Sunday, 3 May 2020

ஓர் புத்தகத்தின் பயணம் – ஹிட்லர் - ஆய்வு அவரின் கையெழுத்து – பகுத்தாய்வு



ஓர் சுங்க அதிகாரியின் மகனாகப் பிறந்த ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்தாலும், தன் பிழைப்பிற்காக வந்த ஒரு நாட்டின் தலைமகனாக மாறி, இரண்டாம் உலகப் போர் வர காரணமானவராக உருமாறியது அனைவரும் அறிந்த ஒன்று.

நல்ல கலை ரசனை உள்ள ஒரு மனிதர், ஓவியத்தில் சிறந்து விளங்கினார். ஆஸ்திரியாவின் ஆர்ட் அகடாமியில் தான் பயில வேண்டும் என்று அதற்கு விண்ணப்பித்து இரு முறையும் தோல்வியுற்றவர். பிழைப்பிற்காக ஓவியம் வரைந்து அதன் மூலம் பொருளீட்டினார் ஹிட்லரின் ஆரம்ப கால பயணமாக விவரிக்கிறது இந்த புத்தகம்.

அம்மாவின் மேல் அலாதி பிரியமும், அவரின் தந்தையின் கண் மூடித்தனமான கண்டிப்பில் வளர்ந்ததையும் விலாவரியாக விவரிக்கிறது. அவரின் தந்தை நாய் போல் அவரை நடத்தியதை நினைத்து பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் அச்சமாகத் தான் இருக்கிறது. விசிலடித்தால் வந்து நிற்க வேண்டும், பெயர் சொல்லி அழைக்கமாட்டாராம் அவர் தந்தை. இளமை காலங்களில் அவரின் பயணம் மிகப் பெரியளவில் அவருக்கு மன நிறைவையோ சந்தோஷத்தினையோ தரவில்லை. அவரின் தந்தையின் மறைவிற்குப்பிறகு அவரின் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அவரின் ஓவிய கல்வி ஆசை அப்போது தான் துளிர்விட்டது. ஆனால் அவரின் முயற்சிகள் கூடவில்லை. ஒரு வேளை, அன்று அது நடந்திருந்தால், இன்று நாம் டேவின்சி, பிக்காசோ வரிசையில் ஹிட்லரையும் நினைவு கூர்ந்திருக்கலாம். காலம் அவருக்கு வேறு வேலை வைத்திருந்தது.

அவரின் தாயார் மறைவிற்குப் பிறகு சிறிது காலம் தந்தையாரின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வந்தாலும், அவருக்கு அது போதவில்லை, ஆகவே அவர் ஜெர்மனி நோக்கிப் பயணித்தார். அவர் சென்ற நேரம் அப்போது தான் முதலாம் உலகப்போர் தொடங்கிய நேரம். ஜெர்மனி ராணுவத்தில் அவர் “ரன்னர்” ஆக அவருக்கு வேலை கிடைத்தது.

அதாவது போர் நடக்குமிடத்தில், தகவல்களை தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்குமிடையே கொண்டு சேர்ப்பது. என்ன அதிசயம், குண்டு மழை பொழிந்த அந்த சூழ்நிலையிலும் அவர் திறம்பட அந்த வேலை செய்தார். அப்போது உயில் போயிருந்தால், இன்றும் அவர் ஓர் போர் வீரராக மட்டும் நினைவு கூறப்பட்டிருப்பார்.

யுத்தம் முடிந்தது. ஜெர்மனி சரண் அடைந்தது. போரில் மஸ்டர்ட் என்ற கெமிக்கல் வாயுவினால் அவரின் ஓர் கண் தாக்கப்பெற்று அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த தோல்வி விஷயம் அவரை நிலைகுலைய செய்தது. அவர் இதற்கு காரணம் யூதர்கள் என்று சொல்லி, அவர்களை அழிப்பதே தன் பணி என்று சூளுரைத்தார். முதன் முறையாக அவரின் நாட்டுப் பற்றினையும், அவரின் யூதர் எதிர்ப்பினையும் பதிவு செய்ததாக விவரிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

போர் காலத்தில் அவரின் பணியினையும் அவரின் திறத்தினையும் பாராட்டி, ஜெர்மன் ராணுவம் அவருக்கு ”Iron Cross” என்று பதக்கம் வழங்கியது. சிகிச்சை முடிந்த வந்தவர் அப்போது புதிதாக தொடங்கியிருந்த “நாஜி” கட்சியில் சேர்ந்தார், பின்னாளில் உலகமெல்லாம் அந்த இரண்டு எழுத்துக்கள் முழங்கப்பட போவதை யார் அறிந்திருப்பர். முதல் பொது கூட்டம் அந்த பேச்சு அவரை சிகரத்தில் நிறுத்தியது. ஜெரமானியர்களே ஆள தகுதியானவர்கள் என்ற அவரின் கூக்குரல், பேச்சு ஜெர்மானியர்களின் இதயங்களை அசைத்துபார்த்தது.

தோல்வி மேல் தோல்வி, அரசுக்கு அவர் கொடுத்த தொந்தரவு, ஆட்சியாளர்களின் மேல் அவர் பொழிந்த தாக்குதல் அவரை சிறை வாசமிட செய்தது. ஐந்து ஆண்டுகள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஓராண்டானது. அந்த சிறைவாசம் அவரை செம்மைப்படுத்தியது. அந்த நேரத்தில் அவர் எழுதிய புத்தகம் ”Mein Kampf” ”எனது போராட்டம்” அவரின் எண்ணங்களை விலாவரியாகச் சித்தரித்தது. அவரின் ஆசைகள் பிரதிப்பலித்தன. அவர் அன்று எப்படி இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்ததோ, அது போல் ரஷ்யா ஜெர்மனியின் ஆதிக்கத்தில் வரவேண்டும் என்று விரும்பினார், என அவரின் சிறை வாசம் மற்றும் அவரின் அரசியல் பயணம் பற்றி விலாவரியாக விவரிக்கிறார் இந்த புத்தகத்தின்ஆசிரியர்.

மீண்டு வருகிறார். தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் தோல்வி, ஆனால் நாஜி கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. ஆகையால் ஆட்சியில் சான்ஸ்லர் பதவி கிடைக்கிறது. இது தலைவருக்கு அடுத்த பதவி. ஆனால் அதிகாரம் குறைக்கப்படுகிறது. சில காலங்களில் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தில், இவருக்கு அன்றைய அதிபர் பெரும் அதிகாரங்களை வழங்குகிறார். சிறிது காலத்தில் அதிபர் இறக்க, இவரே முடிச் சூள்கிறார். தேர்தல் முறை ரத்து செய்யப்படுகிறது.

இவரின் முதல் 5 ஆண்டு கால ஆட்சி காலம் பொற்காலம் என சொல்லலாம். ஆம் ஜெர்மனி, தன் முதல் உலகப்போர் தோல்வி, நாட்டில் சீர் குலைந்து போயிருந்த பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, சொல்லி கொள்ளும் அளவிற்கில்லாத இராணுவம் என முடங்கிப் போயிருந்த நாடு, இவரின் முதல் 3 ஆண்டு கால ஆட்சி காலத்தில் சர்வ வல்லமை மிகுந்த இராணுவ நாடாகவும், வேலை வாய்ப்பு குறையில்லா நாடாகவும் உருமாறியது என்று சொன்னால் மிகையாகாது. படிக்காத இவர் தன் அரசாங்கத்தில் நன்கு கற்ற மேதைகளை பணியமர்த்தினார். ஆபாசம், கேளிக்கை என சர்வாதிகாரிகளின் முழக்கமாகவும், வாழ்வாகவும் இருந்த போது, இவர் முற்றிலும் வேறுபட்டார், பெண்களை மதித்தார், மது அருந்தாத ஒர் அதிபராக இருந்தார். இவரால் ஜெர்மனி வல்லமை மிகுந்த நாடாக பயணித்தது.

இவரின் யூதர்களின் மேல் உள்ள வெறுப்புணர்ச்சி சிறிதளவும் குறையவில்லை. இவர் கொன்று குவித்த யூதர்களின் அளவு சொல்லிவிட முடியாது. நாட்டில் உள்ள மக்களையும் அவ்வழியே நடக்க இவர் செய்தது தான் இவரின் உச்ச கட்டம். எங்கும் யூதர்களின் எதிர்ப்பு குரல். ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் யூதர்களை விதவிதமாக கொன்று குவித்தார்கள்.

இவர் உலகை ஆள நினைத்து அண்டை நாடுகளின்மீது யுத்தமற்ற முறையிலும், தனது ராஜதந்திரத்தாலும் போர் புரிந்து நாடுகளை கைப்பற்றினார். ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளோடு நட்பு பாராட்டி ரஷ்யாவையும், யூதர்களையும் அழிக்க இவரின் முயற்சி தொடர்ந்தது.

ஏப்ரல் 27ல் பிறந்த இவர், தனது இறுதி பிறந்த நாளை கொண்டாடியது ஓர் மறைவு குகையில். ரஷ்ய படைகள் பெர்லினை ஆக்ரமித்தன, எந்நேரமும் இவரை கைது செய்ய வரக்கூடும் என்பதை உணர்ந்து, அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தினையும், தனது அன்பு காதலியையும் மனந்தது அந்த மறைவிடத்தில் தான். அந்த கடைசி நிமிடத்திலும் அவர் முழக்கமிட்டது, ஒரு போதும் நான் கைதியாகப் போவதில்லை. எனது சொத்துக்கள் அனைத்தும் கட்சிக்கும், அப்படியில்லையேல் நாட்டிற்க்கும் என்று உயில் எழுதியதோடு, மக்களுக்கும் ஓர் சாஸனம் எழுதினார். இந்த போர்  என்னால் ஏற்பட்டதில்லை, யூதர்களால் மட்டுமே என்று கடைசி தருவாயிலும் முழக்கமிட்டார் என அழகாக முடிகிறது இந்த புத்தகம்.

ஓர் கலைஞன், கலை ரசிகன், நல்ல பண்பாளனின் பயணம் எப்படி மாறிப் போனது என்பதை அழகாக விவரிக்கிறது இந்த புத்தகம். தனது கடைசி நொடியிலும் தன் அம்மாவின் புகைப்படத்தினை கட்டிப்பிடித்தப்படி தற்கொலை செய்து கொண்டவர், பெண்களின் மேல் மிகுந்த மரியாதையை வைத்திருந்தவர். அவரின் யூத வெறுப்பு மற்றும் வெறி அவரின் வாழ்க்கைப் பாதையினை மாற்றியமைத்தது. ஒரு வேளை அவர் தனது முதல் 5 ஆண்டு கால ஆட்சிகாலத்தில் இறந்து போயிருந்தால், உலகம் ஓர் சாதனையாளராக அவரை போற்றியிருக்கும். எண்ணற்ற கண்டுபிடிப்புகள் அந்த காலத்தில் தான் ஜெர்மானியர்கள் செய்யப்பட்டது. வோக்ஸ்வேகன் கார் ஓர் சிறந்த உதாரணம்.

காலம் தான் எப்படி விளையாடுகிறது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும். ஓர் கலைஞன் இன்று ஒரு கொடுங்கோலனாகவும், ஈவு இரக்கமற்ற மனிதராகவும் சித்திகரிக்கப்படுகிறார்.

சரி இவரின் வாழ்க்கைப் பயணத்தினைப் பார்த்த நாம், இவரின் கையெழுத்துப் பயணத்தினையும் பார்ப்போம்.




தொடக்க காலத்தில் அவரின் கையெழுத்து ஏதோ தேடலில் இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் சோகத்தினை கொண்டிருந்தது. அது அவரின் ஆரம்ப கால அல்லது இளமை கால சோகமான வாழ்க்கை முறையினால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். அவரின் 12 ஆண்டுகால ஆட்சி கால கட்டத்தில் அவரின் கையொப்பத்தினை பார்த்தால், எளிதாக விளக்க முடியும். அவரின் கையெழுத்து மாறுபட்டுக் கொண்டேயிருந்தது. அது அவரின் எண்ணங்களின் பிரதிப்பலிப்பு. உயிரோட்டமிகுந்த அவரின் எழுத்துக்களில் உயிர் குறைந்து கொண்டே போனது பிற்காலத்தில். அவர் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக யூதப்போரில் பலியிட்டுக் கொண்டிருந்தார். தெளிவான கையெழுத்து அவரின் இறுதி கட்டத்தில் அவரின் தற்கொலை நாள் அன்று வெறும் புள்ளியில் முடிகிறது. மனதின் ஓட்டம், ஆட்டம் எவ்வாறெல்லாம் அவரின் கையெழுத்தில் பிரதிப் பலிக்கிறது என்பதை நன்கு காண முடிகிறது.

இன்னொரு நாளில் இன்னொருவரின் கையெழுத்தினை நாம் ஆராயலாம். நன்றி, வணக்கம். 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...