Sunday 11 September 2016

கர்ணன் - பாகம் 2


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.

ஒன்றைச் சுமந்து கொண்டு ஒன்றைத் தாங்கி வருவதே ஒவ்வொரு பிறவியும். ஒவ்வொருவரின் ஆன்மாவும் அலை போல் பாற்கடலில் அலைந்து கொண்டிருக்குமாம். அப்போது ஆன்மா முழுவதும் திருபாற்கடல் நாயகன் திருமாலின் அருட்பார்வையில் லயித்து சுகித்து இருக்குமாம்.

சில நேரங்களில் சில ஆன்மாக்கள் அந்த சுகித்த நிலையினைத் துறந்து அற்ப ஆசைக்கு மயங்கி ஓர் உருவம் எடுத்து உலகத்தில் ஜனிக்கும் என்று வேதவிளக்கம் கூறுகிறது.

அப்படிப் பட்ட அந்த ஆன்மா மறுபடியும் திருபாற்கடலில் வந்து கலந்து சுகித்திருக்க பல ஜென்மங்கள் ஆகும். அப்படி எடுக்கப்பட்ட ஓர் அற்புத பிறவி தான் நாமெல்லாம். ஆனால் இதை புரியாமல், தாங்கள் உயர்ந்தவர் என்றும் பிறரைத் தாழ்ந்தவர் என்றும் அற்பமான முறையில் சித்தரித்து இவர்கள் புரிந்திடும் திருவிளையாடல்களைப் பார்க்கும் போது நிச்சயம் சிரிக்கத் தான் தோன்றுகிறது.

எப்படி பிறந்தாலும் இப்பிறவியில் மனிதனாகத் தோன்றியதன் மகத்துவம் உணர்ந்து, ஆறறிவு ஜீவன் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட மறுப்பது கேலிக்கூத்தாக்குகிறது அவர்கள் பிறவியின் பயன்கள்.

அப்படித் தான் கர்ணன் தன் முற்பிறவியில் ஓர் சஹஸ்ர கவசம் கொண்ட ஓர் அரக்கனாகப் பிறந்தானாம். அவனை அழிக்க வேண்டுமென்றால் அவன் அணிந்துள்ள 1000 சட்டைப் போன்ற கவசங்களை அழித்து அதன் பிறகு அவனை அழிக்க வேண்டுமாம். அப்படி வரம் பெற்று அவன் செய்த அட்டகாசம் நிறைய. எல்லா தேவர்களும் நாராயணனிடம் முறையிட அவர் நரனாகவும் நாராயணராகவும் அவதரித்து, நரர்கள் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தனர், அந்த தவத்தின் மகிமையால் நாராயணர் அரக்கனோடு போரிட்டு அவன் ஒரு கவசத்தை அழித்தாராம். இப்படியாக 999 கவசங்கள் அழித்து முடிக்கும் போது அந்த யுகம் முடிந்து பிரளயம் வந்ததாம், அடுத்து வந்த யுகத்தில் கர்ணன் அந்த மீதியிருந்த ஒரு கவசத்தோடு அவதரித்தானாம். அத்தகைய கர்ணனை அழிக்கவே நர ரூபத்தில் அர்ஜூனனாகவும், கிருஷ்ணன் ரூபத்தில் நாராயணனும் அவதரித்தாராம். 12 ஆண்டுகள் வனவாசம் தான் அந்த 12 ஆண்டுகள் கடும் தவமாம்.

இப்படி சொல்கிறது நாரதர் கதைகள். என்ன செய்தாயோ அது இங்கேயே விட்டுச் சென்று அதை வேறொரு ரூபத்தில் நீயே எடுத்துக் கொள்ளப் போகிறாய். அப்படியிருக்கும் போது ஏன் மனிதா! உனக்குள் இத்தனை பேதங்கள், தான் என்ற திமிரும், தன்னை மிஞ்சி யாருமில்லை என்ற எகத்தாளம்.

உன்னை மிஞ்சி யாருமில்லை என்று எண்ணாதே. உனக்கு முன் தோன்றிய எத்தனையோ தலைமுறை இப்போது இல்லை. அவர்கள் ராஜா ஆகவும், மந்திரியாகவும், வீரராகாவும், மதியுகி மந்திரியாகவும் இருந்திருக்கலாம், ஆனால் இன்று நீ மனிதன் தான். அதை உணர்ந்து கொள். உன் பிறப்பும் அடுத்தவரின் பிறப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசமில்லை. அவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளப்பட்ட ரூபம் தான் இந்த ரூபம்.

ஒன்றிலிருந்து தான் மற்றொன்று தோன்றுகிறது. அதை உணர்ந்து செயல்படுங்கள். நீ எதை செய்கிறாயோ அதன் பயனைத் தான் அனுபவிக்கிறாய். நீ சுகித்திருக்க உன் உழைப்பைக் கொடுத்தாயானால் மட்டுமே நீ சுகித்திருப்பாய், அதை விடுத்து நான் உழைக்கும் தருணத்தில் சுற்றித் திரிவேன் ஆனால் அறுவடை நேரத்தில் மட்டும் வந்து நெல்கதிர்களை அள்ளிச் செல்வேன் என்றால் முடியுமா? யார் உழுவது, யார் விதைப்பது, யார் பராமரிப்பது, யார் நீர் பாய்ச்சுவது, யார் உரமிடுவது, யார் கதிர் அறுப்பது. இத்தனையும் செய்யாமல் அரிசி உணவருந்த முடியுமா?, சிந்தியுங்கள்.

நாம் நெல் விதைத்தால் வேறு முளைக்கப்போவதில்லை. அது போலத் தான் என்ன எண்ணத்தை விதைக்கிறோமோ அதை மட்டுமே அறுக்கப் போகிறோம். முற்பிறவியில் அசுரனாக அவதரித்த கர்ணன், கொடை வள்ளலாகத் திகழ்ந்த போதிலும், அவன் அந்த பிறவியில் அழியாமல் பிரளயத்தின் மகிமையால் அந்த பிறவியினை மறுபிறப்பில் தொடர்கிறான், அவனுடைய எண்ணங்களும் சேர்க்கையின் பயனால் கடுமையாக்கப்படுகிறது. பாண்டவர்களின் மூத்தவனாகப் பிறந்து அவனே அவர்களை எதிர்க்கும் வண்ணம் இந்த பிறவி அமைகிறது.

உங்கள் முற்பிறப்பை அறிய வேண்டுமானால், இந்த பிறப்பின் உங்கள் எண்ணங்களை அலசுங்கள், அதுவே உங்களைப் பற்றிய உண்மையினைச் சொல்லிவிடும். உங்களை உள்நோக்கிப் பாருங்கள், நீங்கள் எடுத்து வந்த இந்த பிறப்பு புரியும். எதற்காகத் தோன்றினோம் என்று புரியும். மனம் சஞ்சலமிடும், ஒரு நிலை படுத்த முடியாமால் தடுமாறும். நாம் குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சியில் தோன்றியவர்கள் என்பது ஒவ்வொரு முறையும் உணர்த்தப்படும். தாவி திரியும் மனதை ஒரு நிலைப் படுத்துங்கள். உள் நோக்கிப் பாருங்கள், நீங்கள் தெளிவாகத் தெரிவீர்கள். அமைதியாக உள் நோக்கும் போது அலை இருக்காது, ஆர்பரிப்பு இருக்காது. உண்மை புரியும். வந்த நோக்கம் புரியும். நோக்குவோம்......

---- தொடரும்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...