Thursday, 20 August 2015

வாட்டும் முதுமை வந்ததோ,...

வாட்டும் முதுமை வந்ததோ?...
இரண்டற கலந்தன உயிர்கள்
இனிதாய் ஓர் உயிரின் ஜனனம்
இல்லறத்தின் பரிசாய் வந்துதித்தாய்
இன்பத்தின் விளைவான இன்பமே..
அழகாய் வந்துதித்து குழந்தையானாய்
அறுவயது வரை தாய் சேயானாய்
அன்பில் வளர்ந்து அறிந்து கொண்டாய்
அன்னையும் அப்பனையும் உறவையும் உற்றாரையும்...
அகவை வளர அறிவு வளர்ந்ததோ
அந்த ஓருயிர் அண்டத்தின் வாழ்வுதனை
அச்சமின்றி கடந்திட அன்பாய் பயின்றதோ
அழியா செல்வம் கல்வி தனை...
ஆசான் உரைக்க எழுத்தறிவினை
ஆர்வமாய் கற்றதோர் குழந்தை
ஆண்டு உருண்டோட அகவை யும்
ஆனதோ குழந்தையும் பதினெட்டு...
கல்வியறை தந்ததோர் பாடம்
கடந்து வந்த நாட்களோர் பாடம்
கடந்தோர் சொல்லித் தந்த பாடம்
கடக்க துணிந்ததோர் பாடம்
கற்பனையில் வாழத் துடித்ததோர் பாடம்...
கட்டளையாய் சொன்னதை தான் படித்து
கடமைக்கு கற்பித்ததை தானும் படித்து
கலியுக நிர்பந்தமென மற்றதை படித்து
கற்றவையும் கல்லாததையும் தெரியாமல் படித்து..
இப்படியாய் இளமை கல்வி கடக்க
இவ்வுலகில் தோணி தனை கரைசேர்க்க
இச்சை எதுவாகினும் வந்ததோர் தொழில் ஏற்று
இன்பமும் துன்பமும் மெருகேற்ற
இளமை உருண்டோடியது அலுவல் துணையோடு...
இல்லறமே நல்லறமென துணை தேடி
இல்வாழ்க்கை தொடங்கியதோ ஓருயிரோடு
இரு உயிர் கலந்து மறுபடியும்
இன்னோர் உயிர் ஜனித்திட சக்கரமாய்...
வயதொன்று கூட வாலிபம் மறைய
வயதொத்த பிணிகள் ஒவ்வொன்றாய்
வந்து உடல் தனை தாக்க
வருந்தா மனமும் வலுவிழக்க....
நாற்பது வயதில் நாளொரு தேசம்
நாயாய் அலைந்து பணமென நினைத்து
நாதனை மறந்து நாளும் உழைத்து
நாராய் கிழிந்து உடல் தளர்ந்து...
நாதிக்கு வழி தேடி நயமாய்
நாறும் உலகில் மனையும் குடிலும்
நாட்டார் வாய்பிளக்க தினுசாய் அமைத்து
நான் எனும் அகந்தை வளர்த்து...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நான் தான் என வளர்ந்து
நாம் நிரந்தரமென ஆசைகொண்டு
நாறும் உடலில் பற்று கொண்டு...
அழகாய் உருமாற்றி அதற்கோர் பெயரிட்டு
அன்பாய் உற்றார் உறவிட்டு
அனுதினம் ஆசை தீயை வளரவிட்டு
அங்கம் தங்கமென ஜொலிக்க விட்டு
அட்சரம் பிறழாமல் பொய்யுரைத்து
அடங்கா மனம் கொண்டு வாழ்ந்து
அகவை அறுபது வந்து
அலை அலையாய் வாழ்வுகடந்து...
முன்னுழைத்த உடல் தளர்ந்து
முடி நரைத்து கூன் வந்து
முதுகு தண்டு தளர்ந்து
முட்டியும் சோர்ந்திட ...
மனம் அன்று போல் இன்றும்
மயங்கும் மயக்கும் சொல்லும்
மறவா நினைவுகள் தொடர
மறையும் அழகு மறைய
வாடி வதங்கின சதைகள்
வரிவரியாய் கோடிட்டன முகம்
வறண்ட தோல் வலுவிழக்க
வாய் குளறி வரி மறந்து
வந்த சொல் வலுவிழந்து
வரும் சொல் வரமறுத்து
வார்த்தை தடுமாறி உளறி
வாய் தடுமாறி மூச்சுமிழந்து
கண் பார்த்த காட்சி கரைய
கண்டிட்ட காட்சியெல்லாம் மங்க
கண் இமை திறவாமல்
கண்ணாலே காண இயலாமல்
வாய் கொண்டு அழைத்தவரை
வாய் திறந்தும் வார்த்தையின்றி
வா என கையழைக்க
வாராது என நினைத்த
வாடா இளமை முடிந்து
வாட்டும் முதுமை வந்ததோ,...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...