அவனே இருந்து அவனே எழுத்தாகி, எண்ணமாகி உருமாறுவதால் அந்த கிருஷ்ணனை வேண்டி இந்த உரையினைத் தொடர்கிறேன்...

நாம் அனைவருக்கே தெரிந்த கதை தான் மகாபாரதம். வீண் ஆசை, அகம்பாவம், பகட்டு, பிறர் மனையாளைக் கேலி செய்தல், கௌரவம், அகங்காரம், தான் எனும் வறட்டு பிடிவாதம், தன்னை மிஞ்சி உலகில் எவருமில்லை எனும் எண்ணம், நல்லாரை இகழ்தல், இழித்து பேசுதல் போன்ற பல துர்செயல்களில் ஈடுபட்ட ஒரு குலத்தாரின் நோக்கத்தால் ஏற்பட்ட போரே குருக்ஷேத்திரப் போர், அந்த குருஷேத்திரப் போரில் அர்ஜூனன் உறவினர்கள், குருமார்கள், சுற்றத்தார்கள் பார்த்து போர் புரிய ஸ்தம்பிக்கும் போது நீதியின் உபதேசமாகவும், ஞான உபதேசமாகவும், அறநெறிகள் உபதேசமாகவும், எல்லாம் வல்ல இறையின் மகிமையினை உரைக்கும் உபதேசமாக அந்த பகவானே எடுத்துரைக்கும் உபதேசம் தான் ஸ்ரீமத் பகவத்கீதை. இந்த ஸ்ரீமத்பகவத்கீதை மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளது, அதில் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம் எனும் பெயர் பெற்றது.

நம் வேதாந்த வித்தகர் ஆச்சாரிய அண்ணா அவர்களின் உரையிலிருந்து முதல் அத்தியாயத்தின் கீதை வெண்பா சொல்லி நம் விளக்கம் போனால் எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

குருநிலத்திலே விசயன் கூடியதன் பாட்டன்
வருகுரவர் மாமன் முதல் மற்றும் - அறியதமர்
யாவரையுங் கண்டிவரை எவ்வாறு கொல்வனென
மேவு துயர் கூறுமிது மிக்கு - கீதை வெண்பா

அதாவது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கு இடையே போர் புரிவது என்று முடிவாகி விட்டது. இருவரும் ஒப்புக்கொண்ட அந்த குருக்ஷேத்திரத்தில் தங்கள் படைகளை நிறுத்தி அங்கு போர் புரியத் தொடங்குவது என்று உறுதிக் கொண்டு வந்தனர். பகவான் கண்ணன் தான் போர் புரிய மாட்டேன் என்று சொல்லி, இருவரில் ஒருவருக்கு உதவுதாகவும், மற்றொருவருக்கு தன் படையினைத் தருவதாக ஒப்புக் கொண்டார். துரியோதணன் அழியும் வீரர்களை பெற்றான், அர்ஜூனனோ அந்த பரம்பொருளை சாரதியாகப் பெற்றான். முதல் வெற்றி பாண்டவர்களுக்கு அங்கேயேத் தொடங்கியது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தில் உள்ள 47 ஸ்லோகங்களில் வேதவியாசரின் அருளால் மதி மந்திரி சஞ்சயன் ஞானக் கண் பெற்று, அருட்பார்வையின் மூலம் களத்தில் நடைபெறும் விஷயங்களை தன் மன்னன் திருதுராஷ்ட்ரனுக்குச் சொல்லும் விதத்தில் தொடங்குகிறது ஸ்ரீமத்பகவத் கீதை. களத்தில் என்ன நடக்கிறது கண்பார்வை இழந்த மன்னன் கேட்க, பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் படையினை எப்படி நிறுத்தியிருக்கிறார்கள் என்று அழகாக விவரித்து, பாண்டவர்கள் பக்கம் யார் யார் இருக்கிறார்கள், கௌரவர்கள் பக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சொல்லி, மேலும் அங்கு துரியோதனன் தன் படைவீரர்களுக்கும், துரோனர், பீஷ்மர் போன்றவர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகள் சொல்லுகிறார். அங்கு துரியோதனன் எப்படி பீஷ்மர், துரோனர் அவர்களிடம் நடந்து கொள்கிறான், தன் படை பலத்தின் பெருமையினைக் கூறுகிறான் என்றும் சொல்கிறார். அப்போது பீஷ்மர் சங்கு எழுப்பி போரினைத் தொடக்கி வைக்க அப்போது பிற கௌரவர்களின் சங்கு நாதம் எவ்வாறு இருக்கிறது என்றும் சொல்கிறார். பாண்டவர்களில் ஒவ்வொருவரின் சங்கு பற்றி அழகாகச் சொல்லி அதன் மகத்துவத்துடன் அவர்கள் எழுப்பிய ஓசை எப்படி கௌரவர்களின் இதயத்தில் ஒரு பயத்தினை ஏற்படுத்தியது என்றும் கூறுகிறார். அர்ஜூனன் தான் போர் புரியப் போகும் கௌரவர்களின் வரிசையில் இருக்கும் தலைவர்கள் பார்க்க விரும்பி அந்த கண்ணனை போர் களத்தின் நடுப்பகுதிக்கு தேரினை செலுத்த சொல்லி, அங்கு பீஷ்மர், துரோனர், துரியோதனன், கர்ணன், கௌரவப் படைகள் பார்த்து இவர்கள் எல்லாம் உறவினர்கள் அல்லவா, ஆசிரியர்கள் அல்லவா.. இவர்களுடன் நான் போர் புரிய மாட்டேன். இவர்களைக் கொன்று அந்த தேசம் தனக்கு தேவையில்லை என்றும், இவர்களின் அழிவால் ஏற்படும் எந்த நல்லதும் தனக்குத் தேவையில்லை என்றும், ஒரு குலத்தினை அழிப்பது பெரும் பாவம் என்றும் அதனால் எத்தகைய இழிவு, இழிப்பெயர் கிடைக்கும் என்றும் சொல்லி, தன் வில்லினை கீழே போட்டு விட்டு, அந்த தேரில் அமர்ந்து விடுவதாக முடிகிறது இந்த முதல் அத்தியாயம்.


நாம் ஒவ்வொருவருமே போர் புரிகிறோம் தினம் தினம். உடல் தான் போர்களம். எண்ணங்கள் தான் போர் புரிகிறது. மனம் திசை மாறி தடுமாறுகிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் அந்த மனம் இங்கே அங்கே என அலை பாய்ந்து ஒரு நிலைக் கொள்ளாமல் தன் நிலை மறந்து ஒரு இருப்புக் கொள்ளாது போராடுகிறது. இந்த நிலையில் வெளியேயும் உள்ளேயேயும் ஏற்படும் சூழ்நிலைப் பொறுத்து மனநிலை இன்பமாகவும் துன்பமாகவும் உருப்பெறுகிறது. நிரந்தரமற்ற இந்த எண்ணத்தின் ஆசையில் மனம் ஒரு நிலை படாமல் இன்பத்தின் மீது மோகம் கொண்டு, துன்பச்செயல்களை தெரிந்தும் தெரியாதது போல் நடித்தும் செய்து இன்புறுகிறது. ஒருவன் மனக்கட்டுப்பாட்டில் தான் அவன் தன்மை புரிய முடியும்.. எவன் ஒருவன் ஆசையினை வெறுக்கிறானோ அவனே பற்றற்று வாழ முடியும். அந்த பற்றற்ற நிலை அவனைப் பக்குவப்படுத்தும்.

ஒருவன் எண்ணற்ற வித்தைகள் கற்றுள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கற்ற வித்தைகள் இந்த உலகில் எவனையும் வீழ்த்தும் அளவிற்கு வல்லமை படைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவன் தான் கற்ற வித்தைகள் மூலம் இந்த உலகில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருந்தாலே நலம். அப்படியில்லாமல் தான் கற்ற வித்தையின் மீது அபார நம்பிக்கை கொண்டு, தீயச் செயல்கள் செய்யத் தொடங்குவானாயின் அவன் தன் முடிவு காலத்தினைத் தொடக்கி வைக்கிறான் என்று அர்த்தம். எப்படி, ஒரு வேளை பெண்ணாசைக் கொண்டு அவன் பிற மனையாளை கவர நினைத்தாலோ அல்லது மோகத்தில் தன் இல்லாளைத் தவிர பிற பெண்களை காம குரோதத்தில் நோக்கினான் என்றால் அந்த நிமிடமே அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது. அந்த பெண் பித்து அவனை அழிவு நோக்கி இழுத்துச் செல்லும். அவனை தகாத செயல்களுக்கு தூண்டும். அவனை ஆசையெனும் பேய் பிடித்துக் கொண்டு அவன் செயல்களில் வன்மம், கோபம், பிடிவாதம், பித்தலாட்டம் எனும் துர்செயல்கள், துர் எண்ணங்கள் பிடித்துக் கொண்டு அவனை அழிவு பாதைக்கு வெகுவிரைவில் இழுத்துச் சென்றுவிடும். இது தான் துரியோதனின் கதை. சகுனியின் பேச்சில் மயங்கி, அவன் வித்தையின் மேல் நம்பிக்கை கொண்டு, அந்த வித்தையின் மூலம் பாண்டவர்கள் சூதுக்கு அழைத்து அதில் அவர்களினை வீழ்த்தி, அடிமைப்படுத்தி, அவர்களின் மனைவியான துரௌபதியினை அவமானப்படுத்தி தன் சாவிற்கு அவன் வழித் தேடி கொண்டான். ஒருவன் தான் அழிவு பாதையில் செல்லும் போது தான் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லது போல் தோன்றும், தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மமதை வரும். தான் என்ற அகங்காரம் வரும், அத்தனையும் துரியோதனனிடம் வந்தது. அதே நேரத்தில் எதிரியின் பலம் தெரிந்து இருக்கும் பட்சத்தில் உள்ளுக்குள்ளே அந்த மனம் புரியாமல் வேதனைப்படும், உண்மையில் புழுங்கும், அவன் மனமே அவனை நச்சரித்து கொன்றுவிடும். அந்த நேரத்தில் அவனை அறியாமல் அவன் உளர ஆரம்பித்துவிடுவான். இதுவும் போர்களத்தில் நடந்தது, துரியோதனன் பீஷ்மரைப் புகழ் துரோனரை இறக்கிச் சொன்னான், துரோனரைப் புகழ் பீஷ்மரை இறக்கிச் சொன்னான், தான் என்ற மமதையிலும் தன் படையின் அளவினை ஒப்பிட்டு தன் அகங்காரத்தினை வெளிப்படுத்தினான்.

அதே நேரத்தில் அனைத்தும் கற்ற வித்தகன் அர்ஜூனன், எந்த நேரத்திலும் தன் மனமாயை வெல்லக் கூடிய சக்தியினைப் பெற்று இருந்த அர்ஜூனன் போர்களத்தின் நடுவில் தேர் வந்தவுடன் எதிரில் இருக்கும் உற்றார்களைப் பார்த்து போர் புரியமாட்டேன் என்று சொன்னான். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

ஒரு வீட்டில் இரு சகோதரர்கள். அவர்களின் பெற்றோர் நல்ல சம்பாதித்து பெரும் சொத்தினைச் சேர்த்து வைத்தார்கள். ஒருவனுக்கு சொத்தின் மீது அளவற்ற பாசம், இளையவனுக்கு சகோதரன் மீது அளவற்ற பாசம். இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் மாண்டு விட்டனர். இப்போது இவர்கள் இருவர் மட்டுமே, சொத்தின் மீது ஆசையுள்ளவன் தன் சகோதரனின் சொத்தையும் சேர்த்து அபகரிக்க நினைக்கிறான். அதற்கு தன்னால் முடிந்த மட்டும் தகாத செயல்கள் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்யும் செயல்கள் சகோதரனை நிலைக் குலைய வைக்கிறது. அந்த சூழ்நிலையிலும் அவன் தன் சகோதரனுக்காகத் தான் பரிந்து பேசுகிறான். இவர்களின் செயல் பார்த்த மூன்றாம் ஒருவன் இந்த இருவரின் சச்சரவில் தான் ஏதாவது அநுபவிக்க முடியுமா என்று பார்க்கிறான். அவன் சொத்து ஆசையுடயவனை வசப்படுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்கிறான். நீதிபதியின் முன் வழக்கு வருகிறது. எதிர்தரப்பில் தன் சகோதரன் தகாத செயல்கள் செய்த போதும் தன் நிலையினை நிலைநாட்டவும், நீதியினை நிலை நாட்டவும் இளையவன் வாதாட வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் நீதியினை நிலை நாட்டாமல் வழக்கினையும் தொடராமல் இளையவன் சோர்ந்து உட்காருவதால் என்ன லாபம் சொல்லுங்கள். நீதியினை நிலைநாட்ட, தர்மத்தினை முன் நிறுத்த நிச்சயம் நாம் ஒவ்வொருவருமே முனைய வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் எதிர்தரப்பில் என் அண்ணன் இருக்கிறான், என் உறவினர்கள் இருக்கிறார்கள் அதனால் நான் வழக்கில் நியாயத்தினை நிலை நாட்ட வாதாடமாட்டேன் என்று சொன்னால் என்னாகும். தீர்ப்பு ஒரு சார அமைந்து விடாதா, அது அநியாயத்திற்கு வித்திட்டு விடாதா. தர்மம் தோற்று விடாதா. சொல்லுங்கள். நீதிபதி என்ன தான் சாராமல் இருந்தாலும் வாதத்தின் அடிப்படையில் தானே நீதியினை நிலை நாட்ட முடியும். உண்மையின் அடிப்படையில் தானே நீதியினை வழங்க முடியும். இருபக்கம் எடுத்துரைக்கும் வாதம் மற்றும் அவர்கள் பக்கம் அதற்கு வழங்கும் ஆதாரம் போன்றவற்றின் மூலம் தானே நீதிபதி தன் தீர்ப்பினைச் சொல்ல முடியும். எதிர் தரப்பில் இருப்பவன் அண்ணன் ஆகையால் நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் நியாயம் வெல்ல வேண்டும் என்று சொன்னால் சரியாக வருமா. சிந்தியுங்கள்.

இது தான் அர்ஜூனனின் மன நிலை, அழியும் உடலின் மீது பற்றுக் கொண்டு, அந்த உடல் தாங்கி நிற்கும் உறவுகளின், ஆச்சார்யர்களின் மீது பற்றுக் கொண்டு, அந்த நிமிடத்தில் போர் புரிய மாட்டேன் என்று தன் உண்மை நிலையினை மறக்கிறான், தன் கர்மத்தினை மறக்கிறான். அவன் செய்ய வேண்டிய தொழிலினை மறக்கிறான். தர்மம் நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையினை மறந்து நிலை குலைந்து போகிறான். அர்ஜூனன் போரிட மாட்டேன் என்று சொல்லி தேரில் அமர, கண்ணன் நியாயத்தினை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறான் என்று சொல்லி முடிகிறது முதல் அத்தியாயம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!


திருமாலின் திருவடியை தினம் நினையும்
பெருமானின் சேவையில் பெருந்தவம் புரியும்
திருவருளால் என்படியும் தன்படியென அறியும்
ஒருவேளையும் மறவாமல் அருள்வாய் பொழியும்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருப்பாவை நவின்று பொருட்பாவை தந்தீரே
திருமாலின் பிரபந்தத்தின் கருத்தாழம் நவிழ்ந்தீரே
திருவடி குருவடி தினம் பணிந்தீரே
திருச்சின்னம் புகழ்பரப்பும் அழகிய சிங்கரே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

புதுமைகள் புதுப்பித்து புதுமடம் தந்தவர்
புன்னகை பெருமானின் பூஜை கண்டவர்
புதுக் கல்வி பெருஞ்சோலை தந்தவர்
புகழ் பரப்பும் வேதபிரபந்தப் பாடசாலை காப்பவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

எழில் பொங்கும் எம்பிரான் நாராயணர்
எழிலாய் அவர்பெயரில் எட்டாய் வந்தவர்
எத்திக்கும் வைணவம் எளிதாய் பரவுவர்
எந்தையில் ராமானுஜ சித்தாந்தம் முனைபவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கருடசைலப் பெருமாளின் கருணை அஹோபிலமே
வருடவரும் தென்றலாம் வர்ண ஜாலமே
கருடகிரி நம்மாழ்வார் வித்திட்ட மாலோலமே
விருட்சத்தின் வழிவரும் மடத்தின் 45வதுபட்டமே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

மூலச் சிங்கர்களின் முத்தாய் அருட்பெற்று
மூன்று சிங்கர்கள் உடன் வரப்பெற்று
மூன்றின் ஒருவராய் வேத வழிப்பெற்று
மூத்த சிங்கரே! அழகிய சிங்கராய் பெயர்பெற்று
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருவள்ளூர் தேர் கொடுத்து பவணிவர
திருப்பத்தி யுலா பெருமானும் சிரித்துவர
திருவரங்க பெருமானின் புகழ் பரவிவர
திருநாடு சஞ்சாரம் ஓர்நாளும்தளராமல் செய்துவர
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கிரந்தங்கள் அவையாவும் பெருமாள் புகழ்பாடல்
கிரந்தங்கள் புகழ்மணக்கும் சபையாவும் உம்மால்
கிரந்தமும் வேதமும் நவிழும் வேதவிற்பன்னர் வாழ்வில்
கிரந்தவேத விற்பன்னரின் இக்காலம் பொற்காலம் உம்மால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

ஆண்டுக்கு இருமுறை வித்வான்களின் வித்வம்
ஆண்டுக்கு நான்குமுறை வேத பாராயணம்
ஆண்டாய் விற்பன்னர் உள்ளங்களின் உள்ளம்
ஆண்டு ஆசியோடு பெரும் பேறு பெற்றனம்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொர்ன மண்டபம் கொலுவிறுக்கும் திருமால்
சொல்லால் இனிக்கும் உப்பிலியப்பனுக்கோ! சொர்னபூணூல்
சொல்லி சொல்லி பூரிக்கிறோம் உந்தன் பெயரால்
சொல்லாமல் விட்டமையோ ஏராளம் உந்தன்அன்பால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொல்லால் பாடி சொல்லவந்தோம் நாடி
சொல்ல சொல்ல மணக்கும் சொற்குவியலோ கோடி
சொல்ல முடியுமா வார்த்தையில் 20ஆண்டுகள் ஓடி
சொல்லில் அள்ளமுடியா அருட்சேவை புரிந்ததைப் பாடி
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

Thursday 2 February 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 5



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலில் நாம் ஆச்சாரியார்கள் மற்றும் மகான்கள் சொன்ன தெளிவுரைகள் சிலவற்றைப் பார்த்தோம். அந்த வரிசையில் நாம் இப்போது கவிஞர்கள், அறிஞர்கள், அறிவுசார் வித்தகர்கள் சொல்லும் சில எளியவுரைகள் பார்ப்போம். அதன் பிறகு நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் எளிய உரையினைத் தொடர்வோம்.

முதலில் நாம் நம் மகாகவி பாரதியார் அவரின் உரையிலிருந்து தொடங்குவோம். மகாகவி பாரதியார் சமஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். கீதை மூல ஸ்லோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தின சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார். அவர் தம் அற்புதமான உரையில்

வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
சரண மன்றி இங்கோர் சரணில்லையே. - பாரதியார்

என்று அழகாகச் சொல்கிறார். பின் “புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம்”

மேலும் அற்புதமான அவர் தம் மொழியில் சொல்லும் இந்த விளக்கத்தினைப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் உணர்ந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.. “ ‘எல்லாம் சிவன் செயல்’ என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? ‘இட்டமுடன்’ என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?’ நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வழியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் ‘தொப்’பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்? ”. ஆஹா என்ன அற்புதமான விளக்கம் பாருங்கள். இதை உணராததால் தான் ஒவ்வொரு மனிதரும் துயரத்தில் ஆட்படுகிறார்கள். ஸ்ரீமத்பகவத்கீதையின் நோக்கமே கர்மம் செய், பலனை எதிர்பார்க்காதே, எல்லாம் அவன் செயல், நீ வெறும் ஆடப்படுபவன் மட்டுமே. ஆட்டுவிப்பவனுக்குத் தெரியும், எதை, எப்படி செய்ய வேண்டும் என்று. ஆகையால் இன்பம் வரும் போது ஆடாமலும், துன்பம் வரும் போது நோகாமலும் சம நோக்கில் எடுத்துக் கொள்ளும் போது மனம் பக்குவப்பட்டுவிடும்.

அடுத்து நம் கவியரசர் கண்ணதாசன் அவர்தம் ஸ்ரீமத்பகவத்கீதையின் விளக்கவுரையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம் “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் அருளிய அருளுரையில் மனிதன், பிறப்பிலிருந்து இறுதிவரை செய்ய வேண்டிய காரியங்கள் விவரிக்கும் கீதையின் கடைசியில், அவரவர் கடமையைச் செய்து பலனைத் தம்மிடம் ஒப்படைத்துவிட்டால் அதைத் தாமே ஏற்றுக்கொண்டு பலனளிப்பதாக பகவான் கூறுகிறார். அஞ்ஞானத்திலிருந்து அர்ஜூனனும் அதிலிருந்து விடுபட்டு அவரது ஆணைப்படி நடக்கத் தனது மனது பக்குவமடைந்து விட்டதாகக் கூறுவதுடன் கீதை முடிவடைகிறது. அறியாமை, மோகம், பேராசை, நான், எனது என்ற அகங்காரம் நீங்கி வாழ்ந்தால், கஷ்டம் குறையும்; விருப்பு, வெறுப்பற்ற முறையில் கடமையாற்றும் போது மனம் நிம்மதியடையும்.” என்று அழகாக கீதையின் மகத்துவத்தை அழகாக விளக்கி கவிஞரின் உரைக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

நம் கவிஞர் தம் முன்னுரையில் இப்படி சொல்கிறார் “முதலில் கண்ணன்  மனிதனா, தெய்வப் புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது. மனிதனாகப் பிறவி எடுத்து, மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது. மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்ட தெய்வம், மனித வாழ்க்கையோடு நேரடித் தொடர்பு கொள்வதில்லை. நேரடித் தொடர்பு கொள்ளாத தெய்வம், மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளில் அவ்வப்போது பங்கு பெறுவதில்லை. மனித சுபாவங்களில் பங்கு பற்றிக் கொண்டு, தெய்வ நிலைக்கு மனிதனை இழுத்துச் செல்லும் பாலமே பரந்தாமன்” என்று அழகாக கண்ணன் தோற்றத்தின் நோக்கத்தினைக் கூறுகிறார். மேலும் “மனிதனின் உணவு வகைகளில் இருந்து வாழ்க்கை முறைவரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்து காட்டி, இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தி, இகத்திலேயே ஜீவாத்மாவைப் பரமாத்மாவாக்க முயல்கிறார் கண்ணன்”.

அவர் தொடர்ந்து தன் முன்னுரையில் இன்னொரு எளிமையான விளக்கம் சொல்கிறார் அது “நல்லது, பகவான் வருணாசிரம தர்மம்பற்றிக் கூறுகிறார், அதை வலியுறுத்துகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே. விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால், “வருணாசிரமம் என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும். வருணாசிரமம் பிரிவு ஜாதிகளில் மேல்தட்டு, கீழ்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல, ஒரு சமூதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள் தாம்.

ஒன்று   :  நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும் கட்டுப்பாட்டையும், கல்வியையும் வளர்ப்பது.

இரண்டு  : போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடம் இருந்து காப்பது

மூன்று   : வாணிகம் தொழில் நடத்தி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது.

நான்கு   :  உடல் உழைப்பை மேற்கொண்டு, குடி இருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள்,உலைக் கூடங்கள்,               அமைத்து மேற்கூறிய மூவகையினருக்கும் உதவுவது. இந்த நாலாவது வகையில் விஞ்ஞானிகள்,
           மருத்துவர்கள் அனைவருமே அடங்குவார்கள்”

என்று நம் கவிஞர் எவ்வளவு எளிமையாக விவரித்துள்ளார் தம் விளக்கவுரையில்..

அடுத்து நம் புலவர் சுப.துளசி, இவர்தம் விளக்கவுரை ஒரு சிறப்புக்குரியது என்னவென்றால், இவர் அனைத்து 729 ஸ்லோகங்களையும் தமிழாக்கம் செய்ததோடு மட்டுமன்றி அதனை இவர்தம் பாணியில் எளிய தமிழில் பாவாக்கம் செய்திருக்கிறார். அவர் தம் முன்னுரையில் “ஒரே நிலையான மனத்துடன், ஒரே நிலையான அறிவைக் கொண்டு, நீ செய்யும் செயலின் பலனை எதிர் நோக்காது எக்காலமும் காலங்களின் தலைவனான என்னைத் தழுவியோர் என்றென்றும் விழுமிய செல்வம் பெற்று வாழ்தலோடு விண்ணவர் உலகையும் ஆள்வர் என்று பின்னிரெண்டாம் அத்தியாயத்தில் கண்ணன் பார்த்தனுக்குப் பகிர்கிறான்” என்று அழகாகச் சொல்கிறார்.

மேலும் “ஓம், தத் ஸத், என்பதன் விளக்கத்தை பதினேழாம் அத்தியாயத்திலும் அதை எங்கெங்கு ஏன்? பயன்படுத்துகிறார்கள் என்பதையும் உணர்த்தினான்: மூவகைக் குணம், மூவகை உணவு, மூவகை யாகம், மூவகைத் தவம், மூவகைத் தானம், சொன்னது இந்த அத்தியாயத்திலே. மூவகை வீரம், மூவகைப் பத்தி தன்னைப் பதினெட்டாவது அதிகாரத்தில் கூறி தன் மனக் கருத்தைப் புலப்படுத்துகிறான். தான் யாரில் யார்? எதனில் எது? பக்தி அவசியமாவது ஏன் என்பதையும் அங்கு அவன் உள்ளங்கை நெல்லியென உணரும் வகையில் புலப்படுத்துகிறான்” என்று அழகாகச் சொல்லுகிறார்.

அடுத்து உரையாசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்தம் உரையிலிருந்து “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய். உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று கீதையில் அருளியிருக்கிறார் பரமாத்மா. பல புகழ் பெற்ற சமஸ்கிருத மேதைகள், மற்றும் பலர் கீதையை தங்கள் மொழியில் மொழி பெயர்த்து மொழிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். நமது தாய்மொழி தமிழிலும் பல நூறு கீதைகள் வெளி வந்துள்ளன... மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கீதையை நன்றாகக் கற்பது கடமையாகும். பத்மநாபனான பரமாத்மாவுடைய முகத்தாமரையால் பொங்கி வந்தது கீதை” என்று சொல்லுகிறார்.

மேலும் அவர்தம் உரையில் “ ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை எழுநூற்று நாற்பத்துஐந்து சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்களை கொண்டது. மனித வாழ்வின் ரகசியத்தைக் கொண்ட கீதையை மனதில் நிலைநிறுத்தி இறைவுணர்வுடன் இருந்தால் அதுவே இறைவனைச் சென்றடையும் வழியாகும்” என்று இவர்தம் உரையில் விளக்கியுள்ளார்.

எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், மேதைகள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

நாளை முதல் ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களின் அடிப்படையில் எண்ணற்ற உரைகளின் மேற்கோள்களின் வழிகாட்டுதல் படியும் நாம் நம் எளியவுரைக்குச் செல்வோம் நண்பர்களே!

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...