Thursday 19 August 2021

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 1

மனிதன், மனிதன் என்று அறியப்பட்டு, அவருக்கு ஆறு அறிவு என்றும், மற்ற அல்லது பிற உயிர்களுக்கும் அவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்றும் இந்த உலகம் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து கொண்டது வரை அவரின் வளர்ச்சி அபிரிதமானது என்று நம்ப படுகிறது. இந்த பூவுலகில் ஆராயப்பட்டதும், இன்னும் ஆராயப்படவேண்டியதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. அப்படியிருக்கும் போதே அவரின் விளையாட்டும், தான் என்ற அகந்தையும், தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற மமதையும் அலாதியானது. வெட்க கேடானது.

 

மனிதன் தன்னைச் சீரமைத்துக் கொள்ளவும், தன்னை தகவைத்துக் கொள்ளவும், ஓர் நிலைப்படுத்திக் கொள்ளவும் வகுத்துக் கொண்ட விதிகள் தான் சட்டம்.

 

சட்டம் காலத்திற்கேற்ப ஆண்டவர்களும், நமை ஆண்டு முடித்தவர்களும், ஆளும் வகையறாக்களும் தங்களின் வசதிக்கேற்ப வகுத்துக் கொண்டது தான் சட்டம் என்றால் மிகையாகாது. சட்டம் என்பது ஒரு சமுதாயத்தின் தேவையாகவும், சமுதாயத்தை முற்படுத்தும் நோக்கில், சமுதாயம் சீர்கெடாமல், சமுதாயம் முற்போக்கில் செயல்படவும் வகுத்துக் கொண்டது. சட்டம் அதன் வழி நடப்பவர்களையும், அதன் வழி செல்பவர்களையும் ஒரு மாதிரியும், அவர்களின் நலன் கருதியும், சட்டத்திற்குப்புறம்பாக செல்பவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களையும் சட்டத்தின் படி செயல்பட வைக்கவும் ஏற்படுத்தப்பட்டவை யாகும்.

 

எது சரி, எது தவறு என்பது அவரவரின் பார்வைக்குச் சென்று விடுகிறது. குற்றம் செய்தவனுக்கு அவனின் செயல் சரியாகவும், அந்த செயலால் இழந்தவனுக்கு அல்லது இழந்தமைக்கு, அவனின் இழப்பு எதிர் தரப்பினைக் குற்றம் செய்தவனாக கருத தூண்டுகிறது. சட்டம் இதற்கு வரைமுறை வைத்து, இத்தகைய செயல் குற்றம் என்றும், இதற்கு தண்டனை இதுவென்றும் ஒரு வரைமுறை வைத்திருக்கிறது. இது சமுதாயம் சுமூகமாக செயல்படவும், சரியான பாதையில் செல்லவும் வழி வகுக்கிறது.

 

பல்லாயிர ஆண்டுகளாக சில நெறிமுறைகளையும், சில பாரம்பரியங்களையும் வகுத்து அதன் படி செல்ல இயற்கையே சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது. உம். ஆண் என்றும் பெண் என்றும் இருபாலராகப் பிரித்து அவரவருக்கு என்று சில நெறிமுறைகளையும் வகுத்து கொடுத்திருக்கிறது. ஆண் உடலால் பலமுற்றால், பெண் மனதால் இரும்பாகிறாள். இருவருக்கும் உடலமைப்பில் வேறுபட்டாலும், இருவரையும் சமமாகவும், சொல்ல போனால் பெண்ணிற்கு ஓர் உயிரை உருவாக்கும் பெரிய சக்தியைக் கொடுத்திருக்கிறது.

 

கால காலமாக வெவ்வேறு திசையில் பயணித்து, மனிதன் தான் கண்டதையும், தான் உணர்ந்தவற்றையும், தான் கற்றதையும், தான் மட்டுமன்றி பிறரும் பயன் பெற வேண்டும், அதனை பலவகைகளில் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்றிருக்கிறான். உம். கல் ஓவியங்கள், சிற்பங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், பிரம்மாண்டமான படைப்புகள், கவிதைகள், இதிகாசங்கள், இலக்கியங்கள், எழுத்தோவியங்கள், அடையாளங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

 

தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை செய்தி வரும் போது மக்கள் அதைப் பற்றி சிலாகிப்பதும், அதை நினைத்து  பெருமை அடைவதும், பெருமிதம் கொள்வதும் நிச்சயம் வரவேற்கப் பட கூடியது தான்.

 

பல கோவில்கள் ஒரு ஊரே அதனுள் அடங்குமளவிற்கு இருப்பதைப் பார்க்கும் போது, அவற்றின் உன்னதம் பல சங்கதிகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைப்பு அதற்கு மிகப் பெரிய சான்றாகும். உயிர் நெல்களை சுமக்கும் கலன்களாக கோபுர கலசங்களை வைத்தார்கள். கோவில்களை பெரியவைகளாக கட்டி, போர் மற்றும் பிற அவசர கால நேரங்களில் மக்களை காக்க உதவினார்கள். எத்தனை எத்தனை படையெடுப்புகள் வந்த போது, பலவற்றை இழந்தபோதும், பல சிற்பங்கள், சிலைகள், கோவில்கள் சிதைக்கப்பட்ட போதும் இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் வந்தாலும் நம் பாரம்பரியம் சொல்ல இந்த கல் ஓவியங்கள், சிற்பங்கள், இன்னும் பிற நம்மை காக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நிற்க.

 

இப்போது என்ன வந்தது என்று தானே கேட்கிறீர்கள்? அந்த கோவில்களை யாரும் எதையும் செய்யவில்லையே என்று தானே சொல்கிறீர்கள்? இப்போது என்ன நடந்தது, எதற்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சி என்று தானே கேட்கத் தோன்றுகிறது? சரியான கேள்வி, வாருங்கள் தேடுவோம். ….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...