ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று தொழுது
பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் ஆறாம் பாகத்தை தொடர்வோமா
வன்பற் றறுக்கு மருந்தென்று மாயவன் தானுரைத்த
இன்பக் கடலமு தாமென நின்றவிக் கீதைதன்னை
அன்பர்க் குரைப்பவர் கேட்பவர் ஆதரித் தோதுமவர்
துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே - கீதார்த்த ஸங்க்ரகம்
(ஆளவந்தார் மூலத்தை வேதாந்த தேசிகர் தமிழில் பாடியது)
இதுவரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதையின் நோக்கம் மற்றும் எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள் எழுதியுள்ள உரைகளிலிருந்து முன்னுரையாக சிலவற்றைப் பார்த்தோம். இப்போது நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் அத்தியாயங்களில் நுழைந்து அதன் மூலம் மாறாமல் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் பாதையில் நாம் நம் எளிய உரைக்குப் போவோம்.
அந்த பகவான் கிருஷ்ணனை வணங்கி அவன் அருள் வேண்டி, அவன் உரைத்த இந்த அருட்பெரும் கொடையினை உரையாக உரைக்க முயல்வது என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒரு ஆத்ம சோதனையாகும். அந்த பகவான் கிருஷ்ணன் கருணையன்றி இந்த செயல் செய்திட முடியாது, எல்லாம் அவன் செயல். என்னை தூண்டியதும் அவனே, என்னில் இருந்து எழுத்தாய் இயக்குவதும் அவனே. அதனால் இந்த பதிவில் இருக்கும் அல்லது ஏற்கனவே உள்ள பதிவில் ஏதேனும் பிழையிருப்பின் அல்லது குறையிருப்பின் என்னை குறை கூறுங்கள், நிறையிருப்பின் அந்த புகழ் அனைத்தும் பகவான் அவனுக்கே சொந்தம். தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வடிவிலும் அவனே இருந்து அவனே எழுத்தாகி, எண்ணமாகி உருமாறுவதால் அந்த கிருஷ்ணனை வேண்டி இந்த உரையினைத் தொடர்கிறேன்...
நாம் அனைவருக்கே தெரிந்த கதை தான் மகாபாரதம். வீண் ஆசை, அகம்பாவம், பகட்டு, பிறர் மனையாளைக் கேலி செய்தல், கௌரவம், அகங்காரம், தான் எனும் வறட்டு பிடிவாதம், தன்னை மிஞ்சி உலகில் எவருமில்லை எனும் எண்ணம், நல்லாரை இகழ்தல், இழித்து பேசுதல் போன்ற பல துர்செயல்களில் ஈடுபட்ட ஒரு குலத்தாரின் நோக்கத்தால் ஏற்பட்ட போரே குருக்ஷேத்திரப் போர், அந்த குருஷேத்திரப் போரில் அர்ஜூனன் உறவினர்கள், குருமார்கள், சுற்றத்தார்கள் பார்த்து போர் புரிய ஸ்தம்பிக்கும் போது நீதியின் உபதேசமாகவும், ஞான உபதேசமாகவும், அறநெறிகள் உபதேசமாகவும், எல்லாம் வல்ல இறையின் மகிமையினை உரைக்கும் உபதேசமாக அந்த பகவானே எடுத்துரைக்கும் உபதேசம் தான் ஸ்ரீமத் பகவத்கீதை. இந்த ஸ்ரீமத்பகவத்கீதை மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளது, அதில் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம் எனும் பெயர் பெற்றது.
நம் வேதாந்த வித்தகர் ஆச்சாரிய அண்ணா அவர்களின் உரையிலிருந்து முதல் அத்தியாயத்தின் கீதை வெண்பா சொல்லி நம் விளக்கம் போனால் எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
குருநிலத்திலே விசயன் கூடியதன் பாட்டன்
வருகுரவர் மாமன் முதல் மற்றும் - அறியதமர்
யாவரையுங் கண்டிவரை எவ்வாறு கொல்வனென
மேவு துயர் கூறுமிது மிக்கு - கீதை வெண்பா
அதாவது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கு இடையே போர் புரிவது என்று முடிவாகி விட்டது. இருவரும் ஒப்புக்கொண்ட அந்த குருக்ஷேத்திரத்தில் தங்கள் படைகளை நிறுத்தி அங்கு போர் புரியத் தொடங்குவது என்று உறுதிக் கொண்டு வந்தனர். பகவான் கண்ணன் தான் போர் புரிய மாட்டேன் என்று சொல்லி, இருவரில் ஒருவருக்கு உதவுதாகவும், மற்றொருவருக்கு தன் படையினைத் தருவதாக ஒப்புக் கொண்டார். துரியோதணன் அழியும் வீரர்களை பெற்றான், அர்ஜூனனோ அந்த பரம்பொருளை சாரதியாகப் பெற்றான். முதல் வெற்றி பாண்டவர்களுக்கு அங்கேயேத் தொடங்கியது.
ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தில் உள்ள 47 ஸ்லோகங்களில் வேதவியாசரின் அருளால் மதி மந்திரி சஞ்சயன் ஞானக் கண் பெற்று, அருட்பார்வையின் மூலம் களத்தில் நடைபெறும் விஷயங்களை தன் மன்னன் திருதுராஷ்ட்ரனுக்குச் சொல்லும் விதத்தில் தொடங்குகிறது ஸ்ரீமத்பகவத் கீதை. களத்தில் என்ன நடக்கிறது கண்பார்வை இழந்த மன்னன் கேட்க, பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் படையினை எப்படி நிறுத்தியிருக்கிறார்கள் என்று அழகாக விவரித்து, பாண்டவர்கள் பக்கம் யார் யார் இருக்கிறார்கள், கௌரவர்கள் பக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சொல்லி, மேலும் அங்கு துரியோதனன் தன் படைவீரர்களுக்கும், துரோனர், பீஷ்மர் போன்றவர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகள் சொல்லுகிறார். அங்கு துரியோதனன் எப்படி பீஷ்மர், துரோனர் அவர்களிடம் நடந்து கொள்கிறான், தன் படை பலத்தின் பெருமையினைக் கூறுகிறான் என்றும் சொல்கிறார். அப்போது பீஷ்மர் சங்கு எழுப்பி போரினைத் தொடக்கி வைக்க அப்போது பிற கௌரவர்களின் சங்கு நாதம் எவ்வாறு இருக்கிறது என்றும் சொல்கிறார். பாண்டவர்களில் ஒவ்வொருவரின் சங்கு பற்றி அழகாகச் சொல்லி அதன் மகத்துவத்துடன் அவர்கள் எழுப்பிய ஓசை எப்படி கௌரவர்களின் இதயத்தில் ஒரு பயத்தினை ஏற்படுத்தியது என்றும் கூறுகிறார். அர்ஜூனன் தான் போர் புரியப் போகும் கௌரவர்களின் வரிசையில் இருக்கும் தலைவர்கள் பார்க்க விரும்பி அந்த கண்ணனை போர் களத்தின் நடுப்பகுதிக்கு தேரினை செலுத்த சொல்லி, அங்கு பீஷ்மர், துரோனர், துரியோதனன், கர்ணன், கௌரவப் படைகள் பார்த்து இவர்கள் எல்லாம் உறவினர்கள் அல்லவா, ஆசிரியர்கள் அல்லவா.. இவர்களுடன் நான் போர் புரிய மாட்டேன். இவர்களைக் கொன்று அந்த தேசம் தனக்கு தேவையில்லை என்றும், இவர்களின் அழிவால் ஏற்படும் எந்த நல்லதும் தனக்குத் தேவையில்லை என்றும், ஒரு குலத்தினை அழிப்பது பெரும் பாவம் என்றும் அதனால் எத்தகைய இழிவு, இழிப்பெயர் கிடைக்கும் என்றும் சொல்லி, தன் வில்லினை கீழே போட்டு விட்டு, அந்த தேரில் அமர்ந்து விடுவதாக முடிகிறது இந்த முதல் அத்தியாயம்.
நாம் ஒவ்வொருவருமே போர் புரிகிறோம் தினம் தினம். உடல் தான் போர்களம். எண்ணங்கள் தான் போர் புரிகிறது. மனம் திசை மாறி தடுமாறுகிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் அந்த மனம் இங்கே அங்கே என அலை பாய்ந்து ஒரு நிலைக் கொள்ளாமல் தன் நிலை மறந்து ஒரு இருப்புக் கொள்ளாது போராடுகிறது. இந்த நிலையில் வெளியேயும் உள்ளேயேயும் ஏற்படும் சூழ்நிலைப் பொறுத்து மனநிலை இன்பமாகவும் துன்பமாகவும் உருப்பெறுகிறது. நிரந்தரமற்ற இந்த எண்ணத்தின் ஆசையில் மனம் ஒரு நிலை படாமல் இன்பத்தின் மீது மோகம் கொண்டு, துன்பச்செயல்களை தெரிந்தும் தெரியாதது போல் நடித்தும் செய்து இன்புறுகிறது. ஒருவன் மனக்கட்டுப்பாட்டில் தான் அவன் தன்மை புரிய முடியும்.. எவன் ஒருவன் ஆசையினை வெறுக்கிறானோ அவனே பற்றற்று வாழ முடியும். அந்த பற்றற்ற நிலை அவனைப் பக்குவப்படுத்தும்.
ஒருவன் எண்ணற்ற வித்தைகள் கற்றுள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கற்ற வித்தைகள் இந்த உலகில் எவனையும் வீழ்த்தும் அளவிற்கு வல்லமை படைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவன் தான் கற்ற வித்தைகள் மூலம் இந்த உலகில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருந்தாலே நலம். அப்படியில்லாமல் தான் கற்ற வித்தையின் மீது அபார நம்பிக்கை கொண்டு, தீயச் செயல்கள் செய்யத் தொடங்குவானாயின் அவன் தன் முடிவு காலத்தினைத் தொடக்கி வைக்கிறான் என்று அர்த்தம். எப்படி, ஒரு வேளை பெண்ணாசைக் கொண்டு அவன் பிற மனையாளை கவர நினைத்தாலோ அல்லது மோகத்தில் தன் இல்லாளைத் தவிர பிற பெண்களை காம குரோதத்தில் நோக்கினான் என்றால் அந்த நிமிடமே அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது. அந்த பெண் பித்து அவனை அழிவு நோக்கி இழுத்துச் செல்லும். அவனை தகாத செயல்களுக்கு தூண்டும். அவனை ஆசையெனும் பேய் பிடித்துக் கொண்டு அவன் செயல்களில் வன்மம், கோபம், பிடிவாதம், பித்தலாட்டம் எனும் துர்செயல்கள், துர் எண்ணங்கள் பிடித்துக் கொண்டு அவனை அழிவு பாதைக்கு வெகுவிரைவில் இழுத்துச் சென்றுவிடும். இது தான் துரியோதனின் கதை. சகுனியின் பேச்சில் மயங்கி, அவன் வித்தையின் மேல் நம்பிக்கை கொண்டு, அந்த வித்தையின் மூலம் பாண்டவர்கள் சூதுக்கு அழைத்து அதில் அவர்களினை வீழ்த்தி, அடிமைப்படுத்தி, அவர்களின் மனைவியான துரௌபதியினை அவமானப்படுத்தி தன் சாவிற்கு அவன் வழித் தேடி கொண்டான். ஒருவன் தான் அழிவு பாதையில் செல்லும் போது தான் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லது போல் தோன்றும், தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மமதை வரும். தான் என்ற அகங்காரம் வரும், அத்தனையும் துரியோதனனிடம் வந்தது. அதே நேரத்தில் எதிரியின் பலம் தெரிந்து இருக்கும் பட்சத்தில் உள்ளுக்குள்ளே அந்த மனம் புரியாமல் வேதனைப்படும், உண்மையில் புழுங்கும், அவன் மனமே அவனை நச்சரித்து கொன்றுவிடும். அந்த நேரத்தில் அவனை அறியாமல் அவன் உளர ஆரம்பித்துவிடுவான். இதுவும் போர்களத்தில் நடந்தது, துரியோதனன் பீஷ்மரைப் புகழ் துரோனரை இறக்கிச் சொன்னான், துரோனரைப் புகழ் பீஷ்மரை இறக்கிச் சொன்னான், தான் என்ற மமதையிலும் தன் படையின் அளவினை ஒப்பிட்டு தன் அகங்காரத்தினை வெளிப்படுத்தினான்.
அதே நேரத்தில் அனைத்தும் கற்ற வித்தகன் அர்ஜூனன், எந்த நேரத்திலும் தன் மனமாயை வெல்லக் கூடிய சக்தியினைப் பெற்று இருந்த அர்ஜூனன் போர்களத்தின் நடுவில் தேர் வந்தவுடன் எதிரில் இருக்கும் உற்றார்களைப் பார்த்து போர் புரியமாட்டேன் என்று சொன்னான். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...
ஒரு வீட்டில் இரு சகோதரர்கள். அவர்களின் பெற்றோர் நல்ல சம்பாதித்து பெரும் சொத்தினைச் சேர்த்து வைத்தார்கள். ஒருவனுக்கு சொத்தின் மீது அளவற்ற பாசம், இளையவனுக்கு சகோதரன் மீது அளவற்ற பாசம். இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் மாண்டு விட்டனர். இப்போது இவர்கள் இருவர் மட்டுமே, சொத்தின் மீது ஆசையுள்ளவன் தன் சகோதரனின் சொத்தையும் சேர்த்து அபகரிக்க நினைக்கிறான். அதற்கு தன்னால் முடிந்த மட்டும் தகாத செயல்கள் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்யும் செயல்கள் சகோதரனை நிலைக் குலைய வைக்கிறது. அந்த சூழ்நிலையிலும் அவன் தன் சகோதரனுக்காகத் தான் பரிந்து பேசுகிறான். இவர்களின் செயல் பார்த்த மூன்றாம் ஒருவன் இந்த இருவரின் சச்சரவில் தான் ஏதாவது அநுபவிக்க முடியுமா என்று பார்க்கிறான். அவன் சொத்து ஆசையுடயவனை வசப்படுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்கிறான். நீதிபதியின் முன் வழக்கு வருகிறது. எதிர்தரப்பில் தன் சகோதரன் தகாத செயல்கள் செய்த போதும் தன் நிலையினை நிலைநாட்டவும், நீதியினை நிலை நாட்டவும் இளையவன் வாதாட வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் நீதியினை நிலை நாட்டாமல் வழக்கினையும் தொடராமல் இளையவன் சோர்ந்து உட்காருவதால் என்ன லாபம் சொல்லுங்கள். நீதியினை நிலைநாட்ட, தர்மத்தினை முன் நிறுத்த நிச்சயம் நாம் ஒவ்வொருவருமே முனைய வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் எதிர்தரப்பில் என் அண்ணன் இருக்கிறான், என் உறவினர்கள் இருக்கிறார்கள் அதனால் நான் வழக்கில் நியாயத்தினை நிலை நாட்ட வாதாடமாட்டேன் என்று சொன்னால் என்னாகும். தீர்ப்பு ஒரு சார அமைந்து விடாதா, அது அநியாயத்திற்கு வித்திட்டு விடாதா. தர்மம் தோற்று விடாதா. சொல்லுங்கள். நீதிபதி என்ன தான் சாராமல் இருந்தாலும் வாதத்தின் அடிப்படையில் தானே நீதியினை நிலை நாட்ட முடியும். உண்மையின் அடிப்படையில் தானே நீதியினை வழங்க முடியும். இருபக்கம் எடுத்துரைக்கும் வாதம் மற்றும் அவர்கள் பக்கம் அதற்கு வழங்கும் ஆதாரம் போன்றவற்றின் மூலம் தானே நீதிபதி தன் தீர்ப்பினைச் சொல்ல முடியும். எதிர் தரப்பில் இருப்பவன் அண்ணன் ஆகையால் நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் நியாயம் வெல்ல வேண்டும் என்று சொன்னால் சரியாக வருமா. சிந்தியுங்கள்.
இது தான் அர்ஜூனனின் மன நிலை, அழியும் உடலின் மீது பற்றுக் கொண்டு, அந்த உடல் தாங்கி நிற்கும் உறவுகளின், ஆச்சார்யர்களின் மீது பற்றுக் கொண்டு, அந்த நிமிடத்தில் போர் புரிய மாட்டேன் என்று தன் உண்மை நிலையினை மறக்கிறான், தன் கர்மத்தினை மறக்கிறான். அவன் செய்ய வேண்டிய தொழிலினை மறக்கிறான். தர்மம் நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையினை மறந்து நிலை குலைந்து போகிறான். அர்ஜூனன் போரிட மாட்டேன் என்று சொல்லி தேரில் அமர, கண்ணன் நியாயத்தினை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறான் என்று சொல்லி முடிகிறது முதல் அத்தியாயம்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்
No comments:
Post a Comment