ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 3
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று தொழுது
பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் மூன்றாம் பாகத்தை தொடர்வோமா
ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். பிறகு கர்மம் என்றால் என்ன என்றும், ஆளுமைக்கு உட்படாதது எதுவுமே பௌதிக இயற்கையில் இல்லை என்றும், குணங்களின் வகைகள் என்னவென்றும் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக
இந்த பௌதிக இயற்கையில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் இங்கேயே தோன்றி இங்கேயே முடிவதை நாம் காண்கிறோம் அல்லவா, உதாரணமாக ஒரு பழம் எடுத்துக்கொண்டோமேயானால் அது இங்கேயேத் தோன்றி அது இங்கேயே அழுகி அது இங்கேயே தன்னை முடிவுக்கு கொண்டு வருகிறது, அப்படிப்பட்ட இந்த நிச்சயமற்ற உலகிற்கு அப்பால் “சநாதனம்” என்று அழைக்கப்படும் நித்தியமான வேறு ஒரு இயற்கையை உடைய ஒரு உலகம் விவரிக்கிறது. இதையே ஸ்ரீராமானூஜாச்சாரியார் ஆரம்பமும் முடிவும் அற்றது என்று சொல்கிறார். இதை எப்படி சொல்வது என்றால் நெருப்பில் இருந்து எப்படி வெம்மையினைப் பிரிக்க முடியாதோ அல்லது நீரிலிருந்து திரவத்தன்மையினைப் பிரிக்க முடியாதோ அது போல் ஒவ்வொரு ஜீவன்களுக்கும் சநாதன தர்மமானது நித்தியமாய் ஜீவனுடன் இணைந்திருக்கிறது. அது என்னவென்று எளிமையாக பார்ப்போமேயானால் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தர்மம் வகுக்கப்பட்டிருக்கிறது அதாவது ஒரு நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.
அது எப்படி என்றால் ஒரு நிறுவனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதில் ஒருவன் முதலாளி என்றும், பிறர் வேலை செய்யும் ஊழியர்கள் என்றும் இன்னும் பிறர் அதோடு வர்த்தகம் செய்வோர் என்றும் இன்னும் பிறர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றும் இருக்கிறார்கள். ஆக ஒருவனின் நியதி அல்லது தர்மம் மற்றவனைச் சார்ந்து வருகிறது. இன்னும் எளிமையாக விளக்க முயன்றால் ஒரு வீட்டில் சமையல் செய்யப்படுகிறது. அதைச் செய்யும் மனைவி அதை ஒரு ஆத்ம திருப்தியுடன், பரிபூரண சந்தோசத்துடன் செய்யாமல் இருக்கும் போது அந்த உணவே தோஷமாகி விடுகிறது. அதுவே அந்த மனைவி சந்தோஷத்துடன், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உணவளித்து உபசரித்து, தன் வீட்டில் உள்ள அனைவரும் உண்டபின் அவள் உட்கொள்ளும் போது அந்த உணவு பிரசாதமாகி அந்த வீட்டிலே சுபிட்ஷம் உண்டாகிறது. எல்லையற்ற மகிழ்ச்சி திளைக்கிறது. ஆக நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் யாகம் செய்து கொண்டு தான் இருக்கிறோம், எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். வெறும் நெருப்பினை வளர்ப்பதும் அதுவே ஆத்ம திருப்தியுடன் வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நமக்கு புரியும் போது நமது வாழ்வு அர்த்தமாகிறது.
சரி, நாம் சநாதன தர்மம் என்றால் என்னவென்று பார்த்தோம். ஜீவாத்மாக்களின் வாழி என்று பகவான் சொல்லுகிறார் அதையும் எளிமையாக பகவானே விளக்குகிறார் ஸ்ரீமத்பகவத்கீதையில், பதினைந்தாம் அத்தியாயத்தில் பௌதிக உலகின் உண்மைச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊர்த்வமூலமத: ஸாகமஸ் வத்தம் ப்ராஹுரவ்யயம் |
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேதஸ வேதவித் || 15- 1||
இந்த பௌதிக உலகம் வேர்களை மேலும் கிளைகளைக் கீழும் கொண்ட மரமாக வர்ணிக்கப்படுகிறது. அது எப்படி, ஒரு நீர்த்தேக்கத்தில் மரத்தினைப் பார்க்கும் போது மரங்கள் தலைகீழாக நிற்பதைக் காணலாம், அதன் கிளைகள் கீழே செல்ல, வேர்கள் மேல் நோக்கி இருக்கின்றன. ஆன்மீக உலகின் பிரதிபலிப்பேயாகும். இவ்வுலகம் உண்மையின் நிழலே, நிழலின் உண்மையோ, ஆதாரமோ இல்லை. ஆனால் நிழலிருந்து பொருளையும் அதன் உண்மையையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா. அதையும் பகவானே எளிமையாக விளக்குகிறார்.
நிர்மாநமோஹா ஜிதஸங்க தோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த் வைர்விமுக்தா: ஸுகது: கஸம்ஜ்ஞைர்கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் || 15- 5||
சரி நாம் எப்படி இந்த் ஆன்மீக உலகினை அடைவது என்பதற்கு தான் பகவான் இந்த விளக்கத்தைச் சொல்கிறார். ஒருவன் தலைவனாகவும், ஒருவன் நிலப்பிரபுவாகவும், ஒருவன் பணக்காரனாகவும், ஒருவன் பிரதமராகவும், ஒருவன் அமைச்சனாகவும் இப்படி ஏதோ ஒரு உயர் நிலையினை அடைய ஒவ்வொரும் பெற விரும்புகின்றனர். நிலையற்ற இந்த உடலின் மீது பற்றுக் கொண்டு அந்த உடலின் இச்சையினைத் தீர்க்க தங்களது கடமைகளிலிருந்து விடுபட்டு அவர்கள் கட்டுப்பாடற்ற ஆசையில் துடிக்கிறான், அப்படி இந்த உடல் மீது உள்ள விருப்பினை விட்டு அந்த பரபிரும்மம் நோக்கி அவன் தன் கடமைகளைச் செய்வானாயின் அவன் எளிதாக ஆன்மீக உலகினை அடையலாம் என்று கூறுகிறான்.
அதற்கு அர்ஜூனன், மதுசூதனா! என்னால் இந்த யோக நிலைக்கு வரமுடியாது, மனம் நிலையற்றது, அமைதியற்றதாக இருக்கிறது என்று சொல்கிறான். இதை தான் நாம் ஒவ்வொருவரின் மன நிலைமையும் கூட, அதற்கும் கண்ணன் எளிமையாக விளக்கம் சொல்கிறான்.
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா|
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ||6-47||
பார்த்தா!, இந்த யோக நிலை வெகு எளிது, ஆத்மார்த்தமாக பிரம்ம சேவையில் ஈடுபடும் போது இந்த யோகம் நிலை அடைகிறார்கள். அதாவது ஒவ்வொரு செயலிலும் தான் என்ற அகந்தையினை விட்டு, அந்த பரபிரம்மத்தின் பொருட்டே என்று விட்டுவிட்டு, எந்த செயலிலும், மனதிலும் ஆத்மார்த்தமாக அந்த பரபிரும்மமை நோக்கும் போது இந்த யோக நிலை வந்து விடும் என்று சொல்கிறார். உண்மை தானே, தான் தனக்கு என்று ஒரு செயல் செய்து அதன் பிரதிபலன் பார்த்து ஏமாறும் போதும், சந்தோசம் அடையும் போது அது தற்காலிகம் என்பதை நாம் எப்போது உணரபோகிறோம். அந்த உணர்வு வரும் போது அந்த சந்தோசம், துக்கம் இரண்டும் சமமாகி விடுகிறது அல்லவா.
இறுதியாக, கண் பார்வை இழந்த திருதுராஷ்ட்ரர் துக்க நிலையில் இருக்கிறார், போர் நடக்கிறது, அந்த யுத்த களத்தில் என்ன நடக்கிறதோ என்று பரிதவித்து இருக்கிறார், அப்போது வேதவியாசர் தனது அதீத சக்தியால் திருதுராஷ்டரரே உமக்கு ஞான கண் தருகிறேன் என்று சொல்கிறார், அதற்கு திருதுராஷ்டரர், எனக்கு வேண்டாம், வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்ல அப்படி சஞ்சயன் எனும் மதிநுட்பமான அமைச்சனுக்கு கொடுக்க அவர் தன் ஞானக் கண்ணால் யுத்தக் களத்தில் நடைபெறும் காட்சிகளை விவரிப்பதாக ஆரம்பமாகிறது இந்த ஸ்ரீமத்பகவத் கீதை. ஒவ்வொரு காட்சியாய் விளக்கி கொண்டு வருகிறார். யுத்த களம் ஜனக்கூட்டத்தில் நிறைந்திருக்கிறது, ஒரு பக்கம் பாண்டவர்களும் மறுபக்கம் கௌரவர்களும் இருக்கிறார்கள். அப்போது கண்ணன் தனது பஞ்சசன்யம் எனும் சங்கு எடுத்து ஊத, பார்த்தன் தேவதத்யம் எனும் சங்கு எடுத்து ஊத, போர் ஆரம்பமாகும் அறிகுறி தெரிகிறது. அந்நேரத்தில் போர்களத்தில் நடுவில் வந்த ரதத்தின் இருந்து அர்ஜூனன் எதிர்திசையில் நிற்கும் தன் உற்றார் உறவினர்களைப் பார்த்து தான் போர் புரியமாட்டேன் என்று கண் கலங்கி கண்ணனிடம் கூறுகிறான். அப்போது கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துரைக்கு ஞான உபதேசம் தான் இந்த ஸ்ரீமத்பகவத்கீதை.
சரி, இவ்வளவு பெரிய ஸ்ரீமத்பகவத்கீதை 700 ஸ்லோகங்களும், 18 அத்தியாயங்களும், முதல் ஆறு கருமத்தைப் பயனில் பற்றின்றி பிரம்மார்ப்பணமாக செய்யும் மார்க்கமும், நடு ஆறு அத்தியாயங்களில் பக்தி மார்க்கமும் கடைசி ஆறு அத்தியாயங்களில் ஞான மார்க்கமும் கூறும் வரை போர் களத்தில் அனைவரும் சும்மா இருந்தார்களா எனும் ஒரு கேள்வி எழும், அதற்கும் விளக்கம் இருக்கிறது.
சஞ்சயன் ஒவ்வொரு காட்சியினை விளக்கி கொண்டு வரும் போது பார்த்தன் போர் புரியாமல் தேரில் சாய்ந்து விட்டான் என்றும், கண்ணன் அவனுக்கு உபதேசம் சொல்கிறான் என்றும் சொல்கிறார். அப்போது, யுத்தத்தின் தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறது அங்கே, சங்கு ஊதிய போதும், கொடி அசையாததால் போர் தொடங்காமல் இருக்கிறது. அது தான் யுத்த தர்மம், சங்கு ஊதி, கொடி அசைத்து இருவரும் ஒத்து போர் தொடங்கலாம் என்று சொல்லும் போது தான் போர் முறையாகத் தொடங்குகிறது. அது வரை இருவரும் காத்திருக்க வேண்டும். இந்த யுத்த முறை இன்றும் கடைபிடிக்கப்படுவதை காணலாம் செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் செல்லும் போர்களங்களின் பாதையில் செல்லும் போது யாரும் அதை தாக்க கூடாது என்பது யுத்த தர்மம். அப்படி யுத்த தர்மம் மீறப்படும் போது அதன் விளைவுகள் அவர்களே அவதிபடும் போது உணரமுடிகிறது.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்
மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.
அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:
1. நாளை ஆச்சார்யர்கள் மற்றும் குருமார்கள் சொல்லும் விளக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம் பிறகு
கவிஞர்கள், அறிஞர்களின் விளக்கத்தினைப் பார்த்துவிட்டு நாம் எளியவுரைக்கு செல்வோம்.
No comments:
Post a Comment