ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று தொழுது
பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலில் நாம் ஆச்சாரியார்கள் மற்றும் மகான்கள் சொன்ன தெளிவுரைகள் சிலவற்றைப் பார்த்தோம். அந்த வரிசையில் நாம் இப்போது கவிஞர்கள், அறிஞர்கள், அறிவுசார் வித்தகர்கள் சொல்லும் சில எளியவுரைகள் பார்ப்போம். அதன் பிறகு நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் எளிய உரையினைத் தொடர்வோம்.
முதலில் நாம் நம் மகாகவி பாரதியார் அவரின் உரையிலிருந்து தொடங்குவோம். மகாகவி பாரதியார் சமஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். கீதை மூல ஸ்லோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தின சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார். அவர் தம் அற்புதமான உரையில்
வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
சரண மன்றி இங்கோர் சரணில்லையே. - பாரதியார்
என்று அழகாகச் சொல்கிறார். பின் “புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம்”
மேலும் அற்புதமான அவர் தம் மொழியில் சொல்லும் இந்த விளக்கத்தினைப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் உணர்ந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.. “ ‘எல்லாம் சிவன் செயல்’ என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? ‘இட்டமுடன்’ என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?’ நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வழியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் ‘தொப்’பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்? ”. ஆஹா என்ன அற்புதமான விளக்கம் பாருங்கள். இதை உணராததால் தான் ஒவ்வொரு மனிதரும் துயரத்தில் ஆட்படுகிறார்கள். ஸ்ரீமத்பகவத்கீதையின் நோக்கமே கர்மம் செய், பலனை எதிர்பார்க்காதே, எல்லாம் அவன் செயல், நீ வெறும் ஆடப்படுபவன் மட்டுமே. ஆட்டுவிப்பவனுக்குத் தெரியும், எதை, எப்படி செய்ய வேண்டும் என்று. ஆகையால் இன்பம் வரும் போது ஆடாமலும், துன்பம் வரும் போது நோகாமலும் சம நோக்கில் எடுத்துக் கொள்ளும் போது மனம் பக்குவப்பட்டுவிடும்.
அடுத்து நம் கவியரசர் கண்ணதாசன் அவர்தம் ஸ்ரீமத்பகவத்கீதையின் விளக்கவுரையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம் “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் அருளிய அருளுரையில் மனிதன், பிறப்பிலிருந்து இறுதிவரை செய்ய வேண்டிய காரியங்கள் விவரிக்கும் கீதையின் கடைசியில், அவரவர் கடமையைச் செய்து பலனைத் தம்மிடம் ஒப்படைத்துவிட்டால் அதைத் தாமே ஏற்றுக்கொண்டு பலனளிப்பதாக பகவான் கூறுகிறார். அஞ்ஞானத்திலிருந்து அர்ஜூனனும் அதிலிருந்து விடுபட்டு அவரது ஆணைப்படி நடக்கத் தனது மனது பக்குவமடைந்து விட்டதாகக் கூறுவதுடன் கீதை முடிவடைகிறது. அறியாமை, மோகம், பேராசை, நான், எனது என்ற அகங்காரம் நீங்கி வாழ்ந்தால், கஷ்டம் குறையும்; விருப்பு, வெறுப்பற்ற முறையில் கடமையாற்றும் போது மனம் நிம்மதியடையும்.” என்று அழகாக கீதையின் மகத்துவத்தை அழகாக விளக்கி கவிஞரின் உரைக்கு அருளாசி வழங்கியுள்ளார்.
நம் கவிஞர் தம் முன்னுரையில் இப்படி சொல்கிறார் “முதலில் கண்ணன் மனிதனா, தெய்வப் புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது. மனிதனாகப் பிறவி எடுத்து, மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது. மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்ட தெய்வம், மனித வாழ்க்கையோடு நேரடித் தொடர்பு கொள்வதில்லை. நேரடித் தொடர்பு கொள்ளாத தெய்வம், மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளில் அவ்வப்போது பங்கு பெறுவதில்லை. மனித சுபாவங்களில் பங்கு பற்றிக் கொண்டு, தெய்வ நிலைக்கு மனிதனை இழுத்துச் செல்லும் பாலமே பரந்தாமன்” என்று அழகாக கண்ணன் தோற்றத்தின் நோக்கத்தினைக் கூறுகிறார். மேலும் “மனிதனின் உணவு வகைகளில் இருந்து வாழ்க்கை முறைவரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்து காட்டி, இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தி, இகத்திலேயே ஜீவாத்மாவைப் பரமாத்மாவாக்க முயல்கிறார் கண்ணன்”.
அவர் தொடர்ந்து தன் முன்னுரையில் இன்னொரு எளிமையான விளக்கம் சொல்கிறார் அது “நல்லது, பகவான் வருணாசிரம தர்மம்பற்றிக் கூறுகிறார், அதை வலியுறுத்துகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே. விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால், “வருணாசிரமம் என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும். வருணாசிரமம் பிரிவு ஜாதிகளில் மேல்தட்டு, கீழ்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல, ஒரு சமூதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள் தாம்.
ஒன்று : நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும் கட்டுப்பாட்டையும், கல்வியையும் வளர்ப்பது.
இரண்டு : போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடம் இருந்து காப்பது
மூன்று : வாணிகம் தொழில் நடத்தி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது.
நான்கு : உடல் உழைப்பை மேற்கொண்டு, குடி இருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள்,உலைக் கூடங்கள், அமைத்து மேற்கூறிய மூவகையினருக்கும் உதவுவது. இந்த நாலாவது வகையில் விஞ்ஞானிகள்,
மருத்துவர்கள் அனைவருமே அடங்குவார்கள்”
என்று நம் கவிஞர் எவ்வளவு எளிமையாக விவரித்துள்ளார் தம் விளக்கவுரையில்..
அடுத்து நம் புலவர் சுப.துளசி, இவர்தம் விளக்கவுரை ஒரு சிறப்புக்குரியது என்னவென்றால், இவர் அனைத்து 729 ஸ்லோகங்களையும் தமிழாக்கம் செய்ததோடு மட்டுமன்றி அதனை இவர்தம் பாணியில் எளிய தமிழில் பாவாக்கம் செய்திருக்கிறார். அவர் தம் முன்னுரையில் “ஒரே நிலையான மனத்துடன், ஒரே நிலையான அறிவைக் கொண்டு, நீ செய்யும் செயலின் பலனை எதிர் நோக்காது எக்காலமும் காலங்களின் தலைவனான என்னைத் தழுவியோர் என்றென்றும் விழுமிய செல்வம் பெற்று வாழ்தலோடு விண்ணவர் உலகையும் ஆள்வர் என்று பின்னிரெண்டாம் அத்தியாயத்தில் கண்ணன் பார்த்தனுக்குப் பகிர்கிறான்” என்று அழகாகச் சொல்கிறார்.
மேலும் “ஓம், தத் ஸத், என்பதன் விளக்கத்தை பதினேழாம் அத்தியாயத்திலும் அதை எங்கெங்கு ஏன்? பயன்படுத்துகிறார்கள் என்பதையும் உணர்த்தினான்: மூவகைக் குணம், மூவகை உணவு, மூவகை யாகம், மூவகைத் தவம், மூவகைத் தானம், சொன்னது இந்த அத்தியாயத்திலே. மூவகை வீரம், மூவகைப் பத்தி தன்னைப் பதினெட்டாவது அதிகாரத்தில் கூறி தன் மனக் கருத்தைப் புலப்படுத்துகிறான். தான் யாரில் யார்? எதனில் எது? பக்தி அவசியமாவது ஏன் என்பதையும் அங்கு அவன் உள்ளங்கை நெல்லியென உணரும் வகையில் புலப்படுத்துகிறான்” என்று அழகாகச் சொல்லுகிறார்.
அடுத்து உரையாசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்தம் உரையிலிருந்து “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய். உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று கீதையில் அருளியிருக்கிறார் பரமாத்மா. பல புகழ் பெற்ற சமஸ்கிருத மேதைகள், மற்றும் பலர் கீதையை தங்கள் மொழியில் மொழி பெயர்த்து மொழிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். நமது தாய்மொழி தமிழிலும் பல நூறு கீதைகள் வெளி வந்துள்ளன... மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கீதையை நன்றாகக் கற்பது கடமையாகும். பத்மநாபனான பரமாத்மாவுடைய முகத்தாமரையால் பொங்கி வந்தது கீதை” என்று சொல்லுகிறார்.
மேலும் அவர்தம் உரையில் “ ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை எழுநூற்று நாற்பத்துஐந்து சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்களை கொண்டது. மனித வாழ்வின் ரகசியத்தைக் கொண்ட கீதையை மனதில் நிலைநிறுத்தி இறைவுணர்வுடன் இருந்தால் அதுவே இறைவனைச் சென்றடையும் வழியாகும்” என்று இவர்தம் உரையில் விளக்கியுள்ளார்.
எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், மேதைகள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்
நாளை முதல் ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களின் அடிப்படையில் எண்ணற்ற உரைகளின் மேற்கோள்களின் வழிகாட்டுதல் படியும் நாம் நம் எளியவுரைக்குச் செல்வோம் நண்பர்களே!
No comments:
Post a Comment