செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.
எண்ணங்களே வலிமையானவை. எப்படி எண்ணுகிறோமோ அப்படியே நிறைவேறுகிறது. ஒருவன் தனது அற்புத எண்ணத்தால் வலிமை மிகுந்த அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டுமென்றாலும் அவனால் நிச்சயம் ஆக முடியும். அத்தகைய வல்லமை மிக்க எண்ணத்தினை துச்சமான சில காரியங்களில் லயித்து சுகித்து ஓர் அற்புத பிறவியினை இழத்தல் நீதியாகுமோ?
ஒவ்வொரு மனிதனும் ஒரு அற்புத ஆற்றலைத் தன்னிலையில் நிறுத்தி வைத்திருக்கிறான். சரியான சந்தர்ப்பம், சூழ்நிலை வரும் போது அதனைப் பயன்படுத்துவானேயானால் அவனை வெல்லுவது மிகக் கடினம். அத்தகைய ஆற்றலினை எதற்கு பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்தே அவனது செயலுக்குப் பயன் விளைகிறது. நல்வழியில் செலுத்தப்படும்போது அது அவனை மட்டுமேயன்றி பிறருக்கும் பயன் தரவல்லது. அதே தவறான முறையில் பயன்படுத்தப்படும் போது, அது அவனை மட்டுமன்றி அவனை சுற்றியிருக்கும் மாந்தர்களையும் அழிக்கவல்லது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் எப்படி நம் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமாகிறது.
முற்பிறவியில் சஹஸ்ர கவசனாகப் பிறந்த கர்ணன், சூரியனை நோக்கி கடும் தவமிருந்து சஹஸ்ர கவசத்தைப் பெற்றானாம். நர நாராயணர்கள் தோன்றி 999 கவசங்களை அழித்தனராம். எதற்குமே பயமின்றி துர் செயல்களைப் புரிந்து வந்த சஹஸ்ர கவசன் 999 கவசங்களை இழந்த பின் தன்னிலை மறந்து, பயந்து மறுபடியும் சூரியனிடம் தஞ்சம் அடைந்தானாம். அப்படி தஞ்சமடைந்த போது, நர நாராயணர்கள் சஹஸ்ரகவசனை ஒப்படைக்கும்படி சூரியனிடம் கேட்டார்களாம், அப்போது சூரியன் தன்னை நம்பி வந்தவர்களை எப்படி ஒப்படைப்பது என்று சொன்னாராம். அப்போது நாராயணர் சாபமிட்டாராம், நீ மானுடனாகப் பிறக்க கடவாய் என்று. அப்படி சாபமிட்டமையால் குந்தி தேவிக்கும் சூரியனுக்கும் மகனாகப் பிறந்தானாம் கர்ணன் அந்த பாக்கியிருந்த ஒரு கவச குண்டலத்துடன், இப்படிச் சொல்கிறது நாரதர் கதைகள்.
மந்திரங்களும் தந்திரங்களும் விளையாட்டாகப் பயன்படுத்தப்பட்டால் வரும் விளைவுகள் என்ன என்பதை எடுத்துக் காட்டாக வந்த பிறப்பாகிப் போனது தான் கர்ணனின் பிறப்பு. பிறப்பால் ராஜ வம்சத்தில் பிறந்தாலும், முற்பிறவியில் செய்த தீய செயல்களால் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்து, எல்லோர் மத்தியிலும் தாய் தந்தை அறியா பிள்ளை என இழி பெயர் பெற்று, அதனை உடைத்தெறிய தன்னையே வளர்த்துக் கொண்ட ஓர் அற்புத பிறவி தான் கர்ணன்.
எத்தனை பேர் இழிவாகப் பேசினாலும், தான் கொண்ட கொள்கையில் ஓர் இம்மி அளவும் பிசகாமலும், தான் கொண்ட இந்த பிறப்பை ஓர் அற்புத படைப்பாக ஆக்க வேண்டும் என்ற உன்னதம் தான் அவனை கொடை வள்ளலாக்கி உயர்வுற செய்தது.
ஒரு கை கொடுப்பதை மறு கை கூட அறியாவண்ணம் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று சொல்வார்களாம். ஆனால் இன்றோ தன்னிலை மறந்து, தன் நியதி மறந்து, தான் செய்ததை விலை பேசும் மாந்தர்கள் கூட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து மனம் வருந்துகிறது. கொடை குணம் மலிந்து போட்டி, பொறாமை மிகுந்து ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள பிறரை வஞ்சிக்கும் குணம் தான் வளர்ந்து கொண்டே போகிறது.
கண்ணன் கீதையில் சொன்னது போல், என்ன கொண்டு வந்தாய், எதை நீ இழப்பதற்கு. இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எதுவுமே உன்னுடையதில்லை. இன்று இருப்பது போல் தோன்றும் ஒவ்வொன்றும் நாளை இருக்கப்போவதுமில்லை.
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே. அந்த அற்புத வரிகளின் நிதர்சனமான நாயகன் தான் கர்ணன். அவன் துரியோதனின் அன்பில் வயப்பட்டு, அவன் தன்னை அங்க தேசத்தின் அரியாசனத்தில் அமர்த்திய போதும் சரி, அவனுக்காக போரில் உயிர் துறந்த போதும் சரி, கர்ணன் தன் கடமையை விட்டு நூலளவும் விலகவில்லை, அதற்காக தன்னை அவன் வருத்திக் கொண்டதுமில்லை. கர்ணன் தன் வாழ்வை ஒரு வேள்வியாக்கி, பரந்தாமனே தன் விஸ்வரூபம் காட்டிய ஓர் அற்புத பிறவி கர்ணன்.
--- தொடரும்.
No comments:
Post a Comment