இந்த எழுபதாம் சுதந்திர தினத்தன்று உன் சகோதரன் உன்னோடு பேசுவதில் மற்றற்ற மகிழ்ச்சி…
உன்னோடு தான் தினம் என் பயணம், ஆனாலும் உன்னை எனக்குத் தெரியாது, என்னை உனக்குத் தெரியாது. தினம் பால்வீதியில் நட்சத்திர கூட்டங்களோடு நிலா வீதியுலா வருவது போல் நாமும் கலந்தே பயணித்து தனிமையாகுகிறோம். சுதந்திரம் எனும் பெயரில், கேட்டதை, பார்த்ததை, சொன்னதை மீண்டும் மீண்டும் மனனம் செய்து ஒப்புவிக்க பயில்கிறோம் தடையின்றி. உலகம் தோன்றியது முதல் இது வரை எண்ணற்ற உயிர் தோன்றினாலும், ஒரு சில ஆயிரங்களே சரித்திரத்தில் இடம் பெற்றனர், ஏன் தெரியுமா?. அந்த ஏன் என்ற கேள்வியின் பதில் அது. ஆம், கேட்டதன் விளைவு, கேள்வியின் வீர்யம், உள் நோக்கி பார்த்ததன் விளைவு, தனித்து விட்டது, அவர்களை உலகிற்கு தனித்து விட்டது, தனி முத்திரை பதிக்க விட்டது.
ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொன்றைக் கற்றோம், அந்த ஒவ்வொன்றின் பயன்பாட்டினை என்றாவது உணர்ந்திருப்போமா?, இல்லை அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தோமா?. இன்று வரை மாறாதது எது தெரியுமா?, அடிப்படையில் பயிலும் ஆரம்ப கல்வி தான். ஆம்!, நாம் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி, அதாவது தொடக்க கல்வி தான் மாறாதது. ஒருவர் தன் பிஞ்சு வயதில் கற்கும் கல்வி, ஆழ்மனதில் பசுமரத்தானிப்போல் படிந்து விடும். உம். 1+1, எந்த கால கட்டத்திலும் 2 தான். அது போல் பல கற்றோம், அதனை காலப்போக்கில் நாம் மறக்க நினைத்தாலும், நம்மை மட்டும் அகலாது. ஏனென்றால், நம் அன்றாடப் பயன்பாட்டிலும் அது ஊறி விட்டது. அது போல தான் இளமை கல்வியும். ஆழ படியுங்கள், ஆழ்ந்து படியுங்கள். ஆராய்ந்து படியுங்கள். காலப்போக்கில் நாம் நம்மை உணராமல் பயில முயலும் எதுவும் நம்மோடு பயணிப்பதில்லை. அது அந்த கால கட்டத்தோடு முடிந்து விடுகிறது.
நீ மனனம் செய்யாதே!!!. ஆழ்ந்து கற்க முயற்சி செய். பயிற்சி செய் அல்லது முயற்சி செய். தவறு செய். காலப்போக்கில் உன் தவறுகள் உனக்கே ஒரு புது பாதையினைக் கொடுக்கும். சொல்ல முடியாது, இது வரை கற்று வந்தததை விட உன் பாதை எளிமையாகவும், தரமாகவும் கற்க உதவலாம். அது உன்னைப் போல், என்னைப் போல் இருப்பவர்களுக்கு உதவலாம்.
முடியாது என்ற ஒன்று மட்டும் தான் இன்று வரை முடியாமல் இருக்கிறது. முயற்சி செய்யாததால் அது முடியாமல் இருக்கிறது.
ஒரு உண்மை சொல்லட்டுமா!! நிறைய தோல்விகளைச் சந்தித்துப் பார், உன்னை வெல்ல யாராலும் முடியாது. ஒவ்வொரு தோல்வியும் உன்னைச் செதுக்கும். உன் கையிலிருக்கும் உளி, உன்னுள்ளேயே விளையாடும், உன்னையறியாமல் செப்பனிடும்.
இங்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள் யாரும் ஆச்சார்யர்கள் இல்லை, முன்பு போல் கற்றுத் தர, அதே போல் கற்கும் நீங்களும் (நாமும்) ஏகலவைன் அல்ல. ஆனால் கல்வி கற்பது என்னவோ அன்றும் இன்றும் என்றும் அதே தான். கற்றுக் கொள்பவன் காலப்போக்கில் மாறியதால் கற்பிப்பவனும் மாற வேண்டிய சூழ்நிலை. உன்னைப் புடம் போட வேண்டுமானால் நீ தீயில் உறுகித் தான் ஆக வேண்டும். எந்த அளவிற்கு உன்னை அதில் லயிக்கிறாயோ அது தான் உன் வெற்றியின் அளவு. உன்னை இந்த உலகில் நிலைநாட்டும் அளவு.
புலிகள் வாழும் காட்டில் தான் புள்ளி மானும் வாழ்கிறது. ஆகையால் திருடர்களும், ஏமாற்றும் பித்தர்களும், போலி உறவுகளும், நயவஞ்சக கூட்டம் வாழும் இந்த உலகில் தான் நீ வாழ்ந்து ஜெயிக்க வேண்டும். புள்ளி மான் புலி கண்டு அஞ்சினாலும், உணவருந்தாமலோ, நீர் அருந்தாமல் இல்லை, அதன் வாழ்க்கை முறையினைத் தொடர்கிறது. ஒரு போதும் அஞ்சி துவழ்வதில்லை.
ஒன்று மட்டும் நினைவில் கொள், எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும், இன்னமும் வந்து போகும். வெற்றியினைத் தலைக்கு ஏற்றாதே, தோல்வியினை நெஞ்சில் சுமக்காதே. ஒரு போதும் உலகில் இரவு மட்டும் நிலைப்பதில்லை, சூரியக் கதிர்கள் ஒவ்வொரு இரவினையும் துளைத்தெடுத்து ஒளி தருகிறது. அது போல் உன்னுள் உறங்காமல் உள்ளேயே உரமிடு, உதிரமிடு, உயிரிடு, முயற்சித்தால் முடியாததும் முடிந்துவிடும்.
நம் முன்னோர்கள் விதைத்த இந்த நாடு, ரொம்பநாட்களாய் உரம் தேடி அலைகிறது. இளைய சமுதாயமே!!! நீயே விதையாகு, உன்னுள்ளிருக்கும் ஒவ்வொரு விருட்சமும் இந்த உலகைப் பசுமையாக்கட்டும்.. பசுமை புரட்சி செய்வீராக….
ஒரு விதையிடு, அதை மட்டும் கவணம் கொள், அதை வனமாக்க இந்த உலகம் தயாராய் இருக்கிறது. வசப்படும் தூரம் தான் வானம். வல்லூறுகளைக் கண்டு கலங்காதே. வல்லூறுகளைப் பார்த்து பயந்திருந்தால், இன்று வல்லூறுகளைத் தவிர வேறு பறவையிருந்திருக்காது. உயரப் பறப்பதால் (இருப்பதால்) மட்டும் ஒருவன் வெற்றி பெற்றவனில்லை, உயர்ந்தாலும், எத்தனை உயரம் போனாலும், தன்னிலை மறவாதவன் எவனோ அவனே வெற்றியாளன். ஆகையால் பணிவு கொள்.
உயர்த்திவிட ஏணிகளைத் தேடாதே. இங்கு ஏணிகளும் விற்பனைக்கே. உள்ளொன்று வைத்து புறம் பேசும் கூட்டம் அதிகம், ஆகையால் கவணம் கொள். உன்னை உறிஞ்சி மகிழும் பேதைக் கூட்டம் அதிகம், விழிப்போடிரு. உன்னை மூளைச் சலவை செய்து அவர்கள் கார்யம் சாதித்துக் கொள்ளும் கூட்டம் அதிகம், பக்குவமாய் பயணம் செய். உன்னோடே பயணித்து உன்னை உதைத்து வெளியேற்றும் அட்டைகள் அதிகம், ஆகையால் நிறம் பார்த்து பழகு, பயணி.. எதிலும் விழிப்போடிரு. நன்றிக்கும் விலை பேசும் உலகமிது.
காலத்தோடு பயிர் செய். பொழுதெல்லாம் உனதாக்கு, எல்லா நாளும் நன்னாளே!!! நம்பி பயணம் செய்.. நம்பிக்கையோடு பயணம் செய். உன்னை மட்டும் நம்பு.
உனக்காக பாரதத்தாய் காத்திருக்கிறாள். உன்னை அள்ளிப் பருகி, அரவணைத்துச் செல்ல துடிப்போடு உயிர்ப்பித்துக் கொள்ள காத்திருக்கிறாள். வீறு கொண்டு வா, வெற்றிகளை உனக்கு காணிக்கையாக்க காத்திருக்கிறது இந்த பூவுலகம்.
வாழ்க பாரதம்! வளர்க அதன் புகழ்! வந்தேமாதரம்!