Friday, 22 April 2011

நண்பர்கள்.


முகத்தால் அறிமுகமாகி
முகவரியாய் ஆனவர்கள்...

2. 
உள்ளுக்குள் புதைந்திருக்கும்
உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உயர்வான உயிர்....

3.
தென்றலாய் வந்து
தெளிவாய் வருடிச் செல்வார்கள்
தெரியாமல் உள்ளுக்குள்ளே இருந்து....

4. 
எங்கோ பிறந்து
எவர் எனத் தெரியாமல்
என் உயிரானவர்கள்
என்னுள்ளே சுவாசமாய் பயணித்து...

5.
தொடர்பால் துண்டித்தாலும்
தொடர்பானவர்களை விட - உணர்வால்
தொட்டு வருடுபவர்கள் உள்ளத்தோடு..

நடை நேரம் (Walking)


ரோடெல்லாம் தார் 
ஆங்காங்கே பொட்டுகளாக 
என்றோ பெய்த மழை அரிப்பினால். 

இது ஒரு பொன்மாலை பொழுது 
இனிமையில்லை பாடலைப் போல்... 

இரவு குடை 
நட்சத்திரப் பொட்டிட்டு 
நிலவோடு உலா வந்தது. 

எனக்கும் அதற்கும் போட்டி 
எல்லா நாட்களிலும் 
என்னை வெற்றியிட்டது 
இன்று அழுதே 
இரவை நனைய வைத்தது.. 

ஏதோ அவசரம் 
வாகனங்களுக்கும் வாகனவோட்டிகளுக்கும்... 

சூரியனுக்கும் வாகனங்களுக்கும் 
நித்தம் நித்தம் போர் 
வெளிச்சத்தின் தாக்கம் 
எதில் அதிகமென்று.. 

சாலைக்குத் தானே வெளிச்சம் 
சாதனைக்கு இங்கு என்ன வேலை... 

பாதை மாறிய விளக்குகள் 
பாவம் பாதசாரிகள் 
பார்வையே பறிபோகும் - சில நேரம் 
வாழ்க்கையும் தான்... 

பாதசாரிகள் வழக்கம் போல் 
பாதை மாறிய பயணம் 
தார் ரோட்டில் உரிமையோடு... 

பாவம் பாதசாரிகள் 
பாதசாரிகளின் பாதையில் 
நடைபாதை வியாபாரிகள்... 

ஒலிப்பான் இல்லா வாகனம் 
ஒழிக்கப்பட்டு விடும் 
சக்கரம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை - இங்கு 
சத்தமில்லையென்றால் சங்கடம் தான்.. 

சாலைகள் 
வாகனங்களுக்கு மட்டுமல்ல 
பாதசாரிகளுக்கு மட்டுமல்ல 
மிருகங்களுக்கும் தான்... 

நாயோடு நடந்து 
மாடோடு சென்று 
மரணத்தை தினம் தொட்டுப்பார்க்கிறேன் 
வேகமான வாகனங்களுக்கு 
வேறு பாதையில்லாததால்... 

இப்படியான என் நடை 
பிரதான சாலை முடிந்து 
எங்கள் வீதி வந்தது... 

இது ஒரு தனிக் கதை... 

என் நடை பயணத்தால் 
கொழுப்பு குறைந்ததோ இல்லையோ 
பிரஷர் கூடியது 
நான் மாத்திரையைத் தேடி.... 

பிரிவே தெரியாது...


தூரத்தேப் போனாலும்
தூர்வாரும் நினைவுகொண்டு
ஆழமிடும் அன்பினை
அலை அலையா எண்ணங்கள்
தினம் தினம்
மனதில் ரீங்காரமிடும்....

சண்டையிட்ட நாட்களை
சத்தமின்றி சிந்தித்து
மனதிற்குள் சிரித்து
வெளியில் சத்தம் வரும்...
மௌனமாய் மொழிகள் பேசி
மௌன கீதங்கள் பாடும்....

சிரித்த நக்கல் பேச்சு
கும்மாளமிட்ட கேலி பேச்சு
கிண்டலாய் போன நொடிகள்
சினம் வந்த வேளைகள்
அப்பப்பா சிரித்தே வெரட்டிய நேரங்கள்..
எல்லாம் சேர்ந்து வரும்
பிரிவே தெரியாது
பிரிந்தால் தானே.

வேகமாக ஓடிவா
நிழலோடு ரசித்ததை..
நிஜத்தோடு பகிர

பிச்சை


வெறும் திருவோட்டில் 
தினம் வாழும் உத்தமன்... 

பிச்சைப் பாத்திரத்தில் 
எது விழுந்தாலும் சாப்பிடுவான் 
பணம் தவிர.... 

இரண்டு கண்கள் 
இரண்டு கால்கள் 
இரண்டு கைகள் 
வஞ்சனையில்லை எதிலுமே 
இருந்தும் வெட்கமின்றியேந்திடுவான்.... 

தன் மானம் விற்று 
தன்னம்பிக்கையும் விற்று 
தரமின்றி வாழ 
தட்டினை ஏந்திடுவான்... 

கேட்டால் 
இந்தியாவின் குலத்தொழிலாம் 
தன்னை மட்டுமல்ல 
நம்மையும் அவமதிக்கும் செயல்.. 

இனி ஒரு விதி செய்வோம் 
தட்டு ஏந்துபவனை 
தட்டி வைப்போம் - தேவையெனில் 
தடி கொண்டு துரத்துவோம் 
தடையில்லாமல் உழைக்க.... 

பிச்சையிடாதீர்கள் 
பாத்திரம் அறியாமல்...

சிலைகள்


உளியோடு உறவாடி
பாறைகள் சிலையானது
வியாபார அரசியலோடு
ஒப்பந்தம் போட்டது
வீதிக்கு ஒன்று விலாசமானது...

முழுமையாய் வாழ்ந்தவருக்கு
முகம் மட்டுமாய்
மார்பு வரை
என்ன கொடுமை இது - அவர்கள்
உடலை மட்டும் குறைக்கவில்லை
உயர்வான சிந்தனைகளையும் தான்...

ஆங்காங்கே
கல்வி தந்தைகளுக்கும் உருப்பெற்றது.

வித்தை பல கற்று
சாதித்த கூட்டத்திற்கு
சிலைகள் எங்கேனும் உண்டோ
ஒரு சில விதிவிலக்காய்....

சிலைகள்
காக்கை எச்சமிட
சூரியனும் சந்திரனும் தழுவிட
மழை குளியாட்டிட
புயல் துடைத்துவிட
ஆடை இருந்தும்
நிர்வானமாய் தெருக்களில்..

சிந்தித்துப் பாருங்கள்
தலைவர்கள் சிந்தனைகளை
திட்டங்களாய் செயலிடுங்கள்
திட்டமே சிலையாகும்
மக்களாய் உருவமெடுத்து
காக்கை எச்சமிடாமல்....

உடல் தானம்


ஊர் கூடியது 
நாட்டாமை நடுநாயகமாய் 
பெரியவர்கள்(?) மத்தியில் 
சில்லறைத் திருடன் 
ஹவாலாக்களின் விசாரணையில் 
சிறையிலடப்பட்டான் 
பின்னர் தூக்கிலிடப்பட்டான் 
குற்றங்களைப் பட்டியிலிட்டே... 

ஊரே திரண்டது 
உயர் அதிகாரிகள் சங்கமிக்க 
ஊர்வலமாய் அவன் 
வசைப் பொழிய வில்லை 
பூக்களால் தூக்கப்பட்டான்... 

உயிர் உள்ள மட்டும் 
உலகையே உறவறுத்தவன் 
உடல் தானத்தால் 
உன்னதம் கொண்டான் - பலர்
உள்ளம் கொள்ளை கொண்டான்...

குடிக்காதே!!!


மது உள்ளே சென்று 
மதியிழக்கச் செய்கிறது - உன்னை 
மயக்கிச் செயலிழக்கச் செய்கிறது... 

உன் 
மறுபக்கம் பட்டியலிட்டு 
முதற்பக்கம் மறைக்கிறது... 

உள்ளே சென்று 
உறுப்புகளோடு உறவாடி 
உள்ளேயேக் கொல்கிறது... 

உன்னை மட்டும் கொல்லாமல் 
உறவுகளையும் கொல்கிறது 

உலைக்கு வினைவைத்து 
உளருவதால் மானம் கெட்டு 
ஊரை இரண்டாக்கும் குடிக்கு 
உத்தமரே அடிமையாகலாமோ 
தயவு செய்து குடிக்காதே!!! 

பிரியாவிடை


பிரிவென்று சொல்லி 
விடைபெறவில்லை 
தொடரட்டும் பயணமென 
விலகிச் செல்கிறேன்... 

விடியலற்ற நாட்களை 
உன்னதமாய் பட்டியலிட்டு 
விடியலையே சபிக்க 
விரும்பாமல் விலகுகிறேன். 

உறவுகளே! 
கண்ணீரில் கசங்கும்போது 
எந்நீர் செந்நீரானது 
என் இதய கடிகாரம் 
முட்களை முட்களால் நகர்த்தியது... 

மனம்! 
ஓர் மந்திரச்சாவி 
தந்திரங்கள் பலசெய்து 
சோகத்தையேச் சுகமாக்கியது 
வாழ்க்கைப் பயணமாக்கியது. 

என் இதயங்களே! 
முள்ளான வேதனைகளை 
முடுக்க வேண்டாமென 
முற்றுப்புள்ளி வைக்கிறேன் 
தொடரட்டும் பயணமென 
விலகிச் செல்கிறேன்..

இது என்ன அவலம்?


கா கா கா 
ஒரு வரவேற்பு மொழி 
உலகெங்கும் 
நாள் தொடங்கும் மொழி.... 

கூ கூ கூ 
ஒரு இன்னிசை மொழி 
உலகெங்கும் 
இசையின் தொடக்க மொழி 

வள் வள் வள் 
ஒரு காக்கும் மொழி 
உலகெங்கும் 
நன்றியோடு காக்கும் மொழி 

மனிதா 
மொழி பல பேசி 
இனம் பல கொண்டும் 
சைகையில் முடிகிறதே 
நாடு பல கடந்தால் அல்ல - இன்று 
ஊர் பல கடந்தே 
இது என்ன அவலம்... 

விழித்துக் கொள் 
மிருக மொழி பொதுவாகும் முன்... 

மனம் மறு கனவிற்கு


நானும் நீயும் 
பேசிய வார்த்தைகள் 
நாளும் பொழுதும் 
மறவாமல் அசைபோட 
முடியும் முன் 
சூரியன் ஒளிப் பொட்டாய் 
இருள் மேகத்துள்.... 

பொழுது புலர்கிறது 
பொன்னான நினைவுகள் 
பொற்குவியலாய் குவிந்திருக்க 
மனம் உன்னை நினைத்தே 
கடனாய் காலை கடமைகள்.... 

கடமைகளுள்ளும் நீயே 
கற்சிலையாய் நீயே 
கனவும் நினைவும்... 

உன்னை சந்தித்த ஒரு விநாடி 
மனம் மறு கனவிற்கு 
அஸ்திவாரம் போடுகிறது 
நேற்றைய கனவுகளின் மேலே....

பெண் என்றுமே சகாப்தம்...


ஆறாத வடுவென்றும் 
தீராத சோகமென்றும் 
நீர் தவளையாய் ஓலமிட்டால் 
நீர்த்துவிடும் உண்மையன்றோ 
பொய்யான உலகுதனில்.... 

வேர் விட்டு உள்ளோடி 
மனமும் அதில் தள்ளாடி 
முட்களிலே கலந்தாடி 
வலிக்குது மன்மென்றால் 
யார் சொல்ல நீதியுனக்கு 
முட்களோடு உறவாடியதற்கு... 

விரும்பி பிரியவில்லை 
விரும்பாமல் விலகிச் செல்கிறேன் 
தொடரட்டும் பயணமென 
கட்டாய உலகில் 
கண்ணியின் கதையினை - உண்மையாய் 
கதைத்திடுவோர் யார் உளர்... 

பெண் 
என்றுமே சகாப்தம்...

பெண்களே தடையிடுங்கள் பிரசவிப்பதை...


அம்மாவும் அப்பாவும் 
அப்பாவும் அம்மாவும் 
அரவணைப்பில் ஆரம்பம் 
அழகான வாரிசு... 

ஆணாகப் போனதால் 
மேலும் இங்கு ஆனந்தம் 
புரியாமல்... 

அப்பனுக்கு வேலையில்லை 
அம்மாவோ மாடாகத் தேய்கிறாள் 
அம் மாட்டுடன் தேய்கிறாள்... 

மாடு சும்மாவா 
பால் கொடுக்கும் 
புல்லுக்கே வழியில்லை 
புள்ளைக்கு பால் எங்கிருந்து... 

புட்டிப் பால் கொடுக்க 
வஞ்சகமா அவளுக்கு 
புட்டிப் பால் 15ரூபாய் 
எங்கு போவாள் அவளுமே... 

அழுது அழுது 
கண்ணீரே பாலாய் ஆனது 
அதுவும் சுரக்க 
அந்த உடம்பில் திராணியில்லையே.... 

அவளும் என் செய்வாள் 
அரசாங்கத் தொட்டிலிலே 
அவனை விட்டு வந்தால் 
அவள் புருஷன் 
அடுத்த பிள்ளைக்கு 
அஸ்திவாரம் போடுறானே... 

பெண்கள் பெற்றெடுத்துக் கொண்டிருந்தால் 
ஆண்கள் உருவாக்கி கொண்டிருப்பார்கள் 
பெண்களே! 
தயவு செயது 
தடையிடுங்கள் பிரசவிப்பதை 
தரம்கெட்ட ஆண்களுக்கு,,,,

சிசு கொலை (பெண்ணானதால்)


ஆண் பால் 
பெண் பால் 
இரு பால் 
ஈர்ப் பால் சேர்கிறது 
ஒரு பால் பிறக்கிறது 
பெண் பால் ஆனதால் 
கள்ளிப் பால் கொடுக்கலாமோ 
தாய்ப் பால் கேட்கையிலே.... 

தனிமை!!!!


தனிமை இனிமையானது 
சில நேரம் கொடூரமானது 
எண்ணம் அலைபாயும் 
மனம் அடங்காமல் 
திசை பாயும்...

தக்க தருணமென 
கண்கள் கூட 
காட்சியினைப் பட்டியலிடும் 
நீர்க்காமல் உள் மனதை 
நீர்த்து விடும்.

மனம் 
உள்ளத்தில் புதைக்கின்ற வேதனைகளை 
வெளிச்சமிடும், திரையிலிடும்,,,

உள்ளேயே அழுகவிட்டு 
வெளியே சிரிக்கவிட்டு 
பைத்தியமாக்கி விடும்...

நண்பர்களே! 
தனிமை வேண்டாம் 
இனிமை இல்லாத போது...

தாழ்தல் குற்றமல்ல


வேர் 
கீழே போகப் போக 
பூவாய், கனியாய் 
மேலே வருகிறது....

உன்னைத் தாழ்த்தினால் 
நீயும் மலரலாம்....

தாழ்தல் குற்றமல்ல 
அடிமையாகாமல்... 

கனவு காணுங்கள்....


பகலும் தூங்கி 
இரவும் தூங்கினான்
பொழுது மட்டும் விடிகிறது 
கனவுகளே இல்லாமல் - இதில் 
தன் குறை எங்கே என்றான்????

கனவு வந்தால் தானே 
கனவு காண 
என்றான் விரக்தியுடன் 
"கனவு காணுங்கள்" பொய்த்ததோ - இல்லை 
கலாம் பொய்த்தாரோ என்று....

நண்பனே! 
நல் எண்ணம் விதைக்கவில்லை 
முயற்சி எனும் உரமில்லை - அதனால் 
கனவும் முளைக்கவில்லை 
இதில் வருந்த ஒன்றுமில்லை...

விதையான எண்ணங்கள் 
உறங்க விடுவதில்லை 
விருட்சமாய் வளர 
கனவாய் மொட்டு விடும்...

சாதித்தவர்கள் பட்டியலிட்டால் 
சாதனைகள் அவர்கள் கனவுகள் 
பல வெற்றி கண்டுபிடிப்புகள் 
கனவாய் மொட்டிட்ட நொடிகள்..

கலாம் என்றுமே பொய்த்ததில்லை 
கனவு காணுங்கள் 
உறக்கதில் இல்லை.... 

சுனாமி


சிற்றலையால் நோட்டமிட்டு 
பேரலையால் வாரிக்கொண்டது... 

கடல் 
உள்ளே நீர் வாங்கினால் 
உள்ளம் திகிலடைகிறது 
தாகம் தீர்க்கவோ - இல்லை 
உயிர்த் தேகம் பறிக்கவோ..

சிற்றலையாய் வரும் போது 
சினுங்கியது காலோரம் 
பேரலையாய் வந்த போது 
மொத்தமாய் பேசியே 
சினுங்கினர் உறவினர் ஊரெல்லாம்.... 

அலை 
ஒவ்வொரு முறையும் 
ஒரு செய்தி சேகரித்து 
யாரிடம் சொன்னாயோ 
பேரலையாய் வந்து 
மக்கள் சேதி ஆனார்களோ! 

அலையே 
சின்னமாய் வந்தபோது 
செல்லமாய் வருடினாயே 
என்ன பாவம் செய்தோம் 
பேரலையாய் வந்து 
எங்களை காவு கொண்டாயே.... 

அலைகள் 
சுகமானது சிறிதானால்........... 

கடல் நீண்டதனால் 
வாரியதன் உருவமில்லை 
ஊர் வந்து வாரியது 
பெயர் மட்டுமே மிஞ்சியது... 

ஆழிப் பேரலை (சுனாமி)


ஆழிப் பேரலையோ இல்லை - எம்மை
ஆழம் பார்க்கும் பேரலையோ - நீ
ஆடிச் சென்ற பின்
ஆரவாரமின்றி அடங்கிவிடுவோம் என
ஆசை கொண்டாயோ....

விட்டுச் சென்ற சுவடுகளில்
விடுகதைப் போல்
விடைத் தேடுவோம் என நினைத்தாயா - இல்லை
வினாக்களை விட்டு விட்டு
விதியென உறங்குவோம் என நினைத்தாயா...

நீ
புரட்டிப் போட்ட குவியல்களில்
புதைந்து போனது 
புதுமைகள் மட்டும் தான் - எங்கள்
புத்திகள் அல்ல 
புத்துயிர் பெறுவோம் - பல
புதுமைகள் மீண்டும் மீண்டும் படைப்போம்...

நீ
அலையாய் வந்து
அழைத்துப் போன உயிர்களுக்கு
அஞ்சலி செலுத்தியே - உனக்கு
அமர்ந்து கவி பாடுவோம் - நீ
ஆரத்தழுவிய கல்லறையிலிருந்து...

நீ
விட்டுப் போன தடையங்களை
விடாமல் பிடித்துக்கொண்டு
விடியலுக்கு வெளிச்சமிடுவோம்
விரயமானப் பொருட்களை
விதி என நோகாமல் - புது
விளைச்சலுக்கு உரமிடுவோம்..

ஏ சுனாமியே!!!!
உன் தடையங்களே
எங்கள் அரிச்சுவடி...
நீ
எத்தனை முறை அழித்தாலும்
எப்படி வந்து அழித்தாலும்
விடாமல் மலர்வோம்
உனை மறுபடியும் வரவேற்க
உனை ஆரத்தழுவி
பாடம் புகட்ட....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...