Monday, 1 June 2020

ஒரு புத்தகத்தை கையில் ஏந்துகிறேன் புத்துலகில் நீந்துகிறேன்


என்னங்க என்று அழைத்தப்படியே சங்கரி வந்தாள். அந்த ஹாலின் ஓர் ஓரத்தில் போடப் பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தப்படியே புத்தகம் படித்துக் கொண்டிருந்த கணேஷ், அவளைப் பார்க்காமலே என்ன என்று கேட்டான்.

லாக் டவுன் தளர்வுப் பற்றி இன்னைக்கு சொல்லப் போறாங்களாம், நீங்க கொஞ்சம் டீவியை போடுறீங்களா என்று சொன்னப்படியே வேகமாக ரிமோட்டைத் தேடலானாள் சங்கரி. நானும் தேடினேன் ரிமோட்டை. எப்போதும் டீவி மேலேயே வைத்திருப்போம் என்று சொன்னப்படியே சத்தம் போட்டபடி தேடிக் கொண்டிருந்தாள் சங்கரி. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சத்தம் அவர்களை நிலைக் குலைய செய்தது. அவர்கள் இருவரும் வாசலினை நோக்கிப் போனார்கள். என்ன சத்தம் என்று கேட்டவாறே அவர்கள் இருவரும் மாடியிலிருந்து கீழே பார்த்த போது, அங்கு ஒரே கூட்டம்.

என்ன மனோகர்? என்ன சத்தம் என்று கேட்டார் கணேஷ். அதற்குள் அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரி, “எல்லோரும் கீழே இறங்கி வாங்க. யாரும் வீட்டில் இருக்க கூடாது” என்று சொன்னப்படி கூக்கரலிட்டார்.

சங்கரியும், கணேஷும் கீழே இறங்கிப் போனார்கள். அந்த வசந்தம் அபார்ட்மெண்ட் மிகப் பெரியது. கிட்டத்திட்ட 200 குடும்பங்களை 6 பிளாக்குகளாக கொண்டது. அதில் “அ” பிளாக் செகரட்டரி சொன்னது தான் சங்கரியும் கணேஷூம் கேட்டது. அதன் படி தான் அவர்கள் இறங்கி ரோட்டுக்கு வந்தார்கள்.

அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். ஏதோ ஒரு கவலை, பயம் அவர்களை ஆட்டிப் படைத்துள்ளது நன்றாகத்தெரிந்தது அவர்களி வெளிரிய முகத்தில். இவர்களும் இணைந்து கொண்டார்கள். யாரைக் கேட்பது என்ற பதட்டத்தில் இவர்கள் தவித்திருந்தார்கள். எல்லோரும் செகரட்டரியை நோக்கிய படி இருக்க. கணேஷ் மெல்ல ஆரம்பித்தான், பக்கத்தில் இருந்த நபரிடம்.

என்ன சார் ஆச்சு? ஒரே பதட்டமா இருக்கீங்க. ஏன் செகரட்டரி ஒரே கூப்பாடு போடுறார். என்று அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தான். அந்த நபர் சொன்னார், எனக்கும் தெரியல சார், நானும் உங்களை மாதிரி தான் சத்தம் கேட்டு தான் வெளியில வந்தேன். இப்போ உங்களை மாதிரி தான் பதில் தெரியாம நிற்கிறேன் என்று. கணேஷூக்கு கோபம் வந்தது. ஏன் எதற்கு என்று கேட்காமலே இப்படி நிற்கிறார்களே என்று தனக்குள் கோபப்பட்டுக்கொண்டு, நேராக செகரட்டரியிடம் சென்றான். “சார் என்னாச்சு என்று கேட்டான்”. செகரட்டரி கொஞ்ச  நேரம் சும்மா இருக்கீங்களா, நானே பதட்டமா இருக்கேன் என்று சொன்னார்.

கணேஷூக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எதற்குன்னு சொல்லாமல் நான் இங்கு நிற்க முடியாது. நாங்கள் மேலே போகிறோம். எதுவாக இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு வந்து சொல்லுங்கள் என்று சொன்னப்படியே நடக்கலானான். செகரட்டரி சொன்னார், பொறுப்பா, ரொம்ப கோபப்படற, இங்க எத்தனை பேர் நிற்கிறாங்க. எதாவது தொந்தரவு பண்றாங்களா? ஏன் இப்படி செய்ற என்று கேட்டார்.

கணேஷூக்கு மேலும் கோபம் வந்தது. சார் நீங்க சொல்றது என்ன விதத்தில நியாயம். என்னன்னு சொல்லாம, தெரியாம நிற்க முடியுமா? அவங்க நிற்கிறாங்கன்ன அதற்கு நானும் நிற்கனுமா? எனக்கு இப்ப காரணம் தெரியனும். சொல்லுங்க, இல்லைன்னா, நீங்க அவங்கள வச்சுக்கிட்டு என்ன செய்யனுமோ செய்ங்க, நான் மீட்டிங்கல பார்த்துக்குறேன் என்று சொல்லி புறப்படலானான். செகரட்டரி கணேஷ், கணேஷ் என்று இரண்டு முறை கூப்பிட்டார், ஆனால் அதனை காதில் வாங்கி கொள்ளாமல், பேசிக்கொண்டிருந்த அவன் மனைவி சங்கரியிடம் வந்தான். வா வா நாம் மேலே போகலாம், என்ன காரணம் சொல்ல மாட்டங்களாம், நாம வாய் பொத்திக்கிட்டு நிக்கனுமாம், நாம என்ன இவங்க அடிமையா? அதெல்லாம் முடியாது. நாம் மேலே போவோம். எதுவென்றாலும் அவங்க நம்ம வீட்டிற்கு வந்து சொல்லட்டும் என்று சங்கரியினை வேகப்படுத்தினான். அவளும் வேறு வழியின்றி, வரேன் அக்கா என்று சொல்லிவிட்டு, முனுமுனுத்தப்படியே அவனின் பின்னால் சென்றாள்.

என்னங்க, ஏன் இப்படி கோபம் படுறீங்க, என்ன ஏதேன்னு தெரியறத்துக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு. மத்தவங்க மாதிரி நின்னா என்ன குறைஞ்சிடும் என்று சொன்ன சங்கரியினை சுட்டு எரித்துவிடுவது போல் பார்த்தான் கணேஷ். ஏன் அவர் சொன்னா குறைஞ்சிடுவாரா என்று கேட்டப்படியே சோபாவில் போய் உட்கார்ந்தான். என்ன திமிரு அவருக்கு, மத்தவங்க மாதிரி நான் போய் அவங்கள மாதிரி அமைதியா நிக்கனுமா? எனக்கென்ன தலையெழுத்து? என்று புலம்பியபடியிருந்த கணேஷைப் பார்த்து முறைத்துக் கொண்டே கிச்சன் நோக்கிப் போனாள் சங்கரி.

என்ன மனுஷன் இவரு? எதற்கெடுத்தாலும் கோபம், எதற்கெடுத்தாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் எகத்தாளம், என்று தனக்குள் திட்டியப்படியே அடுப்பில் பாத்திரம் வைத்தாள். என்னங்க காபி சாப்பிடுறீங்களா என்று தன் கணவன் மனதை மாற்ற கிச்சனிலிருந்தே கேட்டாள் சங்கரி. கணேஷ் அப்போது தான் இரண்டாம் அத்தியாத்தியத்தில் செகரட்டரி மற்றும் பிறரைத் திட்டும் படலத்தில் இருந்தான். அவனுக்கும் காபி குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் முறுக்கோடு, ஏன் இப்ப என் பேச்ச மாத்தப் பார்க்குற, அந்த செகரட்டரி மனைவி எதுவும் சொன்னாளா? என்று சங்கரியிடம் கோபம் காட்டுவது போல், அவள் எதுவும் விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாளா என்று ஆவலில் கேட்டான் கணேஷ்.

ஏன் அது சொன்னா தான் காபி சாப்பிடுவீங்களா என்று தனக்கே உரிய நக்கலில் பதில் சொன்னாள் சங்கரி. கணேஷூக்கு கோபம் மறுபடியும் வந்தது. ஏன் நீயா சொல்ல மாட்டியா? மனுஷன் இங்க கத்தியே செத்துருவேன் போல, கேட்டா தான் சொல்லுவியோ என்று தன் பதிலை உச்சஸ்தாயில் சொன்னான் கணேஷ்.

அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க, இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொன்னாள் சங்கரி. ஏன் காபி போட்டுக்கிட்டே பதில் சொன்னா என்ன குறைஞ்சிடும் என்று விஷயம் தெரியவில்லையே என்று ஆதங்கத்தில் சொன்னான் கணேஷ்.

என்ன அவசரம். இருங்க வரேன். காபி போட்டேன் இந்த எடுத்துட்டு வரேன் என்று சொன்னப்படியே ஒரு கையில் காபி டம்ளரும் மறு கையில் வட்டையும் காபியினை ஆத்திக் கொண்டே வந்தாள் சங்கரி.

வாசலில் காலிங்பெல் சத்தம், “இல்லறம் ஓர் நல்லறம்” புத்தகம் படித்துக் கொண்டிருந்த குமார். யாராக இருக்கும் என்று யோசித்தப்படியே அந்த புத்தகத்தினை மூடி வைத்து வெளியில் யார் வந்திருக்கிறார்கள் பார்க்க கிளம்பினான்.

என்ன அருமையான புத்தகம். ஓர் அழகான குடும்பம். அந்த கணவன் மனைவிக்குள் ஏற்படும் சம்பாஷனைகள் என்ன அருமையா சொல்லியிருக்கிறார் அந்த எழுத்தாளர். எதற்கு அந்த செகரட்டரி அப்படி சொன்னார். என்ன விஷயமா இருக்கும், சங்கரி என்ன சொல்லப் போகிறாள், ஏன் கணேஷ் இவ்வளவு பதட்டம்  என்று தன் மனதில் தோன்றிய எண்ணங்களோடு தான் உடுத்தியிருந்த கைலியினை சரி செய்து கொண்டு வாசல் நோக்கிப் போனான் குமார்.


2 comments:

  1. Thanks for sharing this info, keep posting…

    Varun Sethupathi
    Selvam Hardwares

    ReplyDelete
  2. கதைக்குள் கதை , நல்ல கற்பனை... அருமையான நடை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...