Thursday, 20 August 2015

உறுதுணை யார் உளர் ஈசனே

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
உலகத்தோர் உலாவர வீதியிலே - உனையன்றி
உறுதுணை யார் உளர் ஈசனே
உன் தயவின்றி கரையேற்ற எனையுமே!!!
சொல்வைத்து சொல் பேசும் உலகில்
சொல்லில்லையே நாநயம் சித்தி பெற
சொல்லும் விலையானதோ சொல்லாமல் போனதால்
சொன்ன சொல் செல்லரித்துப் போனதோ!!!
உள் நாக்கில் சொல் வைத்து
உள்ளுக்குள்ளே நஞ்சும் சேர வைத்து
உள்ளேயே பற்றி எரிய நெருப்பாய்
உமிழும் வார்த்தையில் தேன் வைப்பரோ?
எள்ளி நகையாடும் எத்தர்கள் சூழ்ந்திட
எண்ணி எண்ணி நொந்து போகிறேன்
எட்டும் தொலைவில் எட்டாத கனவுகள்
எனை நிறுத்தி கடந்து சென்றதோ?
தட்டுத் தடுமாறி காலூன்றும் வேளையிலே
தடுக்கி வீழ்த்திடவோ தரம்கெட்ட மானுடர்
தந்திரம் பல செயது தாழ்த்திடுவர்
தள்ளாடும் வேளையிலே கறைச் சேர்த்திடுவரோ!!!
மதி கெட்ட மானுடர் நிலைபெற
மந்தி கூட்டமது புத்தி பெற
மற்றவரும் மானுடரெனச் சித்தி பெற
மங்கா ஈசனே உக்கிர நடனமிடு
நம்பி நம்பி நொந்து போனேன்
நம்பியதோர் குற்றமென உணர்ந்து போனேன்
நல்லதாய் உலகிற்கு நயம்பெற சொல்வாயோ
நலம் காக்கும் ஈசனே ருத்ரமிடு
பொய்யுரைக்கும் கயவர்களை வீழ்த்தி விடு
பொல்லா உலகில் மாயமதை கலைத்து விடு
பொங்கியெழு பொசுங்கட்டும் தீதுகள் தீயிலிடு
பொன்னார் மேனியனே உடனே ருத்ரமிடு....
உனை நாடி பாடுகிறேன் நானுமே
உற்றத் துணையே உளமெல்லாம் நீயே
உய்விக்க வருவாயோ உள்ளொளியாக
உந்தன் பாதம் பணிகிறேன் நமசிவாயனே!!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...