Sunday, 11 September 2016

கர்ணன் - பாகம் 4

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மட்டுமே இந்த யுகத்தில் பிறந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு ஆன்மாவும் ஏதோ ஒரு ஆசையினைத் தன்னுள் சுமந்து அதற்கு ஒரு உருவத்தை தேடிக் கொள்கிறது. அந்த ஆசை ஒவ்வொரு உருவம் எடுக்கும் போது அத்தோடு நில்லாமல், புது புது ஆசைகள் பிறந்து அந்த உருவமெடுப்பு தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஆசை முடிவிற்கு வரும் போது அந்த ஆன்மா பெருமாளின் திவ்ய பாதுகையில் சரணடைகிறது. ஆனால் அதற்குள் அந்த ஆன்மா அற்ப ஆசையில் சிதறி காலப்போக்கில் பல்வேறு உருவமெடுத்து ஒவ்வொரு உருவத்திற்கும் பல்வேறு செயல்களைச் செய்து அதற்கேற்றார் போல் பாவங்களையும் சேர்த்து விடுகிறது.  

தனக்கு அளிக்கப்பட்ட அந்த அபூர்வசக்தியினைப் பரிசோதிக்க நினைத்த குந்தியின் காரணத்தால் உருவான கர்ணன் நீரோடையில் ஆதரவின்றி அனுப்பபடுகிறான். சஹஸ்ரகவசனாகப் பிறந்தவன் தன் 999 கவசங்களை இழந்து மீதமிருந்த ஒரு கவசத்துடன் கர்ணனாக அவதரித்தவன் தன்னுள்ளே அத்தனைச் சக்திகளையும் கொண்டுமிருந்து தேரோட்டி மகனாக வளர வேண்டியது தான் அவன் ஆன்மா எடுத்த ரூபத்தின் விளைவு. அந்த ஆன்மா ஓர் உயர்குலத்தில் உருவமெடுத்தும் அந்த ஆன்மாவின் முற்பிறவி ஆசை தொடர்ந்தமையால் இப்பிறப்பில் தேரோட்டி மகனாக வளர்ந்து துரியோதனனின் அரவணைப்பில் உய்க்க வேண்டியது ஆனது. 
கர்ணன் தான் தேரோட்டி மகன் என்று துயரம் கொள்ளாமல், அன்றைய தேதியில் அந்த குலத்திற்கு இடப்பட்டிருந்த தேர் பராமரிப்பு வேலையில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தன்னை பல்வேறு நிலையில் உயர்த்திக் கொள்கிறான். பிறப்பால் அரசமைந்தன் ஆனாலும் வளர்ப்பால் திருதாஷ்ட்ரன் அரண்மனையில் பணிபுரியும் அதிரதன் என்ற தேரோட்டியின் மகனாக வளர்க்கப்படுகிறான். ராதேயன் எனும் கர்ணன் அரசமைந்தர்கள் கற்கும் வில்வித்தை, மல்யுத்தம் போன்றவற்றை தானும் கற்று, தேரோட்டி என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டு அந்த அரசமைந்தர்களுக்கே ஒரு காலத்தில் சவால் விடும்படி உயர்கிறான்.

கர்ணன் தான் கொண்ட கொள்கையின் பிடிவாதத்தால் தான் இன்றளவும் பேசப்படுகிறான். அவன் பிறவியின் நோக்கமே பூமியில் சமநிலை நிறுவ தானாம். அந்த காலத்தில் சத்திரியர்களின் ஆளுமை நிறைந்திருந்தமையால் பிறர் கஷ்டமான வாழ்வை வாழ வேண்டிய கட்டாயம் இருந்ததாம். இந்த சூழ்நிலையால் தான் கர்ணன் தேரோட்டி மகனாக வளர்ந்தாலும் அரசர்களைப் போல் எல்லா துறையிலும் தன்னை தயார்படுத்திக்கொண்டு ஓர் அரசகுமாரனாகத் திகழ்ந்தானாம். கர்ணன் பிறப்பிலே அந்த சத்திரியர்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த பாரதப்போரில் துரியோதனின் சார்பாக போராடியவர்கள் மட்டும் உயிரிழக்கவில்லை, பாண்டவர்களின் சார்பாக போரிட்டவர்களும் உயிரிழந்தார்கள். இதனால் தான் உயர்ந்தவர்கள், தன்னை அழிக்க முடியாது மார் தட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் உயிரிழக்க வேண்டியதாகி விட்டது. பூமியின் பாரம் சமநிலைக்கு வந்ததாம்.எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் உயர்ந்தது தாழ்ந்ததுமில்லை என்று உணர்த்தவே படைக்கப்பட்ட ஓர் அற்புத உயிர் தான் கர்ணனின் பிறப்பு. வெற்றி தோல்வி என்பது என்று எதுவும் கிடையாது. ஓங்கி உயர்ந்த பற்றற்ற நிலை தான் புத்த நிலை, அந்த நிலையினை எவன் ஒருவன் அடைகிறானோ அவனே மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறான். நான் என்றும் தான் என்றும் தன்னுடையதைப் பிறரிடம் பகிரும் போதும் சரி, பிறரிடம் பகட்டாக எடுத்துக் காட்டும் போதும் சரி, “நான்”, தான் அழிவிற்கு வித்திடப்படுகிறது. எப்படிகைகேயி தான் பெற்ற வரத்தை மந்தரை எனும் தாதியிடம் சொன்னாளோ அன்றே ராம அவதாரத்தின் நோக்கம் செயல்படத்துவங்கியது, அதே போல் என்று குந்தி தனக்குப் பிறந்த கர்ணனை ஆற்றில் விட்டாளோ அன்றே கிருஷ்ண அவதாரம் நோக்கம் செயல்படத்துவங்கியது. குந்தியின் அவசரம், மந்திர துஷ்பிரயோகம், பிறகு குழந்தையினை மறைக்க துவங்கியது, ஆற்றில் நிராதராவாய் விட்டது, அதே அத்தோடு மறந்தது, பாண்டுவிடம் அதை மறத்தது என்று ஒவ்வொரு காரியங்களும் தொடர்ந்து இறுதியில் கர்ணனிடமே இரண்டு வரங்கள் கேட்ட வரை குந்தி கர்ணனுக்கு அந்த அரசகுமாரன் எனும் உயர்பதவியைக் கொடுக்கவில்லை. ”தான்” எனும் அகங்காரத்தில் சஹஸ்ரகவசனாக முற்பிறவியில் அலைந்த கர்ணன், மறுபிறவியில் தான் யார் மைந்தன் என்று அறியாமலே காலத்தினை நடத்த வேண்டிய கட்டாயம் ஆனது. எதுவும் நிரந்தரமில்லை, நிச்சயமுமில்லை. ஒன்றில் லயித்து அதில் தன்னை மறந்து இப்பூவுலகில் மக்கள் புரியும் காரியங்களை நினைத்து பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது. கர்ணன் யார் மகன் என தெரியாவிட்டாலும், தான் வளர்ந்த இடத்திலும் சரி, தன்னை மதித்து உயர்வு கொடுத்த துரியோதனனிடமும் சரி அவன் செய்கையில் எந்த பற்றுமில்லாமல் கடைசிவரை அந்த உன்னத நிலையினைக் கடைப்பிடித்தான். தன் கவசத்தை இந்திரன் கள்ளத்தனமாக கவர்ந்த போதும் சரி, தனக்கு கற்றுவித்த பரசுராமர் சாபமிட்ட போதும் சரி, தன் அன்னை குந்திதேவியே இரண்டு வரங்கள் பெற்ற போதும் சரி, தான் அழியப் போவது நிச்சயம் என்று தெரிந்தும் தான் கொண்ட கொள்கையில் தன் நண்பனுக்காகப் போராடினான். அதுவே பற்றற்ற நிலை. உயிர் மீதும் சரி, தான் பெற்றிருந்த அபூர்வசக்தியின் மீதும் சரி, தன் அன்னை என்று தெரிந்தும் அவரிடம் செல்லாமல், தன் சகோதரர்கள் என்று தெரிந்தும் பாணடவர்களின் மீது உக்கிர போர் புரிந்த போதும் சரி, கர்ணன் தான் வந்த நோக்கத்தைச் செவ்வனே செய்தான். 


ஒரு முறை கர்ணனா, தர்மரா யார் சிறந்தவர் தானத்தில் என்று சந்தேகம் வந்ததாம் அர்ஜூனனுக்கு. அவன் கிருஷ்ணரிடம் கேட்ட போது, அவர் சமயம் வரும் போது உனக்கு காட்டுகிறேன் என்று சொன்னாராம். ஒரு மழை காலம் வந்த போது, இருவரும் அந்தணர்கள் போல் வேடமிட்டு தருமரிடம் தாங்கள் வேள்வி வளர்க்கப்போகிறோம் அதற்கு சந்தன கட்டைகள் வேண்டுமென்றார்களாம், அதற்கு தருமர் இது கார் காலம், இப்போது முடியாது, வேறு என்ன வேண்டும் என்றாராம். அவர்கள் உடனே கர்ணனிடம் சென்று கேட்ட போது, தன் அரண்மனையில் இருந்த உத்திரங்களை அறுத்தும், வில்லையும் அம்பையும் உடைத்தும் அதன் மூலம் சந்தன கட்டைகளைக் கொடுத்தானாம். ஈதல் என்பது எண்ணத்தின் விளைவு. ஆதலால் கொடையில் சிறந்து வழங்கிய கர்ணனின் உயர்ந்த எண்ணத்தைப் போல் நாமும் நம் எண்ணங்களைச் செம்மையாக்குவோம். ஆக்குவோமாக.

--- தொடரும்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...