Sunday, 11 September 2016

கர்ணன்

கர்ணன்

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.

கூட்டமாய் வாழ்ந்து வந்தது ஒரு கூட்டம் அந்த பிரதேசத்தில். அந்த பிரதேசத்தில் நீர் மூன்று பங்காகவும், நிலம் ஒரு பங்காகவும் இருந்தது. அதன் பெயர் பூமி என்றும், அந்த யுகத்தின் பெயர் கலியுகம் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

அந்த கலியுகத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த ஓர் கதையான இதிகாசம் தான் மகாபாரதம். வியாசரால் எழுதப்பட்ட ஓர் மகா காவியம். பல நெறிமுறைகளைச் சொல்லி தந்த இந்த இதிகாசம், காலத்தின் போக்கில் சில நெறிமுறைகள் இன்றைய முரண் பட்டிருந்தாலும், வலு குறையா ஒரு உன்னதம் என்று தான் சொல்ல முடியும்.

அந்த இதிகாசத்தில் ஒரு அருமையான கதாபாத்திரம் தான் கர்ணன். நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலால் பட்டித் தொட்டியெல்லாம் அந்த கதாபாத்திரம் சேர்ந்தடைய செய்தார் என்பது வரலாறு. நம் கதையின் நாயகனின் வாழ்க்கை வரலாறைப் பதிவு செய்ய இல்லை இந்த பதிவு, அதை மையப்படுத்தி இன்றைய சூழ்நிலையின் மனிதர்களும் மனிதமும் என்ற போக்கில் நடைப் பயில போகிறது இந்த பதிவு.

யாரும் யாரையும் நம்பி வருவதில்லை. யாருக்காகவும் இந்த உலகம் நிற்பதில்லை. தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்தி வாழ்ந்திட நினைத்த யாரும் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. மறுபடியும், மறுபடியும் தனக்காக காத்திருக்கும் இறப்பை மறந்து, தான் மட்டுமே வாழப் போவதாய் எண்ணும் சிலர் செய்யும் விஷமமான பரீட்சைகள் அவர்களை விழுங்குமேயல்லாது மற்றாரை வீழ்த்த போவதில்லை.

செம்மைப் படுத்த வேண்டிய கல்வி இங்கு வியாபாரமாகி போய்விட்டது. கல்வி சிலருக்கு காலத்தின் போக்கில் வாய்க்கப் பெற்று விட்டது. அவர்களின் விதிபடி அது நடந்தேறிவிட்டது, அதற்காக உலகம் அந்த ஒருவரை சார்ந்து இருந்துவிட வில்லை. தான் என்றும் தனக்கு என்றும் இருந்தோர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவன் பெயரில் நடத்தப்படும் இந்த நாடகம், ஒத்திகையன்றி அரங்கேற்றப்படுகிறது, அதுவும் தான் என்ற மமதையில், அகங்காரத்தில், தன்னிலை மறந்து, தான் தோன்றித்தனமாய் விளையாட்டு காட்டப்படுகிறது.

தகுதியற்றவர்கள் முன்னிலைப்படுத்தும் போது இந்த சூழ்நிலை ஏற்படுவது என்பது உலக உண்மையே. இது தெரியாமல் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டானே இந்த மனிதன். மனிதா, மனிதம் காண மிருகத்தில் தேடாதே, இங்கே பசு தோல் போர்த்திய புலிகள் நிறைய.

பாம்பு விஷம் தான் கக்கும் என்று தெரிந்தும், அதனோடு உறவு கொண்டால், உயிர் போகுமேயல்லாது உறவு வளருமோ. உலக நியதியும் மறந்து, எந்த வரைமுறைக்கும் கட்டுபடாமல் வாழ்தல் சரியாகுமோ.

அர்ச்சுனனுக்கு இணையாகப் போற்றப்பெற்ற கர்ணன் சேராத இடம் தன்னில் சேர்ந்து, அவர்களின் போக்கில் வாழ்ந்து, அவர்கள் செய்வது தான் நியாயம் என்று நினைத்து, உலகத்தின் நியதி மறந்து, அந்த செஞ்சோற்று கடன் தீர்க்க பலரின் வஞ்சத்தின் வீழ்ந்தானே. போரில் வெல்ல முடியா அவனை, அவன் உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்கள் யாசிக்கப் பெற்று விட, அவன் குருவினாலே சபிக்கப் பெற்ற பாவியானதால் (சபித்தால் தான் குருவோ) சரியான நேரத்தில் அவனுக்கு பயிற்றுவிக்கப் பட்ட வித்தை மறந்தான், தாய் தந்தை யாரைன்று தெரியாமல் வளர்ந்து, ஓர் இக்கட்டான போர் சூழ்நிலையில் தாய் அறியப்பெற்று அவளுக்கு ஓர் வரம் கொடுத்து, அந்த வரத்தால் போரில் நிலை குலைந்தான், ஓர் அந்தணனின் சாபத்தால் தேரோட்டி சரியான நேரத்தில் கழண்று கொள்ள, எல்லாம் அறிந்த கண்ணன் கர்ணனின் தர்மத்தை யாசிக்க, நிராயுதபாணியான கர்ணனை வில்லாளன் வீழ்த்தினான். இது கதை.

--- தொடரும்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...